Sunday, February 20, 2011

சிலுவைராஜ் சரித்திரம்

ஜெயமோகன் திண்ணையில் ஒரு மதிப்புரையில் ராஜ் கௌதமனின் இரு புத்தகங்களைப் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) பற்றி எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப்குமார் அனுப்பியிருந்த பட்டியலிலும் அது இருந்ததால் யோசிக்காமல் வாங்கினேன் (திலீப் அவர்களின் தேர்வில் எனக்கு நிறைய நம்பிக்கை).

முதல் புத்தகம் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. ஒரு தலித்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனின் Biography. ஆசிரியர் சொல்லாவிட்டாலும் தன் வரலாறு என சந்தேகம் கொள்ள வைக்கும்.

சிலுவைராஜ் அனுபவங்கள் அங்கதத் தன்மையுடன் வயதுக்கேற்ற விடலைத்தனத்துடன் வளர்ந்தாலும் கதை முழுவதும் விரவியிருப்பது அவனின் காலனி வாழ்க்கையும், சாதி சமுதாய ஏற்றத்தாழ்வுகளும். எல்லா இடங்களிலும் சிலுவைக்கு அவனின் சாதி சுட்டப்படுகிறது. காலனியில் இருப்பவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்டாலும் கோபத்தில் மற்றவர்களைத் திட்டும்போது அவர்களை விட தாழ்ந்த சாதியர் பெயர் சொல்லித்திட்டுகிறார்கள். அந்த அனுபவங்கள்அங்கதம் கலந்த கோபத்தில் ஆசிரியரிடமிருந்து வெளிப்படுகிறது.

சிலுவை தன்னை ஒரு பாதிரியாரிடம் ‘பறையன்’ என்று திட்டு வாங்கும் இடத்தில் பொங்கி எழுந்தாலும், அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள மறுப்பதில்லை. ஆசிரியர் சிலுவையின் practicality-ஐ தடுமாறாமல்/விளக்கம் இல்லாமல்/உறுத்தாமல் காட்டிச் செல்லும் இடங்கள் நிறைய.

சிலுவைக்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவு சிக்கல்கள், தந்தை ஊரிலிருந்து வந்தவுடன் தாய் சிலுவை அது வரை செய்த அழும்புகளை பட்டியலிட்டு அடி வாங்கி வைக்கும் இடங்கள், தந்தையை முறைக்கப் போய் மிதிபட்டாலும் அதே தந்தை சிலுவை 10-ம் வகுப்பு தேறியவுடன் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து சிலுவையை ஆச்சரியப்படுத்துவது என்று தந்தை, மகன் உறவை abstract-ஆக படம் பிடித்திருப்பது.

புத்தகம் சிலுவை கல்லூரிப் படிப்பு வரை பதிவு செய்கிறது. அடுத்த பாகமான ‘காலச்சுமை’ சிலுவையின் அதன் பின்னான வாழ்க்கையைப் பார்க்கிறது.

தமிழினி வெளியீடு. நான் படித்தவரை இதை ஒரு முழுமையான தலித்திலக்கியமாக விமர்சகர்கள் பார்க்க மறுக்கிறார்கள். குணசேகரனின் ‘வடு’ இன்னும் மூர்க்கமாக தலித்திய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் (அதைப் பற்றி பிறகு). என்றாலும் ராஜ் கௌதமனின் புத்தகம் எனக்குப் பிடிக்கக் காரணம், மிக இயல்பாக ஒரு படைப்பை snapshot-ஆகக் காட்டி படிப்பவரை அடுத்தத் தளத்திற்க்கு நகர்த்துவது.

’காலச்சுமை’ பற்றி பிறகு,

No comments: