Tuesday, November 16, 2004

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

தற்சமயம் சி. புஸ்பராஜாவின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' படித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கை இனக் கலவரத்தைப் பற்றி நான் படிக்கும் முதல் புத்தகம். இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை நான் பா. ராகவனைப் போலத்தான். இது வரை ஒரு யோக்கியமான கருத்துக்கள் எதையும் படித்ததில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும், அயோக்கியத்தனமான அரசியல் விளையாட்டுக்களிலும், ஊடகங்களின் விட்டேத்தியான அனுகுமுறையும் இப் பிரச்சினையின் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில்லை.

இவ்வகையில் சி. புஸ்பராஜாவின் புத்தகம் என்னளவில் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். முன்பு படிக்க முயன்ற William McGowan ன் Only Man Is Vile: The Tragedy of Sri Lanka ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் திமிர்த்தனமான பார்வையில் இருந்ததால், பாதிக்கு மேல் அப்புத்தகத்தை படிக்க இயலாமல் தூக்கி எறிந்துவிட்டேன். அனிதா ப்ரதாப் எழுதிய Island of Blood: Frontline Reports from Sri Lanka, Afghanistan and Other South Asian Flashpoints புத்தகமும் சொந்த கதை பேசி ஆயாசம் கொள்ளவைத்தது.

நான் படித்தவரை, சி. புஸ்பராஜா வரலாற்றை மிகத் தெளிவான முறையில் எழுதிச் சென்றுள்ளார். படித்து முடித்த பின்பு பல கேள்விகள் எழும். அப்போது விரிவாக எழுதுவேன்.

இவரைப் போன்று மற்றவர்களும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனரா? அவை பற்றிய விவரங்களைத் நண்பர்கள் தந்தால், உதவிகரமாக இருக்கும்.

5 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

அருளர்( ஈரோஸ் போராளி)எழுதிய லங்காராணி
ராஜனி திரணகம,ராஜன் கூல்,சிறிதரன்(யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர்கள்)எழுதிய முறிந்த பனை
கோவிந்தன்(நோபேட்) எழுதிய புதியதோர் உலகம்
அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கை.
ஷோபாசக்தியின் கொரில்லா( இது உண்மைச்சம்பவங்களோடு புனைவுகளையும் சேர்த்து எழுதப்பட்டது)

ஈழநாதன்(Eelanathan) said...

http://djthamilan.blogspot.com/2004/11/blog-post.html
இந்த இனைப்பு ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் பற்றிய ஏறக்குறைய நேர்மையான விமரசனம் ஒன்றை உங்களுக்குத் தரக்கூடும்

Badri Seshadri said...

புஸ்பராஜா புத்தகம் நானும் படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மிக மோசமான முறையில் எழுதப்பட்ட, எடிட் செய்யப்பட்ட புத்தகமாதலால் உள்ளே நுழைவதே கடினமாயிருக்கிறது.

ஒருவழியாக அடித்த சில தினங்களில் படித்து விடுவேன். புஸ்பராஜா தன்னை மிகப்பெரும் சக்தியாகக் காட்டுவது எங்குபார்த்தாலும் தெரிகிறது.

Raj Chandra said...

ஈழநாதன், தகவலுக்கு நன்றி.

பத்ரி: புஸ்பராஜாவே தனது முன்னுரையில் அவகாசம் இல்லாததால் பிழைகள் சரிசெய்ய இயலவில்லை என ஓப்புக் கொண்டிருக்கிறார்.

Venkat said...

இன்றைய எனது வலைக்குறிப்பில் என்னுடைய வாசிப்பு அனுபவத்தை முன்வைத்திருக்கிறேன்.

http://www.domesticatedonion.net/blog/?itemid=343

வெங்கட்