அந்தப் பெண் அப்போதுதான் நினைவு இழந்திருக்க வேண்டும்.
அலுவலகத்தை விட்டு வரும் வழியில் பாலத்தைக் கடக்கையில் அவள் நடைப்பாதையில் விழுந்துக் கிடக்க அவளோடு வந்த நாய் அவள் முகத்தை முகர்ந்துக் கொண்டிருந்தது. நான் காரை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்கும் போது ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
நான் 911 கூப்பிட செல் பேசியை எடுக்கும்போதே இன்னொருவர் அதே எண்ணைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்றுப் பார்த்தபோது, மயக்கம் தெளிந்து அந்தப் பெண் சோர்வாக அமர்ந்திருந்தாள். பெயர் Amy என்றாள். முகவரி விசாரித்தபோது நினைவில் இல்லை என்றாள்.
காவலதிகாரி முதலில் எளிமையாகக் கேள்விகள் கேட்டுக் (பெயர், இன்றைய கிழமை) கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்துவிட, மருத்துவர் அவளின் ஓட்டுநர் லைசன்ஸைப் பார்த்து அவள் வேறொரு மாகாணத்திலிருந்து வந்திருப்பதை அறிந்தார். உள்ளூர் முகவரி தெரியவில்லை. அவளின் செல்பேசியிலும் ஆபத்துக்குக் கூப்பிட வேண்டிய எண் சிக்கவில்லை.
என்னோடு இருந்த இளைஞன் நாயின் கழுத்துப் பட்டியில் இருந்து முகவரி கண்டுப்பிடிக்க முயல, அது அவனிடமிருந்து நழுவியது. விடாமல் அதை நோண்ட, நாய் பொறுமை இழந்து 'வள்' என்றது. அவள் அதைத் தடவிக் கொடுத்தாள்.
நான் நாயை அருகில் இழுத்து அதைக் கொஞ்சிக் கொண்டே கழுத்துப் பட்டியில் இருந்து அது வழக்கமாக செல்லும் மருத்துவமனை முகவரியும், தொலப் பேசி எண்ணும் படிக்க காவலர் அதைக் குறித்துக் கொண்டார். பின் மருத்துவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து அவளை ஆம்புலஸில் ஏற்றினர்.
இப்போது நாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டது(மருத்துவர்களுக்கும், காவலருக்கும்). ஒரு மருத்துவர் Man's best friend, அதனால் உங்களோடு இருக்கட்டுமே என காவலரிடம் சிரித்துக் கொண்டே சொல்ல, அவர் இதை வைத்துக்கொண்டு நான் எப்படி ரோந்து செல்வேன் என்றார் - சிரிக்காமல்.
நானும் என்னோடு இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என நிற்க, மருத்துவர் எங்கள் பக்கம் திரும்பி 'நீங்கள் செல்லலாம்..நன்றி' என்றார்.
நான் நாயைப் பார்த்தேன். அது தன் எசமானி ஆம்புலன்ஸில் ஏறுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
பி.கு.: கொஞ்ச நாட்கள் முன் நான் வசிக்கும் ஆர்லிங்டன் நகரில் நடந்த ஒரு சம்பவம் இது. நேரில் பார்த்ததை அசோகமித்திரன் பாணியில் எழுதிப் பார்க்க முயன்று பின் நம்பிக்கை இல்லாமல் கோப்புகளில் சேமித்து வைத்திருந்தேன். இன்று கொஞ்சம் தயக்கத்துடன்வெளியிடுகிறேன்.
No comments:
Post a Comment