Sunday, February 20, 2011

சிலுவைராஜ் சரித்திரம்

ஜெயமோகன் திண்ணையில் ஒரு மதிப்புரையில் ராஜ் கௌதமனின் இரு புத்தகங்களைப் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) பற்றி எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப்குமார் அனுப்பியிருந்த பட்டியலிலும் அது இருந்ததால் யோசிக்காமல் வாங்கினேன் (திலீப் அவர்களின் தேர்வில் எனக்கு நிறைய நம்பிக்கை).

முதல் புத்தகம் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. ஒரு தலித்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனின் Biography. ஆசிரியர் சொல்லாவிட்டாலும் தன் வரலாறு என சந்தேகம் கொள்ள வைக்கும்.

சிலுவைராஜ் அனுபவங்கள் அங்கதத் தன்மையுடன் வயதுக்கேற்ற விடலைத்தனத்துடன் வளர்ந்தாலும் கதை முழுவதும் விரவியிருப்பது அவனின் காலனி வாழ்க்கையும், சாதி சமுதாய ஏற்றத்தாழ்வுகளும். எல்லா இடங்களிலும் சிலுவைக்கு அவனின் சாதி சுட்டப்படுகிறது. காலனியில் இருப்பவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்டாலும் கோபத்தில் மற்றவர்களைத் திட்டும்போது அவர்களை விட தாழ்ந்த சாதியர் பெயர் சொல்லித்திட்டுகிறார்கள். அந்த அனுபவங்கள்அங்கதம் கலந்த கோபத்தில் ஆசிரியரிடமிருந்து வெளிப்படுகிறது.

சிலுவை தன்னை ஒரு பாதிரியாரிடம் ‘பறையன்’ என்று திட்டு வாங்கும் இடத்தில் பொங்கி எழுந்தாலும், அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள மறுப்பதில்லை. ஆசிரியர் சிலுவையின் practicality-ஐ தடுமாறாமல்/விளக்கம் இல்லாமல்/உறுத்தாமல் காட்டிச் செல்லும் இடங்கள் நிறைய.

சிலுவைக்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவு சிக்கல்கள், தந்தை ஊரிலிருந்து வந்தவுடன் தாய் சிலுவை அது வரை செய்த அழும்புகளை பட்டியலிட்டு அடி வாங்கி வைக்கும் இடங்கள், தந்தையை முறைக்கப் போய் மிதிபட்டாலும் அதே தந்தை சிலுவை 10-ம் வகுப்பு தேறியவுடன் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து சிலுவையை ஆச்சரியப்படுத்துவது என்று தந்தை, மகன் உறவை abstract-ஆக படம் பிடித்திருப்பது.

புத்தகம் சிலுவை கல்லூரிப் படிப்பு வரை பதிவு செய்கிறது. அடுத்த பாகமான ‘காலச்சுமை’ சிலுவையின் அதன் பின்னான வாழ்க்கையைப் பார்க்கிறது.

தமிழினி வெளியீடு. நான் படித்தவரை இதை ஒரு முழுமையான தலித்திலக்கியமாக விமர்சகர்கள் பார்க்க மறுக்கிறார்கள். குணசேகரனின் ‘வடு’ இன்னும் மூர்க்கமாக தலித்திய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் (அதைப் பற்றி பிறகு). என்றாலும் ராஜ் கௌதமனின் புத்தகம் எனக்குப் பிடிக்கக் காரணம், மிக இயல்பாக ஒரு படைப்பை snapshot-ஆகக் காட்டி படிப்பவரை அடுத்தத் தளத்திற்க்கு நகர்த்துவது.

’காலச்சுமை’ பற்றி பிறகு,

Wednesday, February 09, 2011

கவித, கவித

சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்தக் காலங்களிலிருந்தே கவிதை என்றால் கருணாநிதி ஜெயலலிதாவைப் பார்ப்பது போலத்தான் (மாற்றியும் கொள்க). சுஜாதா கவிதை என்பது உங்களை, உங்கள் மனதை சற்று நெருட வைக்க வேண்டும் என்பார். அதையும் மீறி சில கவிதைகளைப் படித்து டி. ஆர் கணக்காகக் கத்தியது உண்டு.


உயிர்மை தளத்தில் மனுஷ்யபுத்திரனின் பேட்டி ஒன்றில் என்னை மாதிரியான வெறுப்பர்களுக்கு மிக அழகாக ஏன் கவிதை எல்லோருக்கும் அல்ல என்று சொல்லியிருந்தபோது, ஒளி வட்டம் எனக்கு வந்தது. அன்றிலிருந்து கவிதையைப் படிப்பேன். சில வரிகள் சட்டென்று இழுக்கும். பலவற்றை படித்துவிட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடந்துவிடுவேன்.


கவிதை என்பது என்ன? என்னைப் பொறுத்தவரை, பக்கம் பக்கமாக எழுதுவதை 3-10 வரிகளுக்குள் படிப்பவனுக்குப் புரியவைத்து அவனை அதற்குள் இழுத்துவிடுவது. அபூர்வமாக அவ்வாறு மாட்டி சில நாட்கள் என்னை அசை போடவைக்கும். உதாரணமாக புலிக்கூண்டைத் திறக்கப் போகும் சிறுமி பற்றி மனுஷ் எழுதி சாரு-வின் தளத்தில் வந்தது. ஒரு முழுப் புத்தகமாக எழுத வேண்டிய ஒரு சமூகப் பிரச்னையை மிக அற்புதமாக ஒரு கவிதையில் வடித்த மனுஷ்-க்கு ஒரு சலாம்.


அது போல இன்று மாமல்லனின் http://www.maamallan.com/2011/02/blog-post_2764.html இருக்கும் பிரமிளின் கவிதையில் இருக்கும் இந்த வரிகள் (மாமல்லன் ஆட்சேபித்தால் எடுத்து விடுவேன்) :


...

ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்.
....


இந்த மூன்று வரிகளுக்குள் உயிரின் தத்துவத்தை விவரித்த பிரமிளின் திறமையை விவரிக்க முடியவில்லை. கடவுள் உலகத்தைப் படைத்து, ஆதாம்/ஏவாள் படைத்து, உயிரினங்களை உண்டாக்க வழி செய்ய, மற்றொரு புறத்தில் டார்வினியன் தத்துவம் அதைப் புரட்டிப் போட்டு அறிவியல் வழியே காட்ட, கவிஞன் ஒருவன் மூன்றே வரிகளில் உயிரினத்தின் ஆதி கால உணர்ச்சிகளை சுட்ட முடியுமானால் அவனே கடவுளாகுக.





Thursday, February 03, 2011

ஏறக்குறைய சொர்க்கம்



”எதையும் நிரூபிக்கும் முன்

சற்றே சும்மா இருங்கள் !”

- ஆதமாநாம்.

சுஜாதாவின் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ தொடர்கதையாக குமுதத்தில் வந்தது. கதை ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் திருமண (கசப்பு) அனுபவங்கள்.

ராமச்சந்திரன் (ராமு) தன் நண்பன் சந்துருவோடு திருவெள்ளறையில் காமுவை பெண் பார்க்கப் போவதில் ஆரம்பிக்கிறது. காமுவை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் சந்துரு பார்த்துவிட்டு ராமுவிடம் ‘அவள் பேரழகி, ஆனால் உனக்கு சரிப்படமாட்டாள்’ என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்ல, ராமுவின் ஈகோ கழுதையாக உதைத்து அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். பல லௌகீகத் தடைகள் வருகின்றன. எல்லாவற்றிற்க்கும் மேலாக அவன் அம்மா திருமணத்திற்கு முதல் நாள் கோமாவில் படுக்கிறாள். இருந்தாலும் பிடிவாதமாக மணக்கிறான்.



திருமணமானப் பின் காமுவின் அழகு பல ஆண்களை பேஸ்த் அடிக்க வைக்கிறது. சந்துரு, ராமுவின் மானேஜர், வீட்டுக்காரர், மளிகைக்காரர் என்று பலரும், ராமுவின் அன்புக்குப் போட்டியிடுகிறார்கள். அவனுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும், போகப் போக காமுவின் மேல் சந்தேகம் வருகிறது. தெருவோரத்தில் நின்று வேவுப் பார்க்கிறான். கட்டிலின் கீழே ஆள் இருக்கிறானா என்று தேடுகிறான். காமுவை அடிக்கிறான். கருவைப் பிடிவாதமாகக் கலைக்க வைக்கிறான். மொத்ததில் பாயைப் பிறாண்டும் அளவிற்கு சந்தேகம் முற்றுகிறது.


சந்தேகத்தில் தன் மேலதிகாரியைத் திட்ட அவர் அவனுக்கு வேலையில் டார்ச்சர் தருகிறார். மொத்ததில் நண்பர்கள், மனைவி, நிம்மதி இழந்து திரியும்போது தன் மனைவி ஒரு நடிகையானது தெரிகிறது. மீதி படித்துப் பாருங்கள்.


சுஜாதாவின் அதிகம் பேசப்படாத கதைகளில் இதுவும் ஒன்று. கதை Black Humor வகையைச் சேர்ந்தது. சுஜாதா பலமுறை கதை தானே எழுதிக் கொண்டு செல்லும் என்பார். இந்த கதை அதற்கு ஒர் உதாரணம். கதை உச்சம் பிடிக்கும் இடம் ராமு தன் மனைவியைத் தேடி பித்துப் பிடித்தாற்போல திருச்சி/ஸ்ரீரங்கம் என்று அலையும்போது வரும் நிகழ்ச்சிகள். ஆழ்மனம் அமைதியாக அரற்றிக் கொண்டிருக்க, மூளை காண்பனவற்றையெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளும். அதை எழுத்தில் கொண்டு வருவது சுஜாதாவிற்கு முடிந்திருக்கிறது.


குமுதம் வாசகத் தளத்திற்கு இந்தக் கதை மகா அன்னியம். மனைவியை சந்தேகிக்கும் கதை என்றால் அடுத்து எதிர்பார்ப்பது கொலை, போலீஸ் துரத்தல் என்று. இதை மாற்றி ஜனரஞ்சக வாசகர்களுக்கு அமைப்பது சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம்.


சுஜாதாவின் மத்யமர் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். ஒரிரண்டு தவிர மற்றவை வலிந்துத் திணிக்கபபட்ட ‘மத்யமர்’ லேபிள். ஆனால் ‘ஏ. சொ’-இல் அவர் மத்யமர் வகை என்று தானே முடிவு செய்து கொள்ளாமல் எழுதியதால் அதன் வெளிப்பாடு classic-ஆக வருகிறது. உதாரணமாக காமுவின் அழகைப் பற்றி ராமு அவளிடமே உரையாடும் இடம். கவனிக்க: அது romantic பேச்சு அல்ல. அவளின் அழகு திருமணத்திற்கு முன் மற்றவர்களை சலனப்படுத்திய விதம் பற்றி, அதற்கு காமு பதில் என இந்தக் கதையை வழக்கமான தள்த்திலிருந்து மேலே நகர்த்துவது.


கதையை நான் மிக ரசித்தது காமுவின் தரப்பிலிருந்து ஆசிரியர் ஒரு வாதம் கூட வைக்கவில்லை. மொத்தமும் ராமுவின் பார்வையிலேயே உங்களுக்குத் தருவதால் காமுவின் எண்ணம், செயல்கள் எல்லாம் ஒருவிதமான abstract ஓவியம் போல மாறுகிறது. இதுதான் சுஜாதாவின் வெற்றி. A Beautiful Mind படத்தின் திரைக்கதையைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். சுஜாதா ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் கதைசொல்லி, சந்தேகமில்லை.


கதையில் காமு ஒரு நடிகையாவது நம்ப முடியாவிட்டாலும் அது மத்திய ஆண் வர்க்கத்தின் மனைவிப் பற்றிய மனோநிலையை ஒரு jerk அடிக்க வைக்கப்பட்ட உத்தியாக எடுத்துக் கொண்டால் தொடர முடியும். சுஜாதா வேண்டுமென்றே உங்களை சீண்டும் இடம். கால, நேர அளவுகளை வைத்துப் பார்த்தோம் என்றால் அவள் அந்த அளவிற்கு புகழ் பெற்றது logic wise உங்களை விபரீதக் கற்பனைகளுக்கு கொண்டு சென்றுவிடும். ரஜினி ஒரே பாடலில் பிச்சைக்காரனிலிருந்து கோடீஸ்வரனாக மாறுவதை நீங்கள் ஜீரணிக்கக் கூடியவரா? அப்படியானால் காமுவும் ஒரே அத்தியாய்த்தில் நடிகை ஆகலாம்.


அதன் பின்னும் ராமு தன் மத்தியமர் நிலையில் நின்று மனைவியை மீட்க நினைக்கும் இடம்தான் சுஜாதாவின் Black humor-ன் உச்சக்கட்டம்.


ராமு ஒரு இடத்தில் மேற்குறிப்பிட்ட ஆத்மாநாமின் வரிகளை நினைக்கிறான். அந்த் இரண்டு வரிகள்தான் இந்த மொத்தக் கதையின் புகைப்படம்.


கதை முடிவில் நீங்கள் ராமுவிற்கு பரிதாபப்பட்டால் கதை தோற்றுவிட்டது என்று அர்த்தம்.