Paradise Now : இதைப் பற்றி Boston Globe-ல் படித்தவுடன் பார்க்க வேண்டியப் பட்டியலில் இருந்து, Netflix மூலமாகக் கிடைத்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது அராபியப் பாலைவனத்தைப் புகைப்படங்களில் பார்த்த நாள் முதலாக ஆர்வம் வந்தது. பின் இஸ்ரேலின் 1970-80-களின் வீரச் செயல்கள் வாயிலாக. பின் இயல்பாகவே வரலாற்றின் மீது வந்த ஆர்வம் மேற்கத்தியப் புத்தகங்கள் வழியே. படித்த வரையில் இஸ்ரேல் கண்ணோட்டத்தில் கிடைத்தப் புத்தகங்களே அதிகம்.
இந்த நிலையில் The Angry Arabs என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. அராபியர்கள் கண்ணோட்டத்தில் இஸ்ரேலியப் பிரச்சினையை அலசியது. ஏன் அராபியர்களால் இஸ்ரேலை ஒப்புக் கொள்ள இயலவில்லை (1970-களில் எழுதப்பட்டது) என்பதை ஆசிரியர் தீர்க்கமாக வாதம் புரிந்திருந்தார்.
இதன் பிறகு பாலஸ்தீனப் போராட்டத்தை மிக அற்புதமாகக் காட்டிய Tom Friedman-ன் From Beirut to Jerusalem புத்தகம். இன்றும் மத்தியக் கிழக்கு புத்தகங்களுக்கு Bible என்று சொல்லலாம்.
அதுபோல படங்களின் வரிசையில் Paradise Now.
கதை: சயீத், காலித் நண்பர்கள். இருவரும் கார் மெக்கானிக்குகள். West Bank-l உள்ள Nabulus நகரம் அவர்கள் வசிப்பிடம். ஒரு நாள் இருவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருகிறது. அவர்கள் Tel Aviv-ல் மனித வெடிகுண்டுகளாக வெடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின் நட்க்கும் 36 மணி நேர நிகழ்வுகள் கதை.
சயீதை சுஹா என்ற பெண் ஒருதலையாகக் காதலிக்கிறாள். சயீத் தான் ஒரு நாள் மனித வெடிகுண்டாகப் போகிறோம் என்பதால் அவளைத் தவிர்க்கிறான். சயீதின் இறந்தகாலம் அவனை தீவிரமாக அந்தப் பாதையில் செலுத்துகிறது.
சயீதும், காலீதும் வீட்டில் சொல்லாமல் தலைமையகத்துகுச் சென்று குண்டுகள் பொருந்திய உடையை அணிந்து, யூதர்கள் போல வேடமிட்டு இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயலுகிறார்கள். கடக்கும் நேரம் எல்லைப் பாதுகாப்பு படையின் கண்களில் பட்டு விட, நடக்கும் களேபரத்தில் சயீத் இஸ்ரேல் பக்கமும், காலீத் West Bank பக்கமும் பிரிந்து விடுகின்றனர்.
காலீத் அவர்களின் தலைவனிடம் இதை தெரிவிக்க, தலைவன் குண்டு வெடிப்பைத் தள்ளிப் போடுகிறான். இதனிடையில் சுஹாவுக்கு இவர்களின் செயல்கள் தெரிய, அவள் காலீதுடன் வாதம் செய்து அவனின் மனதை மாற்றுகிறாள். இருவரும் சயீதைத் தேடி அலைகிறார்கள்.
சயீத் இஸ்ரேல் எல்லையிலிருந்து West Bank-னுள் நுழைந்து ஒரு இடுகாட்டில் ஒய்வாக இருக்கும்போது காலீதும், சுஹாவும் அவனிடம் வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள். சயீத் மறுத்து அவனின் தலைவனைப் பார்க்கப் போகிறான்.
படத்தின் மிக முக்கியமான கட்டம் என்று இதனைச் சொல்லலாம். தலைவன் சயீத் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று குற்றம் சாட்ட, சயீத் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறான். அப்போது சயீத் தலைவனிடம், எப்படி ஒரு தேசம் பாதிக்கப்பட்டதாகவும் அதே சமயம் மற்றொரு இனத்தவரை கொடூரமாக அடக்கியாள்வதாகவும் இருக்கும் என்று புரியவில்லை என்கிறான்.
தலைவனை மனம் மாற்றி, மீண்டும் சயீத், காலீத்துடன் இஸ்ரேலுக்குள் போகிறான். இறுதியாக ஒரு பயணிகள் பேருந்தில் உடலைச் சுற்றிய வெடிகுண்டுடன், பிண்ணனியில் சில இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்க சயீத் காமிராவைப் பார்ப்பதோடு முடிகிறது.
கதையின் ஆரம்பத்தில் நடக்கும் வாதம் மத்தியக் கிழக்குப் பிரச்சினையைப் புரிய வைப்பதைப் போன்று தலையணைப் புத்தகங்களும், வெட்டிப் பேச்சு அறிஞர்களும் புரிய வைக்கவில்லை:
வாடிக்கையாளர்: என்னப்பா சயீத், முன் பக்கம் மட்கார்டு கோணலாக இருக்கே?
சயீத் (காரை உற்றுப் பார்த்தப்படி): இல்லீங்களே...
வா: அடப் போப்பா, சரியாப் பாரு.
(இப்போது காலீத்தும் பார்க்கிறான்)
காலீத்: மட்கார்டு ஒழுங்காத்தாங்க இருக்கு...கீழ தரைதான் கோணலா இருக்கு.
வா(சினத்துடன்): யோவ்...கிண்டலா? தரையா கோணல்? நீ கோணல், உங்கப்பன் கோணல்...
காலீத் கோபப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வந்து காரின் முன் பக்கத்தை உடைக்கிறான் (உண்மையாகவே அவனின் தந்தையாரின் கால் ஊனம்).
இதுதான் இன்று மத்தியக் கிழக்கில் நடந்துக் கொண்டிருக்கிறது... காரை பாலஸ்தீனமாக உருவகம் செய்தால்.
படம் முழுக்க இது மாதிரியான கரிய அங்கதம் நிரவிக் கிடக்கிறது.
மற்றொரு காட்சியில் வெடிகுண்டுகளைக் கட்டுவதற்கு முன் தலைவன் அவர்களின் வீர உரையை வீடியோவில் பதிவுசெய்ய முயற்ச்சிக்கிறான். காலீத் உணர்ச்சி ததும்ப ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசி முடிக்க, கேமிரா மேன் தலையை சொறிய:
காலீத்: என்னய்யா?
கா. மே: நீ பேசினது எதுவும் பதிவாகலே, பாட்டரி தீர்ந்துடுச்சு.
சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் காலீத்...
சயீத்தையும் , காலீத்தையும் எல்லைக்குக் கூட்டிச் செல்லும் நண்பரிடம்:
காலீத்: வெடிகுண்டு வெடிச்சதும் என்ன ஆகும்?
நண்பர்: உங்களை தேவதை வந்து அழைத்துச் செல்லும்.
காலீத்: தேவதை வரும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர் (யோசித்துவிட்டு): கேள்விப் பட்டுருக்கேன்.
இதைப் போல படம் நெடுகிலும் பாலஸ்தீனியத் தரப்பு கேள்விக்குட்படுத்தப் படுகிறதென்றால் இஸ்ரேலின் இருப்பு அங்கங்கே சாலைகளை மறித்து நிற்கும் இராணுவ கனரக வாகனங்களின் வழியே மூச்சு முட்ட வைக்கிறது.
கதைக்குள் கதையாக சயீதின் பிடிவாதம், அவனின் தாயார் அவனின் தந்தையைப் ப்ற்றிப் புரியவைக்க முயலுவது, காலீதின் தந்தையின் காலை இஸ்ரேலிய இராணுவம் முறிப்பது (’எந்தக் காலை நான் முறிக்கலாம் என்று நீயே முடிவு செய்து சொல்’), அமைப்பின் நண்பரின் மென்மையான குரல், சுஹாவின் காதல் போன்றவை திறமையாக ஊடுருவுகின்றன.
சயீதின் தீர்க்கமான, கேள்விகள் நிரம்பிய கண்கள் படம் பார்த்து கொஞ்ச நாட்களுக்கு சங்கடப்படுத்தும்.
பி.கு: கதாபாத்திரங்கள் பேசுவதை அப்படியே எழுதாமல் சிறிது மாற்றியிருக்கிறேன், மூலப் பொருள் சிதையாமல்.
1 comment:
hmmm! Adutha review eppo?
Post a Comment