Monday, December 28, 2009

வாங்க வேண்டிய புத்தகங்கள்

இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே (கிழக்கு)
திருநங்கைகள் உலகம் - கிழக்கு
ராஜீவ் கொலை வசக்கு - கிழக்கு
திமுக உருவானது ஏன் - கிழக்கு
சென்னை மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
சீனா மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
பிரபாகரன்-வாழ்வும் மரணமும் - கிழக்கு
கோபுலு-கோடுகளால் ஒரு வாழ்க்கை - கிழக்கு
கடல்புரத்தில் - கிழக்கு
இருளர்கள் - ஒரு அறிமுகம் - கிழக்கு
நாவல் - ஜெயமோகன் - கிழக்கு
இந்திரா பார்த்தாசாரதி கதைகள் - கிழக்கு
மீண்டும் ஜீனோ - சுஜாதா - கிழக்கு
இந்து ந்ஜான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் - கிழக்கு


யாமம் - எஸ். ரா - உயிர்மை
சிலுவையின் பெயரால் - ஜெமோ - உயிர்மை
தனிமையின் இசை - ஷாஜி - உயிர்மை
நாயக்கர் காலம் - ராமசாமி - உயிர்மை
குடுகுடுப்பைகாரர் வாழ்வியல் - ந. முருகேச பாண்டியன் - உயிர்மை
\ ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு - ஆ. கா. பெருமாள் - தமிழினி
இன்றைய காந்தி - ஜெயமோகன் - தமிழினி
கு.ப.ரா கதைகள் (முழு தொகுப்பு) - அடையாளம்
பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆகோள் பூசலும் பெருங் கற்கால நாகரிகமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
கந்தர்வன் கதைகள் - வம்சி பதிப்பகம்
அர்ச்சுனன் தபசு - பாலுசாமி - காலச்சுவடு


மேலும் பல புத்தகங்கள் சேரலாம். காலச்சுவடு வெளியீடுகள் இன்னும் தெரியவில்லை. சாருவின் ஓரிரண்டு புத்தகங்கள் பட்டியலில் சேரும் என்று நினைக்கிறேன்.

Monday, December 14, 2009

உதவி

அந்தப் பெண் அப்போதுதான் நினைவு இழந்திருக்க வேண்டும்.


அலுவலகத்தை விட்டு வரும் வழியில் பாலத்தைக் கடக்கையில் அவள் நடைப்பாதையில் விழுந்துக் கிடக்க அவளோடு வந்த நாய் அவள் முகத்தை முகர்ந்துக் கொண்டிருந்தது. நான் காரை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்கும் போது ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.


நான் 911 கூப்பிட செல் பேசியை எடுக்கும்போதே இன்னொருவர் அதே எண்ணைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்றுப் பார்த்தபோது, மயக்கம் தெளிந்து அந்தப் பெண் சோர்வாக அமர்ந்திருந்தாள். பெயர் Amy என்றாள். முகவரி விசாரித்தபோது நினைவில் இல்லை என்றாள்.


காவலதிகாரி முதலில் எளிமையாகக் கேள்விகள் கேட்டுக் (பெயர், இன்றைய கிழமை) கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்துவிட, மருத்துவர் அவளின் ஓட்டுநர் லைசன்ஸைப் பார்த்து அவள் வேறொரு மாகாணத்திலிருந்து வந்திருப்பதை அறிந்தார். உள்ளூர் முகவரி தெரியவில்லை. அவளின் செல்பேசியிலும் ஆபத்துக்குக் கூப்பிட வேண்டிய எண் சிக்கவில்லை.


என்னோடு இருந்த இளைஞன் நாயின் கழுத்துப் பட்டியில் இருந்து முகவரி கண்டுப்பிடிக்க முயல, அது அவனிடமிருந்து நழுவியது. விடாமல் அதை நோண்ட, நாய் பொறுமை இழந்து 'வள்' என்றது. அவள் அதைத் தடவிக் கொடுத்தாள்.


நான் நாயை அருகில் இழுத்து அதைக் கொஞ்சிக் கொண்டே கழுத்துப் பட்டியில் இருந்து அது வழக்கமாக செல்லும் மருத்துவமனை முகவரியும், தொலப் பேசி எண்ணும் படிக்க காவலர் அதைக் குறித்துக் கொண்டார். பின் மருத்துவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து அவளை ஆம்புலஸில் ஏற்றினர்.


இப்போது நாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டது(மருத்துவர்களுக்கும், காவலருக்கும்). ஒரு மருத்துவர் Man's best friend, அதனால் உங்களோடு இருக்கட்டுமே என காவலரிடம் சிரித்துக் கொண்டே சொல்ல, அவர் இதை வைத்துக்கொண்டு நான் எப்படி ரோந்து செல்வேன் என்றார் - சிரிக்காமல்.


நானும் என்னோடு இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என நிற்க, மருத்துவர் எங்கள் பக்கம் திரும்பி 'நீங்கள் செல்லலாம்..நன்றி' என்றார்.


நான் நாயைப் பார்த்தேன். அது தன் எசமானி ஆம்புலன்ஸில் ஏறுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.


காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

பி.கு.: கொஞ்ச நாட்கள் முன் நான் வசிக்கும் ஆர்லிங்டன் நகரில் நடந்த ஒரு சம்பவம் இது. நேரில் பார்த்ததை அசோகமித்திரன் பாணியில் எழுதிப் பார்க்க முயன்று பின் நம்பிக்கை இல்லாமல் கோப்புகளில் சேமித்து வைத்திருந்தேன். இன்று கொஞ்சம் தயக்கத்துடன்வெளியிடுகிறேன்.

Sunday, November 15, 2009

வார இறுதியில் - 5

So cute : மகள் டென்னிஸ் வகுப்பில் இன்று அவ்வளவு ஆர்வமாக பங்கு பெறவில்லை. வகுப்பு முடிய 5 நிமிடங்கள் இருக்கையில் 10-12 வயது பெண்ணும், அவள் அம்மாவும் என் மகள் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் வெளியில் நின்று கொண்டு இவள் பந்தை அடிக்க முயலும்போதெல்லாம் 'Come on, Come on' என்று ஆர்வத்துடன் கத்திக் கொண்டிருந்தாள் (அவள் சிறு வயதில் விளையாட ஆரம்பித்தது நினைவுக்கு வந்திருக்கலாம்).

என் மகள் அடித்த ஒரு ஷாட் மறு பக்கத்தில் விழ இந்தப் பெண்ணுக்கு ஏக மகிழ்ச்சி. ‘She did it!!' என்று இவள் தாயாரிடம் சொல்ல அவரும் ‘yeah...she is so tiny yet she hits well' என்று ஆமோதித்தார் (இத்தனையும் என் பக்கம் பார்க்காமலே). நான் திரும்பி சிரித்துக் கொண்டே ‘இதுதான் அவள் அடித்த உருப்படியான் ஷாட்’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘She still succeeded' என்றாள். மானசீகமாக அவளுக்கு ஒரு சல்யூட் வைத்தேன். எதிர்காலத்தில் இந்தப் பெண் சிறந்த பயிற்சியாளராவாள்.

Sachin Tendulkar: 20 வருடங்கள் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகள் இல்லை. அதைப் பற்றி விரிவாக...வேண்டாம்....வார்த்தைகள் அவரின் சாதனைகளின் மதிப்பைக் குறைத்து விடும். Thank you Sachin.

இலங்கை : இலங்கைக்கு பிரணாப் சென்றது தொடர்பாக டிவிட்டரில் ‘oruppakkam' மற்றும் 'kaanaprabha' இருவரின் கருத்து வேற்றுமையைப் படிக்க நேர்ந்த்து. ஒன்று புரிந்து கொண்டேன். உணர்ச்சி வயப்ப்டாமல் இவ்வகை கலந்துரையாடல்கள் நடப்பதில்லை.

சாரு: சாருவின் சமீபத்திய அலம்பல்கள் தாங்க முடியவில்லை (அவரின் நித்யானந்தர் கட்டுரைகளை சோகமாக இருக்கும் போது வாசித்து வெளியே வரும்போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு வருவேன், அவ்வள்வு காமெடி). இப்பொது அவரின் ஒரு நாடகத்தில் நடந்த கலாட்டாவை விரிவாக (?!) பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதில் என்ன புதிதாக இருக்கிறது? 2002-ல் இருந்து இவரின் எழுத்துக்களைப் படிக்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த கலாட்டாவைப் பற்றி ஏதாவது சொல்லுவார். கேவலம் கிராம விழாக்களில் போடும் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சியில் கூட இந்த கலாட்டாக்கள் நடக்கும். இவர் என்னவோ மொத்த தமிழகத்திற்க்கும் கலாச்சாரம் கற்றுக் கொடுக்க வந்து இவரை மற்றவர்கள் கொலை செய்ய முயன்றார் போன்ற பில்டப். நினைப்புதான்...

காமெடி: வீட்டில்/அலுவலகத்தில் பல தலைவலிகள் இருக்க சிவத்தமிழோன் என்பவரும் சுகுணா திவாகரும், திருக்குறள் சைவ நூலா இல்லை சமண நூலா என்று வாழ்க்கைக்குத் தேவையான வாதம் புரிந்தது. சாதி மத பேதங்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு அதைத் தீவிரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று பெரியார் சொல்லாததை அவரைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள் நினைவில் வைத்திருப்பது பெரியாரிசத்தின் மிகப் பெரிய (சோகமான) தோல்வி.

Sunday, September 20, 2009

வார இறுதியில் - 4

திரை: உன்னைப் போல் ஒருவன் - கமல் படம் என்றாலே கொஞசம் பயம்தான். வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று பல முயற்சிகளையும் ஒரே படத்தில் திணித்துத் தொலைப்பார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தன் ஆளுமை இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் வேறு. படத்துக்குப் படம் தேவையில்லாத ஒப்பனை என்ற பெயரில் திரைப்படத்தையே கேலிக்கூத்தாக்குவது.

உன்னைப் போல் ஒருவன் அறிவிக்கப்பட்டவுடனே எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘ஐயோ’. நஸ்ருத்தீன் ஷா-வின் தீவிர ரசிகனுக்கு இதுதான் தோன்றும். ரஜினி (அதுவும் பீ வாசுவோடு) அறிவித்திருந்தால் யாருக்குமே துறவறத்தில் நம்பிக்கை வந்திருக்கும். கமல் என்பதால் முதல் பத்தி நினைவுக்கு வந்தது.

மோகன்லால் நடிக்கப் போகிறார் என்றதும் ‘ஐயோ!ஐயோ!’. கமலின் படங்களில் இதுவரை நாசர், நாகேஷ் தவிர்த்து எவரையும் கமல் dominate செய்ய விடமாட்டார் என்பதால் மோ. லா மேல் பரிதாபம்தான்.

இந்த மனநிலையோடு படம் பார்க்கப் போனால் வெளியே வரும்போது ஆச்சரியத்துடன் வந்தேன்.

முதலில் கதை. சாதாரண மனிதன் தீவிரவாதத்தைக் கண்டு கோபம் கொண்டால் என்னாகும் என்பது ஒரு வரி கதை. அவனும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தால் ஒரு நகரத்தையே தன் கைக்குள் கொண்டு வந்து, பலமான காவல் துறையைத் தன் கட்டை விரலால ஆட்டுவிக்கலாம், தீவிரவாதிகளை நம்ப வைத்து கழுத்தறுக்கலாம் என்று நம்ப முடியாவிட்டாலும் கொஞசம் practical-ஆக யோசித்திருப்பது தமிழுக்கு புதுசு.

இரண்டாவது துணைக் கதாபாத்திரங்கள்: லஷ்மி முதல் ரஃபிக் என்ற நபர் வரை செய்த பாத்திரத் தேர்வு. மிகக் கச்சிதமாக அவரவர் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் இரண்டு காவல் அதிகாரிகளைக் குறிப்பிடவேண்டும். சேது மற்றும் ஆரிஃப். சேது ஒரு சாதாரண மனிதன் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே ஊடாடுவதைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஆரிஃப் கொஞ்சம் Dirty Harry ஸ்டைலில் தடாலடி வேலைகளுக்கு உதவுகிறார். அதுவும் தன் இன்ஃபார்மரிடம் பரிவுடன் கலந்த கண்டிப்புடன் பேசும்போதும், அந்த இன்ஃபார்மரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப தாடையை உடைக்கும் போதும் Character சரியாக் build ஆகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக எப்போதும் மின்சார கம்பியைத் தொட்டுக் கொண்டிருப்பவர் போல இருக்க வேண்டும் என்று புரியவில்லை. போதை ஆசாமியைப் புரட்டப் போகிறார் என்று நம்மை நினைக்கவைத்து குரல் கடுமையிலேயே அவனிடம் விஷயம் கறக்க வைக்கும் இடம் கதை + டைரக்‌ஷனின் சிறப்பு. இந்த நடிகருக்கு நல்ல இயக்குநர் அமைந்தால் அஜீத், விஜய் போன்ற முட்டாள் கோமாளிகளை ஒதுக்கி வலம் வருவார்.

மூன்றாவதாக: கமல், லால் மற்றும் லஷ்மி: கமல் நடிப்பை விட அவரின் உடல் மொழிதான் சட்டென்று மனதில் பதிந்தது. அறிமுகக் காட்சியில் தலை, கை, வால் என்று காட்டாமல் சாதாரணமாக அறிமுகம் ஆவதும், நன்றாகத் தேர்ந்த பொறியாளர் போல வெடிகுண்டு செய்யும் சாதனங்களைக் கையாள்வதும், ஒரு விதமான தளர்ந்த நடையுடன் ஒவ்வொரு பையையும் தூக்கிக்கொண்டு நடப்பதும், எல்லா வெடிகுண்டு பைகளையும் வைத்து விட்டு கீரை, தக்காளி என்று மனைவி கொடுத்த லிஸ்ட் படி வாங்குவதும் என்று இவரின் பாத்திரம் சரியாக செதுக்கப்படுகிறது.

அதோடு கமல் நிஜமாகவே கொஞ்சம் ஒதுங்கி மற்ற இருவரும் dominate செய்ய அனுமதித்திருக்கிறார். லாலும், லஷ்மி-யும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் கோட்டுக்குள் இருந்து கொண்டே மற்றவரைக் கவிழ்க்கும் வேலையை செய்கிறார்கள். சிக்கலான வேலையை மற்றவர்களிடம் தள்ளிவிட்டு தான் பலி ஆடாகாமல் தப்புவது என லஷ்மி விளையாட, தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தேவையான இடங்களில் சுட்டிக்காட்டி லஷ்மியை back-off செய்வது என லால் திருப்பித்தாக்கும் கட்டங்கள் மிக சுவாரசியம் (அவ்வப்போது கருணாநிதியின் தொலைப் பேசி அழைப்புடன்!).

நடப்பு அரசியலை இவ்வளவு துணிவாக (அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான சகிப்புத்தன்மையை நினைவில் கொண்டால்) எடுத்தாண்டது இதில்தான் முதலில் பார்க்கிறேன். சங்கரின் படங்கள் சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறேன் என்று கேலிக் கூத்தாக்கும். லஷ்மியோடு மோகன்லால் மோதும் இடங்கள் பதவிகளில் உள்ள அரசியல் நீங்கள் கதிரியக்க மழையில் நனைந்தாலும் இருக்கும் என்பதைக் காட்டும். B+ தரமுள்ள ஹாலிவுட் படங்களில் இது போன்ற காலை வாரும் அரசியலைப் பார்க்கலாம். தமிழில் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

கதையில் காட்டப்படும் இடங்கள் கதையின் இறுக்கத்துக்கு உதவுகின்றன. கமலின் control room வெட்டவெளி என்றால், மோகன் லாலின் Situation Room இறுக்கமாக அடைப்பட்ட இடம். இறுதிக்காட்சியில் காட்டப்படும் காலியாக பரந்துக் கிடக்கும் விமான நிலையம், சேதுவின் மனைவி பயணிக்கும் ரயிலில் அவர்களிக் இருக்கைகள் மட்டும் என்று காமிரா தேவையான் பகுதிகளை மட்டும் தன் ஃப்ரேமுக்குள் அடக்குகிறது.

இறுதியாக இசை: ஸ்ருதி ஹாசன் என்பதால் நம் மக்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்தார்கள் என்று தெரிகிறது. இது போன்ற படங்களுக்கு இசை என்பது மிகக் கொஞ்சமாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டால் அவர்களின் நடிப்பே தேவையான பதற்றத்தை வரவழைத்து விடும். இது இசை அமைப்பாளர் உணர வேண்டும். ஆனால் படத்தில் மித மிஞ்சிய இசை. காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று பாஷன் ஷோவில் வரும் இசையைப் போன்று போட்டுத்தாக்கியிருக்கிறார் (இதில் அதிகாரிகள் Bullet Proof vest அணியும்போது Michael Jackson-ன் Billy Jean ட்யூனில் இசை வேறு). இவருக்கு நான் சொல்லுவது, உதிரிப் பூக்கள் படத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை (அதுவும் விஜயன் தன் மச்சினியைப் பார்க்கும் போது வரும் இசை). Better luck next time.

படம் என்று எடுத்துக் கொண்டால் கமலுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல படம் என்பது மறுக்க முடியாது.



Sunday, September 13, 2009

வார இறுதியில் - 3

அரசியல், விளையாட்டு: இரண்டிலும் பணம் புரள்வதால் நாகரிகததுக்கு இடமில்லை என்று ஜோ வில்சனும், செரினா வில்லியம்ஸும் நிரூபித்துள்ளனர். ஜோ வில்சன் தென்கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர். ஒபாமாவின் health care பேச்சின்போது, You liar என்று கத்தினார். ஒபாமா கொஞ்சம் கூட சலனமேயில்லாமல் அதை மிக நாகரீகமாக மறுத்துவிட்டு தன் பேச்சைத்் தொடர, இப்போது ஜோ அவரின் கட்சிக்காரர்களாலேயே கண்டிக்கப் பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஜோ இராணுவத்தில் பணி புரிந்தவர். இராணுவத்தினருக்கு ஜனாதிபதி Commander-in-Chief. அந்தப் பதவிக்குரியவரையே எதிர்த்து முட்டாள்தனமாகக் கத்தியிருக்கிறார். புஷ் இராக் போரைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கத்த வேண்டிய வார்த்தையை இப்போது கத்தி குடியரசு உறுப்பினர் தான் புஷ்-க்கு சளைத்த முட்டாள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

விளையாட்டில் ஜோ-க்கு சளைக்காமல் செரினா நடந்த விதம் இன்னும் பைத்தியக்காரத்தனம். தேவையில்லாமல் Line Judge-ஐ திட்டி ஆட்டமும் இழந்து (இல்லையென்றாலும் கிம் எளிதாக வென்றிருப்பார்), $10000 டாலரும் இழப்பு.

இவர்கள் இருவரும் கற்க வேண்டிய முதல் பாடம் சபை நாகரிகம்.

நாட்டு நடப்பு: இந்த வார Outlook-ல் வந்த இரண்டு செய்திகள்:

1) வக்ஃப் வாரியத்தின் ஊழல்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளம். பல முகலாய, நிஜாம் மன்னர்களால் மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வாகம் செய்கிறது. இதில் வரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமையவேண்டும். பொதுவாக மாநில அரசுகள் தங்கள் கட்சியில் உள்ள இஸ்லாமிய உறுப்பினர்களை நியமனம் செய்யும். இதுவே ஊழல்களுக்கு வழி வகுக்கிறது. உதாரனமாக அனில் அம்பானி கட்டும் புது கட்டிடம் ஒன்றின் மதிப்பு 27 கோடி. ஆனால் விற்கப்பட்டதோ 16 லட்சத்திற்கு. அனில் 27 கோடி கொடுக்கவில்லையென்றாலும் கொடுத்த வரையில் 16 லட்சம் தவிர மீதி வாரிய தலைவர்/உறுப்பினர் பையில். அரசு தலையிட பயப்படுகிறது. தலையிட்டால் ‘இஸ்லாமிய மதத்திற்கு அபாயம்’ என்று கூக்குரல்.

2) குஜராத் போலீசின் (மோடியின் அடியாட்கள் என்று வாசிக்க) 2004 என்கவுண்டர் போலி என்று கண்டுப்பிடிப்பு.

2004-ல் மோடியைக் கொலை செய்யும் உத்தேசத்துடன் இருந்தவர்கள் என்று நான்கு பேரை (ஒரு பெண் உட்பட) குஜராத் போலீஸ் பம்பாய் அருகே சுட்டுக் கொன்றது. ஆனால் 5 வருடங்கள் பிறகு, நீதிபதி தமங் அளித்த தீர்ப்பில் இது போலி என்கவுண்டர் என்று அறிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாய்ந்து இன்னொரு நீதிபதி மூலம் இந்த அறிக்கைக்குத் தடை வாங்கியுள்ளது.

Only in India.


Monday, September 07, 2009

வார இறுதியில் - 2

Labor Day விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று பதிகிறேன்.

அரசியல்: ராஜசேகர ரெட்டி இறப்பு யாருக்கு நஷ்டமோ இல்லையோ ஊடகங்களுக்கும், வேலையில்லாத உதவாக்கரைகளுக்கு இலாபம். ஒரு மாநில முதல்வர் மறைவுக்கு இந்தியா முழுவதும் துக்கம் (கட்டாயமாக) அனுஷ்ட்டிக்க வைக்கும் வியாதி இந்தியாவில் மட்டுமே உண்டு.

தொலைகாட்சியில் (வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன்)அழுது கொண்டே பேட்டிக் கொடுத்தவர்களையும், அவர்களை விடக் கேவலமாக தற்கொலை செய்து கொண்ட கோமாளிகளைப் பற்றியும் படித்துக் கொஞ்ச நேரம் பிரமித்திருந்தேன்.

அழுமூஞ்சிகளை விட்டு விடலாம். அரசியல் பொறுக்கிகளுக்கு அழுகை சகஜம். தற்கொலை செய்தவர்களின் மனநிலையைப் பார்ப்போம். எது இவர்களைத் தூண்டுகிறது? தாழ்வு மனப்பான்மை? ஒரு வேலைக்கும் உதவாமல் இருப்பது? படிப்பறிவின்மை? தன்னம்பிக்கை இல்லாமல் எவனோ ஒருவனைத் தலைவனாக நினைப்பது? எப்போதாவது ராஜசேகர் ரெட்டியைப் பார்த்திருக்கிறார்களா? அவரின் எந்த செயல் இவர்களைத் தூண்டியது? அவர்களுக்குத் தெரியுமா ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையில் 10-20% மட்டுமே மக்களை சென்றடைகிறது, மீதம் அவன் பையையும், அவனின் அல்லக்கைகளையும் சென்றடைகிறது என்று?

எது இந்தக் கோமாளிகளைத் தற்கொலை செய்யத் தூண்டியது?


அமெரிக்காவும் எட்வர்ட் கென்னடி-யின் மறைவை நினைவு கூர்ந்தது, அவர் கென்னடி என்பதால். அந்த வகையில் இந்திய சாயல் இருந்தது. என்றாலும் அவரவர் வேலையைப் பார்த்தார்கள். இதற்கெல்லாம் விடுமுறை கேட்டால் சுளுக்கு விழும். மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் (எனக்குத் தெரிந்த வரையில்) சில இடங்களில் From MA people, Thanks Ted என்று மின்னனுப் பலகைகள் வைத்தார்கள்.

புத்தகம்: ஒரு வழியாக நேற்று இரவு விழித்து ‘The Brothers Karamazov' முடித்தேன். கதை இறுதி வக்கீல்கள் வாதங்கள் கொஞ்சம் சோர்வடைய செய்தாலும் மிக அற்புதமான classic. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் கொள்ளும் மாறுபாடுகள் ஆராய்ச்சிக்குத் தகுந்தவை. ரஷ்ய இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்க தஸ்தாவ்யேஸ்கியின் இந்தப் புத்தகம் சிறந்த நுழைவாயில். தமிழ் இலக்கிய வாதிகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்களின் சிக்கலான தமிழில் சிலாகித்து ‘இதையெல்லாம் படிக்கனும்னா உனக்கு இரண்டு கொம்புகள் வேண்டும்’ என்று சொல்வார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழையுங்கள்.

அடுத்த புத்தகம் படிக்க எடுத்திருப்பது ‘Patrick French' எழுதிய ‘Liberty or Death'. சமீபத்தில் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி எழுதி பிஜேபி-க்கு சாமி வரவழைத்ததைப் போன்று 1997 Patrick ஒரு புயலைக் கிளப்பினார். காந்தியின் அரசியலை/புனித பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஜின்னாவைப் பற்றிய இந்தியப் பார்வை தவறு என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போதைய புயல் போன்று 1997-ல் கிளம்பாததற்க்குக் காரணம் Patrick அயல் தேசத்தவர், அதுவும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி Krishan Kalra என்பவர் '’Liberty or Death’ should be included in the category of yellow journalism and be banned in India' என்கிறார். அப்படியானால் கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும் என்று நூலகத்திலிருந்து எடுத்து வந்து விட்டேன். முதல் 10 பக்கங்கள் படித்த வரையில் ஓகே.

படித்து முடித்தபின் Rajmohan Gandhi எழுதிய Mohandoss-ம் குஹா எழுதிய India After Gandhi-ம் படிப்பதாக பிளான்.

Sunday, August 30, 2009

வார இறுதியில் - 1

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று எழுத வேண்டும் போல் இருந்தது...

வேலைப் பளு அதிகம் இருந்தாலும் அரை மணி நேரமாவது ஏதாவது படிக்க முடிந்தது. ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்துக் கொண்டிருக்கிறேன். Dmitri, Ivan, Alyosha, Illusha போன்றவர்களின் வாழ்க்கையை kaleidoscope-ஆக தஸ்தவ்யேஸ்கி எழுதிய புத்தகம். எழுதி 100 வருடங்களாகியும் பாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்த உணர்வு. ஆன்மிகம் பற்றிய தன் கருத்துக்களை/குழப்பங்களை/கண்டடைந்தவைகளைப் புததக வடிவில் கொண்டு வருவது அசாத்தியமான வேலை. தஸ்தவ்யேஸ்கி-க்கு அது சாதாரணமாக வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர்கள் போக்கிலே செல்லும்போது சிலர் ஒரு புள்ளியில் சந்தித்து, உறவாடி, பகையாடி, விலகி பின் சேர்ந்து...இந்த நாவலைப் படிக்கும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நினைவுக்கு வருகிறது.

Speaking of which...நேற்று தஸ்தவ்யேஸ்கி-யைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ‘கரைந்த நிழல்கள்’ மீள்வாசிப்பு. ஒருமுறைப் படித்திருந்தாலும் அ.மி-யின் இந்த நாவல் என்னை மீண்டும் வாசிக்க வைத்தது சமீபத்திய 'அவுட்லுக்கில்’ படித்த விஷால் பரத்வாஜ் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். இதைத் தொடராக வெளியிட்ட காலத்தில் எத்தனைப் பேர் அதை ஈடுப்பாடுடன் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ‘க. நி’ ஒரு முழுப் புத்தகமாகப் படிப்பதில் உள்ள மனநிலை வாரம் ஒருமுறையில் கொண்டு வரமுடியாது.

அ.மி. Hidden Humor இந்த நாவல் முழுவதும் தெளித்து விடப்பட்டுள்ளது. ‘மழை வரும்-னு காமிராவை முதல் நாளே வாங்கி வைக்கவில்லை’ என நடராஜன் சொல்ல, அடுத்த வரி ஒரு தனி பத்தியாக ‘வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன்’. கரம்சோவ் கதாபாத்திரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்த்தித்த உணர்வு இருக்கிறது என்று சொன்னேன். ‘க. நி’ அதில் நிச்சயம் சேரும்.

புத்தக அலமாரிகள் வாங்கிய பிறகு அவ்வப்போது வரும் மனநிலைக்கேற்ப ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒருசிலப் பக்கங்களை மேய்வது சுகம். வாங்கி வைத்தவைகளைப் பார்க்கும் போது, பரவாயில்லை என்று என்னுடைய புத்தகத் தேர்வைக் குறித்து நானே முதுகில் தட்டிக் கொள்ள முடிகிறது. மாலைமதியில் ஆரம்பித்த வாசிப்பு இன்று அமெரிக்க வரலாறு பற்றிய Oxford-ன் தொடர் புத்தகங்களும், இந்திய வரலாற்றின் 1857-ல் இருந்து India After Gandhi வரை புத்தக அலமாரியில் சேர்க்கும் வரை வந்திருக்கிறது. தமிழில் வலைப் பதிவுகள் முடிந்த வரையில் என் தமிழ் புத்தக must buy and must read வகைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. எனி இந்தியன் புண்ணியத்தில் தொல்லை இல்லாமல் பாஸ்டனில் இருந்து வாங்கிவிட முடிகிறது.

தமிழில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு மற்றும் பின் தங்கியவை என்பது தெரிந்த ஒன்று. உதாரணத்திற்க்கு நேற்று வாங்கிய Freakonomics புத்தகத்திற்க்கு வந்த மதிப்புரைகள் ஏறத்தாழ 20-30. எழுதும் மதிப்புரைகளும் 90% தூர்தர்ஷனில் வரும் எதிரொலி கடிதத் தரம். கத்துவதற்கு பதிலாக நானாவது என் வலைப் பதிவில் மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்பது இப்போது மனதில் ஓடும் சிந்தனை.

கரமசோவ் முடித்த பிறகு அடுத்து என்ன என்பது தெரியாது. காந்தி என்னைப் படியேன் (Satyagraha in South Africa) என்று கேட்கிறார்.


Monday, April 27, 2009

Poor Banchee

On top of sphagetti
I'll cover with cheese...
I lost my poor Banchee,
When somebody sneeze

AA..choo...

As sung by Manasa ( We are still trying to find the meaning of 'Banchee' :) )

Down by the Bay...

Down by the Bay
Where the watermelons grow
Back to my home
I do not go.
Or if I do...
My mother will say:
"Have you ever seen camel wearing Pajamas?"
Down by the bay...

- As sung by Manasa

Monday, March 23, 2009

Paradise Now

பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து இன்று இதைப் பற்றி:

Paradise Now : இதைப் பற்றி Boston Globe-ல் படித்தவுடன் பார்க்க வேண்டியப் பட்டியலில் இருந்து, Netflix மூலமாகக் கிடைத்தது. 

மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது அராபியப் பாலைவனத்தைப் புகைப்படங்களில் பார்த்த நாள் முதலாக ஆர்வம் வந்தது.  பின் இஸ்ரேலின் 1970-80-களின் வீரச் செயல்கள் வாயிலாக.  பின் இயல்பாகவே வரலாற்றின் மீது வந்த ஆர்வம் மேற்கத்தியப் புத்தகங்கள் வழியே.  படித்த வரையில் இஸ்ரேல் கண்ணோட்டத்தில் கிடைத்தப் புத்தகங்களே அதிகம்.

இந்த நிலையில்  The Angry Arabs என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.  அராபியர்கள் கண்ணோட்டத்தில் இஸ்ரேலியப் பிரச்சினையை அலசியது.  ஏன் அராபியர்களால் இஸ்ரேலை ஒப்புக் கொள்ள இயலவில்லை (1970-களில் எழுதப்பட்டது) என்பதை ஆசிரியர் தீர்க்கமாக வாதம் புரிந்திருந்தார்.

இதன் பிறகு பாலஸ்தீனப் போராட்டத்தை மிக அற்புதமாகக் காட்டிய Tom Friedman-ன் From Beirut to Jerusalem புத்தகம்.  இன்றும் மத்தியக் கிழக்கு புத்தகங்களுக்கு Bible என்று சொல்லலாம்.

அதுபோல படங்களின் வரிசையில் Paradise Now.

கதை: சயீத், காலித் நண்பர்கள்.  இருவரும் கார் மெக்கானிக்குகள்.  West Bank-l உள்ள Nabulus நகரம் அவர்கள் வசிப்பிடம்.   ஒரு நாள் இருவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருகிறது.  அவர்கள் Tel Aviv-ல் மனித வெடிகுண்டுகளாக வெடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் நட்க்கும் 36 மணி நேர நிகழ்வுகள் கதை.

சயீதை சுஹா என்ற பெண் ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  சயீத் தான் ஒரு நாள் மனித வெடிகுண்டாகப் போகிறோம் என்பதால் அவளைத் தவிர்க்கிறான்.  சயீதின் இறந்தகாலம் அவனை தீவிரமாக அந்தப் பாதையில் செலுத்துகிறது.


சயீதும், காலீதும் வீட்டில் சொல்லாமல் தலைமையகத்துகுச் சென்று குண்டுகள் பொருந்திய உடையை அணிந்து, யூதர்கள் போல வேடமிட்டு இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயலுகிறார்கள்.  கடக்கும் நேரம் எல்லைப் பாதுகாப்பு படையின் கண்களில் பட்டு விட, நடக்கும் களேபரத்தில் சயீத் இஸ்ரேல் பக்கமும், காலீத் West Bank பக்கமும் பிரிந்து விடுகின்றனர்.

காலீத் அவர்களின் தலைவனிடம் இதை தெரிவிக்க, தலைவன் குண்டு வெடிப்பைத் தள்ளிப் போடுகிறான்.  இதனிடையில் சுஹாவுக்கு இவர்களின் செயல்கள் தெரிய, அவள் காலீதுடன் வாதம் செய்து அவனின் மனதை மாற்றுகிறாள்.  இருவரும் சயீதைத் தேடி அலைகிறார்கள்.

சயீத் இஸ்ரேல் எல்லையிலிருந்து West Bank-னுள் நுழைந்து ஒரு இடுகாட்டில் ஒய்வாக இருக்கும்போது காலீதும், சுஹாவும் அவனிடம் வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள்.  சயீத் மறுத்து அவனின் தலைவனைப் பார்க்கப் போகிறான்.

படத்தின் மிக முக்கியமான கட்டம் என்று இதனைச் சொல்லலாம்.  தலைவன் சயீத் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று குற்றம் சாட்ட, சயீத் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறான்.  அப்போது சயீத் தலைவனிடம், எப்படி ஒரு தேசம் பாதிக்கப்பட்டதாகவும் அதே சமயம் மற்றொரு இனத்தவரை கொடூரமாக அடக்கியாள்வதாகவும் இருக்கும் என்று புரியவில்லை என்கிறான்.

தலைவனை மனம் மாற்றி, மீண்டும் சயீத், காலீத்துடன் இஸ்ரேலுக்குள் போகிறான்.  இறுதியாக ஒரு பயணிகள் பேருந்தில் உடலைச் சுற்றிய வெடிகுண்டுடன், பிண்ணனியில் சில இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்க சயீத் காமிராவைப் பார்ப்பதோடு முடிகிறது.
 
கதையின் ஆரம்பத்தில் நடக்கும் வாதம் மத்தியக் கிழக்குப் பிரச்சினையைப் புரிய வைப்பதைப் போன்று தலையணைப் புத்தகங்களும், வெட்டிப் பேச்சு அறிஞர்களும் புரிய வைக்கவில்லை:

வாடிக்கையாளர்: என்னப்பா சயீத், முன் பக்கம் மட்கார்டு கோணலாக இருக்கே?

சயீத் (காரை உற்றுப் பார்த்தப்படி): இல்லீங்களே...

வா: அடப் போப்பா, சரியாப் பாரு.

(இப்போது காலீத்தும் பார்க்கிறான்)

காலீத்: மட்கார்டு ஒழுங்காத்தாங்க இருக்கு...கீழ தரைதான் கோணலா இருக்கு.

வா(சினத்துடன்): யோவ்...கிண்டலா?  தரையா கோணல்?  நீ கோணல், உங்கப்பன் கோணல்...

காலீத் கோபப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வந்து காரின் முன் பக்கத்தை உடைக்கிறான் (உண்மையாகவே அவனின் தந்தையாரின் கால் ஊனம்). 

இதுதான் இன்று மத்தியக் கிழக்கில் நடந்துக் கொண்டிருக்கிறது...  காரை பாலஸ்தீனமாக உருவகம் செய்தால்.

படம் முழுக்க இது மாதிரியான கரிய அங்கதம் நிரவிக் கிடக்கிறது.

மற்றொரு காட்சியில் வெடிகுண்டுகளைக் கட்டுவதற்கு முன் தலைவன் அவர்களின் வீர உரையை வீடியோவில் பதிவுசெய்ய முயற்ச்சிக்கிறான்.  காலீத் உணர்ச்சி ததும்ப ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசி முடிக்க, கேமிரா மேன் தலையை சொறிய:

காலீத்: என்னய்யா?
கா. மே: நீ பேசினது எதுவும் பதிவாகலே, பாட்டரி தீர்ந்துடுச்சு.

சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் காலீத்...

சயீத்தையும் , காலீத்தையும் எல்லைக்குக் கூட்டிச் செல்லும் நண்பரிடம்:

காலீத்: வெடிகுண்டு வெடிச்சதும் என்ன ஆகும்?
நண்பர்: உங்களை தேவதை வந்து அழைத்துச் செல்லும்.
காலீத்: தேவதை வரும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர் (யோசித்துவிட்டு): கேள்விப் பட்டுருக்கேன்.

இதைப் போல படம் நெடுகிலும் பாலஸ்தீனியத் தரப்பு கேள்விக்குட்படுத்தப் படுகிறதென்றால் இஸ்ரேலின் இருப்பு அங்கங்கே சாலைகளை மறித்து நிற்கும் இராணுவ கனரக வாகனங்களின் வழியே மூச்சு முட்ட வைக்கிறது.

கதைக்குள் கதையாக சயீதின் பிடிவாதம், அவனின் தாயார் அவனின் தந்தையைப் ப்ற்றிப் புரியவைக்க முயலுவது, காலீதின் தந்தையின் காலை இஸ்ரேலிய இராணுவம் முறிப்பது (’எந்தக் காலை நான் முறிக்கலாம் என்று நீயே முடிவு செய்து சொல்’), அமைப்பின் நண்பரின் மென்மையான குரல், சுஹாவின் காதல் போன்றவை திறமையாக ஊடுருவுகின்றன.

சயீதின் தீர்க்கமான, கேள்விகள் நிரம்பிய கண்கள் படம் பார்த்து கொஞ்ச நாட்களுக்கு சங்கடப்படுத்தும்.

பி.கு: கதாபாத்திரங்கள் பேசுவதை அப்படியே எழுதாமல் சிறிது மாற்றியிருக்கிறேன்,  மூலப் பொருள் சிதையாமல்.

Curt Schilling

நன்றி ஷில்லிங்.

இன்று கர்ட் ஷில்லிங் பேஸ்பால் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.  Red Sox அணியில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்.  

தோளில் காயம் பட்டதனால் சென்ற வருடம் விளையாடவில்லை.  இறுதிப் போட்டியில் Red Sox மிகக் கடுமையாக போரிட்டுத் தோற்ற போது இவர் இல்லாத்து மிக நன்றாகத் தெரிந்தது.

2004-ல் Red Sox தோல்வியின் அருகில் இருந்தபோது, காலில் சிகிச்சை முழுமையாக அடையாமல் இரத்தக் கசிவுடன் Yankees-க்கு எதிராக பந்து வீசியபோது, New England முழுவதும் அடைந்த கிளர்ச்சி சொல்ல இயலாது.  Red Sox அதன் பிறகு ஒரு விதமான வெறியுடன் விளையாடி அந்த வருடக் கோப்பையை வென்றது ஷில்லிங்கால் என்று சொல்லலாம்.

பேஸ்பாலில் அவரின் போராடும் குணம் என்றும் மேற்கோள் காட்டப்படும்.

Thank you for everything Curt.