Sunday, August 30, 2009

வார இறுதியில் - 1

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று எழுத வேண்டும் போல் இருந்தது...

வேலைப் பளு அதிகம் இருந்தாலும் அரை மணி நேரமாவது ஏதாவது படிக்க முடிந்தது. ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்துக் கொண்டிருக்கிறேன். Dmitri, Ivan, Alyosha, Illusha போன்றவர்களின் வாழ்க்கையை kaleidoscope-ஆக தஸ்தவ்யேஸ்கி எழுதிய புத்தகம். எழுதி 100 வருடங்களாகியும் பாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்த உணர்வு. ஆன்மிகம் பற்றிய தன் கருத்துக்களை/குழப்பங்களை/கண்டடைந்தவைகளைப் புததக வடிவில் கொண்டு வருவது அசாத்தியமான வேலை. தஸ்தவ்யேஸ்கி-க்கு அது சாதாரணமாக வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர்கள் போக்கிலே செல்லும்போது சிலர் ஒரு புள்ளியில் சந்தித்து, உறவாடி, பகையாடி, விலகி பின் சேர்ந்து...இந்த நாவலைப் படிக்கும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நினைவுக்கு வருகிறது.

Speaking of which...நேற்று தஸ்தவ்யேஸ்கி-யைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ‘கரைந்த நிழல்கள்’ மீள்வாசிப்பு. ஒருமுறைப் படித்திருந்தாலும் அ.மி-யின் இந்த நாவல் என்னை மீண்டும் வாசிக்க வைத்தது சமீபத்திய 'அவுட்லுக்கில்’ படித்த விஷால் பரத்வாஜ் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். இதைத் தொடராக வெளியிட்ட காலத்தில் எத்தனைப் பேர் அதை ஈடுப்பாடுடன் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ‘க. நி’ ஒரு முழுப் புத்தகமாகப் படிப்பதில் உள்ள மனநிலை வாரம் ஒருமுறையில் கொண்டு வரமுடியாது.

அ.மி. Hidden Humor இந்த நாவல் முழுவதும் தெளித்து விடப்பட்டுள்ளது. ‘மழை வரும்-னு காமிராவை முதல் நாளே வாங்கி வைக்கவில்லை’ என நடராஜன் சொல்ல, அடுத்த வரி ஒரு தனி பத்தியாக ‘வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன்’. கரம்சோவ் கதாபாத்திரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்த்தித்த உணர்வு இருக்கிறது என்று சொன்னேன். ‘க. நி’ அதில் நிச்சயம் சேரும்.

புத்தக அலமாரிகள் வாங்கிய பிறகு அவ்வப்போது வரும் மனநிலைக்கேற்ப ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒருசிலப் பக்கங்களை மேய்வது சுகம். வாங்கி வைத்தவைகளைப் பார்க்கும் போது, பரவாயில்லை என்று என்னுடைய புத்தகத் தேர்வைக் குறித்து நானே முதுகில் தட்டிக் கொள்ள முடிகிறது. மாலைமதியில் ஆரம்பித்த வாசிப்பு இன்று அமெரிக்க வரலாறு பற்றிய Oxford-ன் தொடர் புத்தகங்களும், இந்திய வரலாற்றின் 1857-ல் இருந்து India After Gandhi வரை புத்தக அலமாரியில் சேர்க்கும் வரை வந்திருக்கிறது. தமிழில் வலைப் பதிவுகள் முடிந்த வரையில் என் தமிழ் புத்தக must buy and must read வகைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. எனி இந்தியன் புண்ணியத்தில் தொல்லை இல்லாமல் பாஸ்டனில் இருந்து வாங்கிவிட முடிகிறது.

தமிழில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு மற்றும் பின் தங்கியவை என்பது தெரிந்த ஒன்று. உதாரணத்திற்க்கு நேற்று வாங்கிய Freakonomics புத்தகத்திற்க்கு வந்த மதிப்புரைகள் ஏறத்தாழ 20-30. எழுதும் மதிப்புரைகளும் 90% தூர்தர்ஷனில் வரும் எதிரொலி கடிதத் தரம். கத்துவதற்கு பதிலாக நானாவது என் வலைப் பதிவில் மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்பது இப்போது மனதில் ஓடும் சிந்தனை.

கரமசோவ் முடித்த பிறகு அடுத்து என்ன என்பது தெரியாது. காந்தி என்னைப் படியேன் (Satyagraha in South Africa) என்று கேட்கிறார்.