Thursday, October 28, 2004

86 வருடங்கள்

86 வருடங்கள்...

3 தலைமுறைகள் 'ஏன்?' என ஒவ்வொரு அக்டோபர் மாதமும் ஏக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வி. Boston Redsox பேஸ்பால் அணியின் நேற்றைய மகத்தான வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். மேலே செல்வதற்கு முன்...

பேஸ்பால் அமெரிக்காவின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்று. கிரிக்கெட்டின் ஒன்று விட்ட சகோதரன். இரு அணியினருக்கும் தலா 9 இன்னிங்க்ஸ். ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் மூன்று வீரர் வரை ஆட்டம் இழக்கலாம். நான்கு புள்ளிகளை(base) ஒரு வீரர் கடந்தால் ஒரு ஓட்டம். கிரிக்கெட்டில் 6 ரன்கள், இங்கே 1 முழு ரன்(Home Run). அப்போது, மற்ற மூன்று புள்ளிகளில் எத்தனை வீரர் இருந்தனரோ அவ்வளவு ஓட்டங்கள்.

அமெரிக்காவில் இந்தியாவைப் போல் மாநில அணிகள் கிடையா. பணம் படைத்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் அணி அமைத்துக் கொள்வார்கள். பல மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும். இறுதிப் பந்தயங்கள் ஒரு போர்க்களம் போல நடைபெறும். சில அணிகள் பரம எதிரிகளாக மோதுவர்.

Boston Redsox-ம், Newyork Yankees-ம் அவ்வாறான மனநிலை கொண்ட அணிகள். நம் இந்திய, பாகிஸ்தானிய அணி மோதலைப் போன்றவை. சமயங்களில் அடிதடியில் முடியும். Newyork Yankees 27 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது(அமெரிக்க/கனடா அணிகள் விளையாடுவதை 'உலகக் கோப்பை' என அழைத்துக் கொள்வர் :) ) . Boston Redsox இறுதியாக வென்றது 1918-ல். Yankees -ம் அதே பகுதியில் இருப்பதால் ஒருவரை வென்றே மற்றவர் அடுத்த சுற்றுக்கு செல்ல இயலும். இதுவரை Yankees கையே மேலோங்கி இருந்தது. இந்த வருடம் வரை.

World Seriesக்குச் செல்லும் போட்டியில் இவ்வருடமும் Yankees -ம், Redsox -ம் மோத ஆரம்பித்தன. மொத்தம் ஏழு போட்டிகள். நான்கு போட்டிகளில் வெல்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் மூன்றுப் போட்டிகளில் Yankees மிகச் சுலபமாக வென்று, நான்காவது போட்டியிலும் இறுதி இன்னிங்ஸில் மூன்று Redsox வீரர்கள் அவுட் ஆனால் போதும் என்ற நிலையில்தான் 'நமக்கும் மேலே ஒருவரடா' என்ற வரி உண்மையாக ஆரம்பித்தது.

(தொடரும்)

2 comments:

Boston Bala said...

அருமையாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். அடுத்த பகுதி எப்பொழுது. விதிகளையும் இன்னும் கொஞ்சம் விரிவாக அவ்வப்பொழுது கொடுக்க வேண்டும். நன்றி :-)

Raj Chandra said...

பாலா, மிக்க நன்றி. முடிந்தவரை தினமும் ஒரு பதிவு செய்ய உத்தேசம்(சென்ற மாதம் பிறந்த என் பெண் அநுமதித்தால் :) ). விதிகளையும் எளிமையாக அவ்வப்போது சொல்ல முயற்சிக்கிறேன்.