வலைப்பூக்கள் ஒருவருக்கு diary போல இருக்கிறது. அவரவர் கருத்துக்கள் பதியப்படுகின்றன. ஆரம்பக்காலங்களில் அவர்களின் கருத்துக்களை மற்றவருக்கு பரிமாறுவதில் ஆர்வம் இருந்து, அறை கூவியிருக்கலாம். இதைப் பற்றி பாரா கூட தன்னுடைய 9 கட்டளைகளில் ஒன்றாக, நகைச்சுவையாக, செய்யாதீர்கள் என அறிவுறுத்தியிருப்பார்.
வலைப்பூக்கள் பரிணாம வளர்ச்சி பெற பெற அதன் முகமும் மாற ஆரம்பித்தன. 'சொந்த கதை சோகக் கதை' மட்டும் இல்லாமல், தங்கள் துறை, ஆர்வம் சார்ந்த பகுதிகளைக் குறித்து விரிவாக செய்திகளைப் பரிமாற ஆரம்பித்தார்கள். இது தான் என்னைக் கவர்ந்த மிகப் பெரிய அம்சம் என்பேன். இலக்கியம், மார்க்கெட்டிங், விளையாட்டு, சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, சரித்திரம் போன்ற பல துறைஞர்களின் கருத்துக்கள் வலைப்பூக்கள் மூலமாகக் கிடைக்கின்றன. ஆரோக்கியமான விவாதங்கள், பரிமாற்றங்கள், நகைச்சுவைகள் போன்றவை எளிதாக உலகத்துக்கு அளிக்க முடிகிறது. நிச்சயம் இதில் 15 நிமிட புகழ் இல்லை.
பின்வருபவை நான் வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள். இதில் எவர்க்கும் முன்னுரிமையோ அல்லது மற்ற வலைப்பூக்கள் தரமாக இல்லை என்றோ அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்தவைகளையே நான் பட்டியல் இட்டுள்ளேன்(வரிசைகள் தரத்தை நிர்ணயிக்கவில்லை, தரவரிசை, படிப்பவர் சுதந்திரம்):
-சாரு நிவேதிதா: விகடன் 'கோணல் பக்கங்கள்' பகுதியிலிருந்தே, இவரை எனக்குப் பிடிக்கும். தான் கொண்டுள்ள சிக்கலான கருத்துக்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம், சமூகம் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் போன்றவற்றை தயங்காமல் பரிமாறிக்கொள்பவர்.
-பாரா: சாரு நெருப்பு என்றால், இவர் குளிர். எந்தக் கருத்தையும் ஆணித்தரமாக, அதே சமயம் அடக்கமாக, நகைச்சுவையாக எடுத்து வைப்பதில் கில்லாடி.
-பத்ரி:அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு, அறிவியல் கட்டுரைகள் இவரது ஸ்பெஷாலிட்டி. தீர்க்கமாக ஆராய்பவர்.
-ராஜ்குமார்:கவிதைகள் இவரது பலம். இவரது 'குசேலர் நண்பர்' பற்றியக் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று.
-பி.கே. சிவக்குமார்: திண்ணையில் இவர் கட்டுரைகள் நிறையப் படித்திருக்கிறேன். நாட்டு நடப்பு இவரது திறமை.
-அருண் வைத்தியநாதன்:பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவைத் ததும்ப எழுதுவதில் கில்லாடி.
-ஈழநாதன்: இலங்கை இலக்கியவாதிகளைப் பற்றி இவர் எழுதும் தொடர் மிக்க பயனுள்ளது. வலைப்பூவாளர் வந்தியதேவனுடன் இவர் நிகழ்த்திய 'இந்திய அமைதிப்படையின் செயல்கள்' பற்றிய எதிர்வினைகள் ஆரோக்கியமாக ஆரம்பித்து, தனிமனிதத் தாக்குதலில் முடிந்தது சோகம்.
-வந்தியத்தேவன்: இவரின் கப்பல் கட்டுரைகள் மிகப் பிரசித்தம். அதைத் தவிர 'இந்திய அமைதிப் படை' பற்றிய கட்டுரைகளும் உணர்வு/அறிவுபூர்வமானவை.
-தேசிகன்: சுஜாதாவுக்காக வலைப்பக்கம் ஆரம்பித்து, அவரின் எழுத்துக்களைப் பதித்தவர். சுஜாதா சாயலில் சிறுகதைகள் எழுதினாலும், திருவரங்கத்தைப் பற்றிய இவரின் பதிவுகள் மிக முக்கியமானவை.
-ரூமி:சிறந்த எழுத்தாளர். இஸ்லாம் பற்றிய தெளிவான கட்டுரைகள் பல எழுதுகிறார். மொழிப்பெயர்ப்பு பற்றிய இவரது கட்டுரையைப் படித்து விட்டு, நாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.
-எஸ். இராமகிருஷ்ணன் : தமிழை ஆளத் தெரிந்தவர். திருட்டு நடந்த வீடு, தோல் பாவைக் கூத்து போன்ற கட்டுரைகள் மனதில் நிற்பவை.
-வெங்கடேஷ்: 'நேசமுடன்' என்ற மடல் இதழில் இவர் பதியும் செய்திகளின் வீச்சு, பொறாமைக் கொள்ள வைக்கும். இவரின் கதைகளைப் படித்ததில்லை.
இவர்களைத் தவிர்த்து, ரஜினி ராம்கி, அனாமிகா, சித்ரன், காசி(தமிழ் மணம் http://www.thamizmanam.com வலைப்பூக்கு சொந்தக்காரர்) போன்றோரின் வலைப்பக்கங்களில் பல உபயோகமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மற்றவர்களின் வலைப்பூக்களுக்குள் இப்போதுதான் போக ஆரம்பித்திருக்கிறேன்.
என் முடிவில் வலைப்பூக்கள் உதிரப் போவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இதன் பரிணாம வளர்ச்சி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லலாம். அவை இலக்கியப் பத்திரிக்கைகள் வெகு ஜனங்களுக்குச் செல்லாத குறையை நீக்கிவிடும்.
2 comments:
சாரு நிவேதிதா வலைப்பதிக்கிறாரா என்ன? சந்தா பெற்று கொண்டு நடத்தும் அவரின் கோணல் பக்கங்களை எப்படி வலைப்பதிவுகளுடன் சேர்க்க முடியும்? அது அவரது தொழில்முறை வலைதளம். வலைப்பூ அல்ல!
நன்றி திரு. ராஜா,
சாருவின் வலைதளம் சந்தா வாங்கி நடத்துவதாகத்தான் இருந்தது. ஆனால் போதுமான வரவேற்பு இல்லாததால், இன்னும் இலவசமாகவே படிப்பவருக்குக் கிடைக்கிறது. மற்றபடி, தாங்கள் சுட்டியபடி அது வலைப்பூ அல்ல. திருத்தியமைக்கு நன்றி.
Post a Comment