Wednesday, December 29, 2004

Delhi

குஷ்வந்த் சிங்கின் Delhi சமீபத்தில் படித்தேன். குஷ்வந்த் சிங்கின் எழுத்துக்கள் என்னைக்க் கவர்வதற்கு காரணங்கள் இரண்டு. ஆங்கிலத்தின் சுஜாதா இவர். சொல்ல வந்த விஷயத்தை எளிமையாக பாமரனுக்கும் புரியும் ஆங்கிலத்தில் சொல்வது. இந்திய வரலாற்றை ஒட்டிய நாவல்களை எழுதுவது(Train to Pakistan, I shall Not hear the Nightingale).

Delhi அவரின் தலைசிறந்த நாவல். 20 வருடங்கள செலவழித்து எழுதப்பட்டது. கதையின் நாயகன்/நாயகி டெல்லி நகரம். ஆண்மையும், பெண்மையும் இனைந்த ஒரு உருவம். இதை ஒரு சுற்றுலா வழிகாட்டி(சீக்கியர்) மூலம் அதன் சொரூபத்தைக் காட்டுகிறார். வழிகாட்டியின் தோழியாக ஒரு அரவாணி. Delhi நகரத்தைப் போன்றவள்.

கதையானது, 1265, சுல்தான்கள்(பால்பன், கில்ஜி போன்றவர்கள்) காலத்தில் தொடங்கி, 1984 அக்டோபர் 30-ந் தேதியோடு முடிகிறது. நகரம் சந்தித்த மகோந்நதங்கள், தோல்விகள், சோகங்கள், துரோகங்கள், போர்கள், அபத்தங்கள், கொடூரங்கள் அந்த அந்த காலப் பாத்திரங்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

குஷ்வந்த் சிங்கின் ஆங்கிலம் வாசகனோடு உரையாடும். நான்கு வார்த்தைகளுக்கு ஒரு வார்த்தை அகராதியைத் தேடி ஓட வைக்காது. ஆனால் அவரின் எழுத்துக்கள் உணர்வுப் பூர்வமானது. மிகச் சிலருக்கே அது சாத்தியமானது. வரலாற்றைப் படித்து அதை அப்படியே வாந்தி எடுக்காமல் கதை மாந்தரின் உணர்வுகள் ஊடாக வரலாற்றைப் போதிப்பது சிங்கின் கை வந்த கலை.

ஒரு உதாரணம் : காந்தியை வேவுப் பார்ப்பதற்கு ஆர். எஸ். எஸ். தலைவர் ஒரு தொண்டரை அமர்த்துகிறார். காந்தியின் செயல்கள் அத்தொண்டருக்குப் பிடிப்பதில்லை. இத்தொண்டர் பிரிவினையில் தன் தங்கையை பாகிஸ்தானியர்களிடம் பறி கொடுத்து, பின் ஆர். எஸ். எஸ்-ல் சேர்ந்து, ஒரு இஸ்லாமியரை அவர் கடை வாசலில் கொன்றவர். காந்தி இஸ்லாமியர்களிடம் காட்டிய பரிவை வெறுப்பவர். 1948 ஜனவரி 30-ம் நாள் காந்தி சுடப்படும்போது, அத்தொண்டர் அருகே இருக்க நேர்கிறது. சுடப்பட்டவுடன் காந்தி சரிய, அத்தொண்டர் சுட்டவனைப் பிடித்து நையப் புடைக்கிறார். எழுதக் கூசும் வார்த்தைகளால் அவனை அருச்சித்து விட்டு, ஒரு இடத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பவரை மக்கள் காரணம் கேட்க,

தொண்டர் : 'என் தந்தை இறந்து விட்டார்.'
மக்கள் : 'நல்ல மகன் நீ...எப்படி இறந்தார், உடல்நிலை சரியில்லையா?'
தொண்டர் : 'இல்லை...அவரைக் கொன்றது நானே!'

இதைப் போன்ற பாத்திரங்களின் செயல்களை அங்கங்கே படிப்பவரின் மனதில் கேள்விகளைக் கேட்க வைக்கும் எழுத்துக்கள் இந்நாவலை மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும்(நான் படித்தது மூன்றாவது முறை).

நாவல், பல பாத்திரங்கள் மூலம் வரலாற்றைப் பார்க்கிறது. முஸாதி லால் சுல்தான்களையும், தைமூர் இந்தியப் படையெடுப்பையும், ஒரு சீக்கியர் ஔரங்கசீப் பற்றியும்(குரு கோபிந்த் சிங்கின் தலை சீவப்படும் நிகழ்ச்சி உட்பட), பின் ஔரங்கசீப் தன் வரலாற்றைப் பதிவு செய்வது, 1857 சிப்பாய் கலகத்தில் நடந்த அட்டூழியங்கள்(ஆங்கில மற்றும் இந்திய தரப்பு- சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' கதையும், இதைப் பற்றிப் பேசியிருக்கிறது), பின் ஆங்கில ஆட்சியில் புது தில்லி எவ்வாறு உருவானது, சுதந்திரக் கலவரங்கள் தொடங்கி, இந்திராகாந்தி கொலையின் இனக் கலவரங்களில், கதை நாயகரின் வீட்டுக் காவலரை தீயிட்டுக் கொளுத்துவதோடு முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, தில்லி நகரம் ஒரு சிறுபான்மை இன மக்களின் முகத்தைக் கொண்டுள்ளது. தனக்கென்ற ஒரு தனித் தன்மையுடன் வாழ்வதிலிருந்து, எந்தக் கலகம் என்றாலும் அடி வாங்குவது வரை.

முகலாயர்கள் சரித்திரம் எனக்குப் பிடிக்கும் என்பதால் தில்லி நகரமும் பிடித்தமானது. செங்கோட்டையில் என் மாமா ஒரு அழகான மண்டபச் சுவர்களில் பொத்தல்களைக் காட்டி அங்கிருந்தவை உயர்ந்தக் கற்கள் என வருத்தப்பட்டப்போது, காரணம் இல்லாமல் யார் மீதோ கோபம் வந்தது.

தில்லி நகரம் உங்களுக்குப் பிடித்தால், இந்தப் புத்தகமும் பிடிக்கும்.

Monday, December 06, 2004

தமிழ் படங்களின் பாடல் காட்சிகள்

அந்தப் படத்தின் பாடல்கள் இனிமை. இளையராஜாவின் கற்பனை சிறகடிக்க எஸ்.பி.பி, எஸ். ஜானகி உயிரைக் கொடுக்க, பாடலாசிரியர்(கள்) தமிழை ஆள, ஒலி நாடா வந்த அன்றே பாடல்கள் முதல் இடத்தைப் பிடிக்க படம் பார்க்கச் சென்ற இரசிகர் கூட்டம் பாடல் காட்சிகள் வந்த உடன், டீக்கடையை நோக்கி ஓடுகிறார்கள். பாடல்கள் காட்சியாக்கப் பட்ட விதம் அப்படி.

பரினாம வளர்ச்சிகள் அடைந்தவை இவ்வுலகில் எத்தனையோ. அமீபாவிலிருந்து, தி.மு.க. கடவுளை வணங்க(யாரும் பார்க்காதபோது?) ஆரம்பித்தது வரை. பாடல் காட்சிகள் திரைப்படத்தின் முதுகெலும்பு. ஹாலிவுட்டிலும் பாடல்கள் இருந்ததுண்டு. 1970களில் கூட John Travolta தோல் சட்டை அணிந்து Grease -ல் கதாநாயகியைப் பார்த்து காதல் சொட்ட(வெய்யிலால் வேர்வையும் சொட்ட) பாடிக் கொண்டிருப்பார். அதன் பிறகு, மக்கள் பாடல்கள் வைத்தால் சீட்டைக் கிழிப்போம் என மிரட்ட பாடல்கள் விடைப் பெற்றன.

ஆனால் தமிழில் பாடல்கள் இல்லையென்றால் திரையரங்குகளை நாய் கூடத் தீண்டாது. நான் பாடல்களுக்கு எதிரியல்ல. அவை படமாக்கப்படும் விதத்திற்கு. 'நினைவெல்லாம் நித்யா' நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். 'கல்யாண பரிசு' சிரீதர் எடுத்த படம். பாடல்கள் ஒவ்வொன்றையும் இளையராஜா இழைத்திருந்தார். படம் ஓடவில்லை. நான் பார்க்கவில்லை. ஆனால் ஆச்சரியப்பட்டேன். பாடல்களுக்காகவாவது ஓடியிருக்கவேண்டும்( உ-ம். 'பயணங்கள் முடிவதில்லை') .

ஒரு 'ஓளியும் ஓலியும்' நிகழ்ச்சியில் 'நினைவெல்லாம் நித்யா' வின் முத்திரைப் பாடலான 'பனிவிழும் மலர்வனம்' பார்த்தபோதுதான், நம் இரசிகர் பெருமக்கள் ஏன் இப்படத்தைத் துரத்தினார்கள் என தெரிந்தது. அற்புதமான இசையை, ஒரு ரெக்கார்ட் டான்ஸ் நிலைக்குப் படமாக்கியிருந்தார்கள். இடுப்பை வளைத்து நாயகனும், நாயகியும் ஆடிக்கொண்டிருக்க எனக்கு கையெல்லாம் ஆடியது, TVயை நிறுத்த.

இது ஒரு பானை சோற்றில் ஒன்று. பலமுறை சூடு கண்ட பிறகு(என் தாயார், 'உனக்குப் பட்டாத் தாண்டா தெரியும்' என்பார் :) ), இப்போதெல்லாம், எனக்குப் பிடித்த நல்ல பாடல்களை திரையில் காண்பதில்லை. ஒலி நாடாவிலோ, குறுந்தகட்டிலோ பதிவு செய்து, கேட்கிறேன்.

Tuesday, November 30, 2004

The Dark Art of Interrogation

சுஜாதாவின் இந்த வார 'கற்றதும், பெற்றதும்' பகுதியில் The Dark Art of Interrogation என்ற கட்டுரையைப் பற்றி எழுதியிருந்தார். வலையில் அதை படிக்க http://www.law.washington.edu/courses/junker/B515_Au04/Documents/Dark_Art.pdf

Monday, November 29, 2004

ஒரு மூன்றாம் உலகக் குடிமகனின் அமெரிக்கக் குழப்பங்கள்

- எங்க பக்கத்து நாட்டை கொம்பு சீவி விட்டு,
- உலகப் போலிஸ்காரராக நடந்து கொண்டு,
- எங்க நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்து,
- உங்க நாட்டுக்கு வர பல கண்டிஷன் போட்டு,
- எங்க நாட்டைப் பற்றி உங்க தொலைக்காட்சியில் தாறுமாறாகப் போட்டு,
- உங்க முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை எங்கள் மேல் திணிக்க முயன்று

கொழுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாடே...

யாருப்பா அது, நாளைக்கு எனக்கு அமெரிக்க தூதரகத்திலே, H1-B விசா இன்டர்வியு, காலையிலே சீக்கிரம் எழுந்திரிக்கணும், அலாரம் வைக்கிறியா?

Monday, November 22, 2004

86 வாருடங்கள் - இறுதிப் பகுதி

கர்ட் ஷில்லிங்(Curt Schilling) என்ற பந்து வீச்சாளர் Red Sox அணியில் இனைந்தபோது, Yankeesஐ வெற்றிக் கொள்வதே எனது இலட்சியம் எனக் கூறினார். அப்போது, யாரும் இவரின் சொல்லை முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், Yankees இவரை இத்தொடரின் முதல் ஆட்டத்தில் மூன்று இன்னிங்ஸிலேயே, 6 ஓட்டங்களைக் குவித்து, உள்ளே அனுப்பிவிட்டனர். மற்றும் வலது முழங்காலில் அடிப்பட்டதால் தொடரில் இனிமேல் இவரால் விளையாட இயலாது என மருத்துவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். எந்த காரணத்திற்காக பாஸ்டன் வந்தாரோ அந்தக் கனவு நிறைவேறவில்லை.

ஆறாவது ஆட்டம் துவங்கும் நாளில் செய்திக் கேட்டவர்களுக்கு இனிய ஆச்சரியம். கர்ட் ஷில்லிங் அன்று பந்து வீசப்போவதாக அறிவிப்பு வெளியானது. பாஸ்டன் மக்கள் இன்றோடு தொடர் முடிந்து விடும் என முடிவுக் கட்டினர். ஆனால் பிண்ணனியில் நடந்தது வேறு.

நடக்க முடியாத நிலையில் கர்ட் ஷில்லிங் மருத்துவர்களை அணுகி, தன்னை பந்து வீசும் அளவிற்கு தயார் செய்யும்படி கேட்க மருத்துவர்களும், முழ்ங்காலில் சிதைந்த பகுதிகளை தைத்து எப்படியோ அவரை தயார் படுத்தி விட்டனர். ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்தே, அவரின் வலது காலிலிருந்து, இரத்தம் உறை வழியே சிந்த ஆரம்பித்தது. இது மேலும் Red Sox வீரர்களை வெறியோடு விளையாட வைத்தது. ஏழு இன்னிங்சில் ஒரு ரன் கூடக் கொடுக்காமல் ஷில்லிங் விடைப் பெற்றப்போது, பேஸ்பால் சரித்திரத்தில் இந்த ஆட்டம் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இதுவரை தொடர்ந்த Yankeesன் நம்பிக்கை சரிய ஆரம்பித்தது. இரண்டு இன்னிங்ஸில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாஸ்டன் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. ஏழாவது போட்டியில் Yankeesஐக் காணவில்லை. David Ortiz 2 ரன்களையும் Jonny Damon 4 ரன்களையும் அடித்து ஆட்டத்தை பாஸ்டன் வசம் இழுத்து விட, சரித்திரப் பிரசித்திப் பெற்ற இத்தொடரை 4 - 3 என்ற கணக்கில் பாஸ்டன் வென்றது.

இத்தொடருக்குப் பின் யார் எதிர் அணியானாலும் Red Soxஐ வெற்றிப் பெறுவது சிரமமே. St. Louisக்கும் அதுவே உண்மையானது. உலகக் கோப்பையை பாஸ்டன் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று 86 வருடங்களாக மக்கள் கண்ட கனவை நிஜமாக்கியது.

இத்தொடரை எழுத ஆரம்பித்தபோது, கட்டுரையை இன்னும் சரியாக அமைத்திருக்கலாம் என தோன்றியது. ஆனால் மனதில் தோன்றியதை அப்படியே வார்த்தைகளில் எழுதிவிட்டேன். இன்னும் சிறிது காலம் சென்று இந்தப் பதிவைப் படித்தால் மீண்டும் அந்த நாட்களை இனிமையாக நினைக்கத் தோன்றும். இப்பதிவைப் படித்தவர்களுக்கு ஒரு பள்ளிக் கட்டுரையைப் படித்த உணர்வு ஏற்பட்டால், நானே பொறுப்பு!.

Tuesday, November 16, 2004

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

தற்சமயம் சி. புஸ்பராஜாவின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' படித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கை இனக் கலவரத்தைப் பற்றி நான் படிக்கும் முதல் புத்தகம். இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை நான் பா. ராகவனைப் போலத்தான். இது வரை ஒரு யோக்கியமான கருத்துக்கள் எதையும் படித்ததில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும், அயோக்கியத்தனமான அரசியல் விளையாட்டுக்களிலும், ஊடகங்களின் விட்டேத்தியான அனுகுமுறையும் இப் பிரச்சினையின் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில்லை.

இவ்வகையில் சி. புஸ்பராஜாவின் புத்தகம் என்னளவில் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். முன்பு படிக்க முயன்ற William McGowan ன் Only Man Is Vile: The Tragedy of Sri Lanka ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் திமிர்த்தனமான பார்வையில் இருந்ததால், பாதிக்கு மேல் அப்புத்தகத்தை படிக்க இயலாமல் தூக்கி எறிந்துவிட்டேன். அனிதா ப்ரதாப் எழுதிய Island of Blood: Frontline Reports from Sri Lanka, Afghanistan and Other South Asian Flashpoints புத்தகமும் சொந்த கதை பேசி ஆயாசம் கொள்ளவைத்தது.

நான் படித்தவரை, சி. புஸ்பராஜா வரலாற்றை மிகத் தெளிவான முறையில் எழுதிச் சென்றுள்ளார். படித்து முடித்த பின்பு பல கேள்விகள் எழும். அப்போது விரிவாக எழுதுவேன்.

இவரைப் போன்று மற்றவர்களும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனரா? அவை பற்றிய விவரங்களைத் நண்பர்கள் தந்தால், உதவிகரமாக இருக்கும்.

Friday, October 29, 2004

86 வருடங்கள் - II

இரு அணிகளும் இறுதி இன்னிங்ஸில் மோதிக் கொண்டிருக்கட்டும், இவ் விளையாட்டின் சில விதிகளைப் பார்ப்போம்.

- ஒவ்வொரு அணியிலும் தலா 10 வீரர்கள்.
- பந்து வீச்சாளர் ஒருவரே. சூழ்நிலை சரியில்லை என்றால் மாற்றப்படுவார்.
- கிரிக்கெட் 20 - 20 போல ஒரு அணி ஒரு இன்னிங்ஸ் முடித்தவுடன் அடுத்த அணி விளையாட வரும்.
- ஒரு இன்னிங்ஸ் மூன்று வீரர்கள் ஆட்டமிழந்தவுடன் முடிவுக்கு வரும்.
- ஒவ்வொரு வீரரும் மூன்று வாய்ப்புகள் பெறுவார். அவை 'ஸ்ட்ரைக்' என அழைக்கப்படும்.
- 'ஸ்ட்ரைக்'-ஆ இல்லையா என்பதை மட்டையாளர் பின்னால் நிற்கும் நடுவர் முடிவு செய்வார். அவரால் முடிவு செய்ய இயலவில்லை என்றாலோ, அல்லது, எதிரணி விக்கெட்கீப்பர்(catcher) கேட்டாலோ, மூன்றாவது புள்ளியில்(third base) நிற்கும் நடுவர் சொல்வதே இறுதியானது.
- மட்டையாளர் தூக்கி அடித்த பந்தை எதிரணி வீரர் பிடித்தால், மட்டையாளர் ஆட்டமிழப்பார்.
- ஒரு புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு செல்வது இரண்டு வகைப்படும் :
1) மட்டையாளர் catch பிடிக்கப்பட்டால் catch பிடித்த பின்புதான், மற்ற புள்ளிகளில் உள்ள வீரர் முன்னேற முடியும்.
2) மட்டையாளர் ஆட்டமிழக்காமல் பந்தை அடித்து விட்டால், அவரும் மற்ற புள்ளிகளில் உள்ள அவரணி வீரர்களும் தங்கள் புள்ளிகளிலிருந்து மற்ற காலியான புள்ளிகளை நோக்கி ஓடலாம். நான்காவது புள்ளியை அடையும் வீரர், அதாவது, சதுரத்தில் ஒரு சுற்று வந்துவிட்டால் அவரும் அவர் அணியும் ஒரு ஓட்டம் பெறுவர். இதனிடையே எதிரணியினர் இவர்கள் புள்ளியில் இல்லாத போது பந்தால் தொட்டுவிட்டால், அந்த வீரர் ஆட்டமிழப்பார்.

படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

ஆட்டத்திற்கு வருவோம்.

முன்பே Yankees மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதைப் படித்தோம். அமெரிக்க பேஸ்பால் சரித்திரத்தில் எந்த அணியும் மூன்றில் தோற்று பின் மீதி நான்கையும் வென்றதில்லை. மேற்கொண்டு படிக்கும் முன், இதை நினைவில் கொள்வது நலம்.

Yankees நான்காவது போட்டியில் 4 - 3 ரன்கள் என்ற கணக்கில் முன்னனியில் இருந்தது. Red Sox வீரர் Bill Mueller அடித்த பந்து தரையில் பட்டு எழும்பிச் செல்ல, அதற்குள் Dave Roberts ஒரு சுற்று முடித்து விட, ஆட்ட ஸ்கோர் சமமானது. Yankees இதை எதிர்ப்பார்க்கவில்லை. அரங்க இரசிகர்களும் இப்போது பைத்தியம் பிடித்தது போல் கரகோஷம் செய்ய(போட்டி நடந்தது பாஸ்டனில்), Red Sox வீரர்கள் புது உத்வேகம் பெற்று 'இரண்டில் ஒன்று' என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆட்ட ஸ்கோர் சமமானதால் 9 இன்னிங்ஸுக்கு மேல் தொடர்ந்தது. ஆட்ட விதிப்படி இனி இரண்டாவதாக ஆட வரும் அணி, சம ஸ்கோரை உடைத்துவிட்டால், வெற்றி பெற்றுவிடும். பாஸ்டன் இரசிகர்கள் இது வரை வேண்டாத தெய்வங்களையெல்லாம் துனைக்கு அழைத்தனர்.

12-வது இன்னிங்ஸ் வரை Yankees-யால் ஓட்டம் எடுக்க இயலவில்லை. இந்த இன்னிங்ஸில் இரண்டாவதாக விளையாட வந்த Red Sox- இன் David Ortiz தன்னை நோக்கி வந்த வேகப்பந்தை தூக்கி அடிக்க அது மைதானத்தை விட்டு வெளியே சென்று இரசிகர்கள் அமரும் இடத்தில் விழுந்தது.

அன்று பாஸ்டன் இரசிகர்களின் உற்சாகக் கூச்சல் New york வரைக் கேட்டிருக்கும்.

Yankees வீரர்களோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த போட்டியில் வென்று தொடரை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தனர். விதி வேறொன்று நினைத்தது. மறு நாள் போட்டியிலும் David Ortiz அணி வெற்றிக்கு உதவினார். இப்போதுதான் Yankees கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தனர்.

எனினும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. காரணம், தொடர் New york நகரத்துக்கு மாறப்போகிறது. இரசிகர் கூட்டம் அவர்கள் பக்கம். வென்று விடலாம். எந்த அணியும் தொடர்ந்து நான்கு வெற்றிகளை எடுக்கப்போவதில்லை.

ஆனால் ஒரு நிகழ்ச்சி Red Sox அணியினரை இறுதி வரை பார்த்து விடுவது என்ற உறுதியைக் கொடுத்தது.

(தொடரும்)

Thursday, October 28, 2004

86 வருடங்கள்

86 வருடங்கள்...

3 தலைமுறைகள் 'ஏன்?' என ஒவ்வொரு அக்டோபர் மாதமும் ஏக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வி. Boston Redsox பேஸ்பால் அணியின் நேற்றைய மகத்தான வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். மேலே செல்வதற்கு முன்...

பேஸ்பால் அமெரிக்காவின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்று. கிரிக்கெட்டின் ஒன்று விட்ட சகோதரன். இரு அணியினருக்கும் தலா 9 இன்னிங்க்ஸ். ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் மூன்று வீரர் வரை ஆட்டம் இழக்கலாம். நான்கு புள்ளிகளை(base) ஒரு வீரர் கடந்தால் ஒரு ஓட்டம். கிரிக்கெட்டில் 6 ரன்கள், இங்கே 1 முழு ரன்(Home Run). அப்போது, மற்ற மூன்று புள்ளிகளில் எத்தனை வீரர் இருந்தனரோ அவ்வளவு ஓட்டங்கள்.

அமெரிக்காவில் இந்தியாவைப் போல் மாநில அணிகள் கிடையா. பணம் படைத்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் அணி அமைத்துக் கொள்வார்கள். பல மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும். இறுதிப் பந்தயங்கள் ஒரு போர்க்களம் போல நடைபெறும். சில அணிகள் பரம எதிரிகளாக மோதுவர்.

Boston Redsox-ம், Newyork Yankees-ம் அவ்வாறான மனநிலை கொண்ட அணிகள். நம் இந்திய, பாகிஸ்தானிய அணி மோதலைப் போன்றவை. சமயங்களில் அடிதடியில் முடியும். Newyork Yankees 27 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது(அமெரிக்க/கனடா அணிகள் விளையாடுவதை 'உலகக் கோப்பை' என அழைத்துக் கொள்வர் :) ) . Boston Redsox இறுதியாக வென்றது 1918-ல். Yankees -ம் அதே பகுதியில் இருப்பதால் ஒருவரை வென்றே மற்றவர் அடுத்த சுற்றுக்கு செல்ல இயலும். இதுவரை Yankees கையே மேலோங்கி இருந்தது. இந்த வருடம் வரை.

World Seriesக்குச் செல்லும் போட்டியில் இவ்வருடமும் Yankees -ம், Redsox -ம் மோத ஆரம்பித்தன. மொத்தம் ஏழு போட்டிகள். நான்கு போட்டிகளில் வெல்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் மூன்றுப் போட்டிகளில் Yankees மிகச் சுலபமாக வென்று, நான்காவது போட்டியிலும் இறுதி இன்னிங்ஸில் மூன்று Redsox வீரர்கள் அவுட் ஆனால் போதும் என்ற நிலையில்தான் 'நமக்கும் மேலே ஒருவரடா' என்ற வரி உண்மையாக ஆரம்பித்தது.

(தொடரும்)

Tuesday, October 05, 2004

ஜெயலலிதா-கரண் தாப்பர்

பத்ரியும், ராஜாவும் மிகச் சரியாக இந்த நேர்காணலில் பெரும்பாலானவர்களின் பார்வையைப் பதிவு செய்திருந்தனர். ஜெயலலிதாவிடம் முதிர்ச்சியை எதிர்பார்ப்பது கலைஞரிடம் 'கடவுள் இருக்கிறார்' என வாக்குமூலம் வாங்குவது போலத்தான். அதைப் பற்றி நான் பேசி இப்பதிவை நிரப்பப் போவதில்லை. என்னுடைய கேள்வியெல்லாம், தாப்பரின் சில கேட்காத/தேவையில்லாத கேள்விகளைப் பற்றித்தான்.

கேட்காத கேள்விகள்
--------------------------
1) ஜெ-வின் அரசு ஊழியர்கள் மீது தொடுத்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி.
2) அவரின் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி.
3) பாஜக அரசைக் கவிழ்த்து விட்டு, பின் இந்தத் தேர்தலில் அவர்களுடன் கூட்டு வைத்த முரண்பாடு
4) முக்கியமான தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வது.
இன்னும் பல...

தேவையில்லாத கேள்விகள்
-----------------------
1) சோதிட நம்பிக்கை
2) நல்ல நேரம் பார்ப்பது.
3) ஜெ-வின் பெயரில் ஒரு 'a' சேர்த்தது.

இவர் பேட்டி கண்டது, ஒரு முதலமைச்சரை. தனியொரு பெண்மணியை அல்ல. ஜெ-வும் இவர் பாட்டுக்கு ஆடினார் என்று தான் சொல்லவேண்டும். ஊடகங்கள் ஏன் ஜெ-வின் செயல்களைத் தவறாகப் பார்க்கின்றன என்ற கேள்விகளுக்கு, ஜெ-வின் பதில்கள் சிறு பிள்ளைத்தனமாக(சினிமாத்தனமாக?) இருந்தன. இனிமேல் ஜென்மத்துக்கும் எந்த பேட்டிகளுக்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ரசித்தது
-------
1) பொறியில் மாட்டிய ஜெ-வை கரண் சீண்டிய விதம்.
2) ஜெ-வின் குறுக்கீடுகளை சட்டை செய்யாமல் கரண் தன் கேள்விகளிலேயே குறியாக இருந்தது.

Wednesday, September 29, 2004

வரலாறு - செய்திதாள்கள் வழியே

From Beirut to Jerusalem படித்தவர்களுக்கு Tom Friedman-ஐ தெரிந்திருக்கும். 1983-ல் மத்திய கிழக்கு நாடுகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்தமையைப் பாராட்டி புலிட்ஸர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் அனைத்துக் கட்டுரைகளும் The New york Times-ல் எழுதப்பட்டன. ரொம்ப நாளாக அவைகளைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். The New york Times-ல் பழைய இதழ்களைப் படிக்க சொத்தையே எழுதி வைக்கச் சொன்னார்கள்.

அச்சமயத்தில், பாஸ்டன் பொது நூலகத்தினர் கும்பிடப் போன தெய்வம் போல குறுக்கே வந்தனர். நான் இந்நூலகத்தில் ஒர் அங்கத்தினர்(இங்கே உள்ள தமிழ் புத்தகங்கள் பகுதியைப் பார்த்து, இரத்தக்கொதிப்பு ஏறியதைப் பற்றி பின்பு). அவர்களை கணினி மூலம் தொடர்புக் கொண்டுக் கேட்டப்போது, அடுத்த 5 நிமிடங்களில் எனக்கு ஏறத்தாழ 200 வருடத்திய The New york Times மின் படிமங்களைக் கொடுத்து விட்டனர்-இலவசமாக. அற்புதமான வரலாற்றுப் பதிவுகள். Tom Friedman கட்டுரைகளை முடித்த பின்பு இரண்டாம் உலகப் போரைப் ப்ற்றி என்ன எழுதியுள்ளனர் என்பதைப் படிக்க வேண்டும்.

இந்தியாவில் இது போல் The Hindu, Indian Express, சுதேசமித்திரன், தினம்ணி போன்ற பத்திரிக்கைகளை நூலகங்கள் சேகரித்து வைத்துள்ளனவா?

Monday, September 06, 2004

நன்றி இளையராஜா-III, இறுதிப் பகுதி

இளையராஜாவின் Nothing But Wind-ம் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அமம்க்களுக்கு முதலில் புரியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும். நான் பாரிஸில் ஒர் இசைத் தட்டுக்கள் விற்பனை நிலையத்திற்க்கு சென்ற போது, அங்கு விற்கும் இசைத் தட்டுக்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பிரெஞ்ச் மொழியில் அச்சிடப்பட்டிருந்தன(Michael Jackson, U2 உள்பட). உலகமறிந்த பாடகர்களின் இசைத்தட்டு விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மக்கள் வாங்கியிருப்பர். ஆனாலும் மக்களை மதித்து, அம்மொழியில் தகவல்களைப் பரிமாறுவது, மேலும் மக்களை ஈடுபட வைக்கும்.

இளையராஜாவின் இசைப்பயணம் உச்சத்தை அடைந்தது Royal Philharmonic Society-ல் அவர் இயற்றிய Symphony. How to Name it மற்றும் Nothing But Wind ஒரு வகையில் Concerto வகையைச் சேர்ந்தவை(அன்பர்கள் கவனத்திற்கு, Concerto என்று நான் சொல்வது, ஒரு வகையான குறிப்பிடலுக்கே. மேற்கத்திய இசை வல்லுனர்கள், என் பார்வையை மறுக்கலாம்.). Symphony அதன் அண்ணா. தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ராக சிக்கல்களில் திளைப்பது ஒரு தனி அனுபவம். Beethoven இன் 9 சிம்பொனிகளையும் கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் முறையும் புதிது புதிதான இசைப் பாதைகள் தெரிகின்றன.

Symphony முயற்சிக்குப் பிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதை இளையராஜாவால் பூர்த்தி செய்ய முடிந்ததா என்றால் என்னைப் பொறுத்தவரை, இல்லை. காரணம், இத்தகைய symphony-யை எழுதும் ஒரு இசையமைப்பாளரின் மனம் மீண்டும் திரை இசையமைக்க முயல்வது, நீர் மூழ்கி கப்பலை, வாய்க்காலில் ஓட்டுவது போலத்தான்.

அதற்காக இவர் இசை சிறப்பாக இல்லை என பொருள் கொள்ளவிலலை. எதிர்பார்ப்பு அதிகமானது என்றுதான் நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவையும் இது போல் பலர் கேட்டிருக்கின்றனர். அவர் கூறியபடி, அவர் மாறவில்லை. இசையை எதிர்பார்க்கும் என்னைப் போன்றோர் மாறிவிட்டனர்.

ஆனால் இவரின் பிண்ணனி இசை பல உயரங்களைத் தொட்டது. அதே சமயம், ஏ. ஆர். ரகுமானின் ஆர்ப்பார்ட்டமான இசை, திரையுலகை ஆக்கிரமிக்க துவங்கியது. மணிரத்னம், பாரதிராஜா மற்றும் பல திரை வல்லுநர்கள்-இவரின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள்-இவரை விட்டு விலக ஆரம்பித்தனர்(பாலு மகேந்திரா விதிவிலக்கு).

இவர் ஆரம்பித்த காலங்களில் மக்கள் மாற்றத்தை விரும்பியது போல, இப்போதும் விரும்பினார்கள். இதை நான் சொல்வதால் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. ஓட்டப்பந்தயத்தில், இன்னொரு போட்டியாளர் முன்னணியில் இருப்பவரை நெருங்குவதைப் போலத்தான்.

1996 அழகிப் போட்டிக்கு இவர் இசையமைத்தது, 51வது சுதந்திர தின நிகழ்ச்சியை நடத்தியது என திரைக்கு வெளியே இவரது சாம்ராஜ்யம் விரிகிறது. இப்போது திருவாசக சிம்பொனி வரை வந்துள்ளது. இன்னும் வரும் என நம்புகிறேன்.

என் தாழ்மையான அபிப்பிராயத்தில், இவரின் கட்டுக்கடங்கா திறமையை, திரைப் படங்களோடு நிறுத்துவது நல்லதல்ல. மக்களின் ரசணையை, இந்திய முறை சங்கீதத்தை, அனைவரும்(இந்தியர், மற்றும் அயலர்) ரசிக்கும் வண்ணம்(Enya, Celtic Music கலைஞர்கள் போல) எடுத்துச் சொல்ல இளையராஜாவை விட தகுதியானவர் என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

(முற்றும்)

பின் குறிப்பு: இக் கட்டுரையை என் பார்வையில் இளையராஜாவின் இசை எவ்வாறு இரண்டு தலைமுறைகளைப் பாதித்தது என்பதை முடிந்த வரை உணர்ச்சிவயப்படாமல் பதிவு செய்ய முயன்றேன். பல முக்கியமான தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.

பல விவரங்களை, பத்திரிக்கைகளில் நீங்கள் படித்திருக்கலாம். அவையெல்லாம் மீண்டும் எழுதி சுவையற்றதாக ஆக்க விரும்பவில்லை. இளையராஜாவின் இசை சரித்திரத்தில் என் கட்டுரை ஒரு புள்ளி மட்டுமே.

இப் பகுதியை படித்து, கருத்துக்களும், ஊக்கமும்(ராஜ்குமார், ராசா மற்றும் பலர்) தந்த அன்பர்களுக்கு என் நன்றி.

Saturday, September 04, 2004

படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

கொஞ்ச நாளாக வலைப்பூவில் உள்ளிட இயலவில்லை (வீட்டில் வரப்போகும் குழந்தைக்காக அறையை தயார் செய்துக்கொண்டிருக்கிறோம்). தற்பொது படித்துக் கொண்டிருக்கும் Richard Clark எழுதிய Against All Enemiesஐ பற்றி சில வரிகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.

Thursday, August 26, 2004

வலைப்பூக்கள் - 15 நிமிட புகழா?

வலைப்பூக்களைப் பற்றி சுஜாதாவின் கருத்து வலைப்பூக்கள் எழுத்தாளர்களிடையே தீவிரமாக அலசப்பட்டு வருகிறது. வலைப்பூ பதிப்பவன், படிப்பவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்கள்:

வலைப்பூக்கள் ஒருவருக்கு diary போல இருக்கிறது. அவரவர் கருத்துக்கள் பதியப்படுகின்றன. ஆரம்பக்காலங்களில் அவர்களின் கருத்துக்களை மற்றவருக்கு பரிமாறுவதில் ஆர்வம் இருந்து, அறை கூவியிருக்கலாம். இதைப் பற்றி பாரா கூட தன்னுடைய 9 கட்டளைகளில் ஒன்றாக, நகைச்சுவையாக, செய்யாதீர்கள் என அறிவுறுத்தியிருப்பார்.

வலைப்பூக்கள் பரிணாம வளர்ச்சி பெற பெற அதன் முகமும் மாற ஆரம்பித்தன. 'சொந்த கதை சோகக் கதை' மட்டும் இல்லாமல், தங்கள் துறை, ஆர்வம் சார்ந்த பகுதிகளைக் குறித்து விரிவாக செய்திகளைப் பரிமாற ஆரம்பித்தார்கள். இது தான் என்னைக் கவர்ந்த மிகப் பெரிய அம்சம் என்பேன். இலக்கியம், மார்க்கெட்டிங், விளையாட்டு, சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, சரித்திரம் போன்ற பல துறைஞர்களின் கருத்துக்கள் வலைப்பூக்கள் மூலமாகக் கிடைக்கின்றன. ஆரோக்கியமான விவாதங்கள், பரிமாற்றங்கள், நகைச்சுவைகள் போன்றவை எளிதாக உலகத்துக்கு அளிக்க முடிகிறது. நிச்சயம் இதில் 15 நிமிட புகழ் இல்லை.

பின்வருபவை நான் வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள். இதில் எவர்க்கும் முன்னுரிமையோ அல்லது மற்ற வலைப்பூக்கள் தரமாக இல்லை என்றோ அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்தவைகளையே நான் பட்டியல் இட்டுள்ளேன்(வரிசைகள் தரத்தை நிர்ணயிக்கவில்லை, தரவரிசை, படிப்பவர் சுதந்திரம்):

-சாரு நிவேதிதா: விகடன் 'கோணல் பக்கங்கள்' பகுதியிலிருந்தே, இவரை எனக்குப் பிடிக்கும். தான் கொண்டுள்ள சிக்கலான கருத்துக்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம், சமூகம் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் போன்றவற்றை தயங்காமல் பரிமாறிக்கொள்பவர். .

-பாரா: சாரு நெருப்பு என்றால், இவர் குளிர். எந்தக் கருத்தையும் ஆணித்தரமாக, அதே சமயம் அடக்கமாக, நகைச்சுவையாக எடுத்து வைப்பதில் கில்லாடி.

-பத்ரி:அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு, அறிவியல் கட்டுரைகள் இவரது ஸ்பெஷாலிட்டி. தீர்க்கமாக ஆராய்பவர்.

-ராஜ்குமார்:கவிதைகள் இவரது பலம். இவரது 'குசேலர் நண்பர்' பற்றியக் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று.

-பி.கே. சிவக்குமார்: திண்ணையில் இவர் கட்டுரைகள் நிறையப் படித்திருக்கிறேன். நாட்டு நடப்பு இவரது திறமை.

-அருண் வைத்தியநாதன்:பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவைத் ததும்ப எழுதுவதில் கில்லாடி.

-ஈழநாதன்: இலங்கை இலக்கியவாதிகளைப் பற்றி இவர் எழுதும் தொடர் மிக்க பயனுள்ளது. வலைப்பூவாளர் வந்தியதேவனுடன் இவர் நிகழ்த்திய 'இந்திய அமைதிப்படையின் செயல்கள்' பற்றிய எதிர்வினைகள் ஆரோக்கியமாக ஆரம்பித்து, தனிமனிதத் தாக்குதலில் முடிந்தது சோகம்.

-வந்தியத்தேவன்: இவரின் கப்பல் கட்டுரைகள் மிகப் பிரசித்தம். அதைத் தவிர 'இந்திய அமைதிப் படை' பற்றிய கட்டுரைகளும் உணர்வு/அறிவுபூர்வமானவை.

-தேசிகன்: சுஜாதாவுக்காக வலைப்பக்கம் ஆரம்பித்து, அவரின் எழுத்துக்களைப் பதித்தவர். சுஜாதா சாயலில் சிறுகதைகள் எழுதினாலும், திருவரங்கத்தைப் பற்றிய இவரின் பதிவுகள் மிக முக்கியமானவை.

-ரூமி:சிறந்த எழுத்தாளர். இஸ்லாம் பற்றிய தெளிவான கட்டுரைகள் பல எழுதுகிறார். மொழிப்பெயர்ப்பு பற்றிய இவரது கட்டுரையைப் படித்து விட்டு, நாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.

-எஸ். இராமகிருஷ்ணன் : தமிழை ஆளத் தெரிந்தவர். திருட்டு நடந்த வீடு, தோல் பாவைக் கூத்து போன்ற கட்டுரைகள் மனதில் நிற்பவை.

-வெங்கடேஷ்: 'நேசமுடன்' என்ற மடல் இதழில் இவர் பதியும் செய்திகளின் வீச்சு, பொறாமைக் கொள்ள வைக்கும். இவரின் கதைகளைப் படித்ததில்லை.

இவர்களைத் தவிர்த்து, ரஜினி ராம்கி, அனாமிகா, சித்ரன், காசி(தமிழ் மணம் http://www.thamizmanam.com வலைப்பூக்கு சொந்தக்காரர்) போன்றோரின் வலைப்பக்கங்களில் பல உபயோகமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மற்றவர்களின் வலைப்பூக்களுக்குள் இப்போதுதான் போக ஆரம்பித்திருக்கிறேன்.

என் முடிவில் வலைப்பூக்கள் உதிரப் போவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இதன் பரிணாம வளர்ச்சி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லலாம். அவை இலக்கியப் பத்திரிக்கைகள் வெகு ஜனங்களுக்குச் செல்லாத குறையை நீக்கிவிடும்.

Tuesday, August 24, 2004

நன்றி இளையராஜா - II

மேலே தொடரும் முன், இக்கட்டுரை, என் நினைவுகளிருந்து எழுதுகிறேன். பிழையிருப்பின், சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வேன்.

1980-லிருந்து இளையராஜாவின் இசையில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் தென்பட்டது. கர்னாடக, கிராமிய, மேற்க்கத்திய இசைகளை கலந்து fusion பாணியில் அமைக்கத் தொடங்கினார். 'நிழல்கள்' ஒரு சிறந்த உதாரணம். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா ஆகியோர் இவரிடம் தங்கள் படங்களின் இசைப் பகுதியைக் கொடுத்து விட்டு ஓதுங்கிக் கொண்டனர். அதன் பின், இவர் பெயர் Title Card-ல் வரும் போதெல்லாம் திரையரங்குகளில் கைத்தட்டல் ஆர்ப்பரிக்கும்(இன்றும் அது நடக்கிறதா?).

1985- 86-ல் How to Name It? வெளியிடப்பட்டது. தமிழ் இசை உலகில் அது ஒரு புதிய முயற்சி. அப்போதைய பெரு நகரங்களைத் தவிர அது மக்களை சென்று அடையவில்லை. முதலில், இளையராஜாவின் இசை திரைப்பட இசையாகத்தான் மக்கள் பார்த்தார்கள். இரண்டாவது, How to Name it வகை இசை, கேட்க கேட்கத்தான் அதன் நுணுக்கம் புரியும். மூன்றாவது, இசை நம் தமிழ் உலகில் சினிமாவோடு தான் தொடர்புப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது(இன்றும் அதே நிலைதான்). How to Name it வடிவம் இல்லாத உருவெளி. அந்த இசையில் உள்ளே துளைத்துத்தான் அநுபவிக்க இயலும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பாலு மகேந்திரா 'வீடு' படத்தில் How to Name it- ஐ மிகத் திறமையாக உபயோகப்படுத்தியிருப்பார்.

How to Name it வந்த காலத்தில் marketing-ம் இப்போது போல் aggressive கிடையாது. ரஹ்மானின் 'வந்தே மாதரம்'க்குக் கிடைத்த விளம்பரம் இதற்கு இல்லை. உதாரணத்திற்கு, How to Name it ஒலி நாடா, தமிழகத்தில் விற்கும் போது, அதைப் பற்றிய குறிப்புகள் தமிழில் பதிவாகியிருக்க வேண்டும். இல்லை. என்னைப் போன்ற, தீவிர ரசிகர்களுக்கே அதன் வடிவம் புதிது. இதன் மதிப்பு அபாரம், ஆனால் அன்று அதை உணர்ந்த தமிழ் சமுதாயம் கொஞ்சம் குறைவே.

துரதிருஷ்டவசமாக, இந்த நேரத்தில் தான் வைரமுத்துவோடு கருத்து வேற்றுமை ஏற்ப்பட்டது. நஷ்டம் தமிழ் இசையுலகுக்குத்தான். மற்ற பாடலாசிரியர்கள் அந்த இடத்தை நிரப்பினாலும் அப்போதைய இளைஞர்களை ரசிக்க வைத்ததில் பெரும் பங்கு இந்தக் கூட்டணிக்குத்தான். இவர்களின் கருத்து வேற்றுமையினால் பாரதிராஜாவும் பிரிந்தார். பின்பு பாரதிராஜா இனைந்தாலும் அது முன் போல் சிறக்கவில்லை. அதை நிவர்த்தி செய்ய மணிரத்னம் வந்தார். பாரதிராஜாவின் படங்களும் தரத்தை இழக்க ஆரம்பித்ததும்(வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே போன்றவை விதிவிலக்கு) இச்சமயத்தில்தான்.

இச் சூழ்நிலையில் Nothing but Wind வந்தது. How to Name it- ல் வில்லினால் காற்றை வளைத்தவர், இம்முறை காற்றினால் காற்றை இயக்கவைத்தார்.

(தொடரும்)

Monday, August 23, 2004

நன்றி இளையராஜா - I

விகடனில் 'தமிழுக்கு தாலாட்டு' என்ற தலைப்பில் இளையராஜாவின் திருவாசக சிம்பொனி முயற்சி பற்றி படித்தேன். நினைவுகள் பின்னோக்கிச் சென்று முதன் முறை அவர் இசையமைத்து கேட்ட பாடல்(கள்) தோன்றின.
1975 - 76ல் அன்னக்கிளி வெளி வந்தது. 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே', 'மச்சானைப் பார்த்தீங்களா' இரண்டும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்காத காலம். எனக்கு வயது 8. அப்போதே இவர் இசையுலகில் கோலோச்சப் போகிறார் என்று எனக்குத் தெரியும் என்று ஜல்லியடிக்கமாட்டேன்.

அச்சமயம் எம்.எஸ். விஸ்வநாதனின் அரசாட்சி நடந்த நேரம். இசையுலகில் கர்னாடக சங்கீததை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வந்தபோது, இவர் கிராமிய இசையின் அடிப்படையில் மெட்டுகள் எழுதினார். மக்கள் மாற்றங்களை விரும்பினார்கள்.

அன்னக்கிளிக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க படங்கள் அமையவில்லை. 'தீபம்' போன்ற டப்பா படங்களுக்கு இசை அமைத்து, 'காசு போட்டால் பாடும் ஜுக் பாக்ஸ் போல ஆகிவிட்டார்' என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்யும் அளவிற்கு 'பெயர்' வாங்கினார். அவரை சொல்லிக் குற்றமில்லை. அவரின் கற்பனையை மதிக்காமல், எம்ஸ்வி பாணியில் அவரை இசை அமைக்க தயாரிப்பாளர்கள் வற்புறித்தினார்கள். பத்தோடு பதினொன்று ஆனார்.

1978-ல் ஆபத்பாந்தவனாக பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் திரையுலகில் கால் பதித்தார்கள். 16 வயதினிலே வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. 'செந்தூரப் பூவே' என்று எஸ். ஜானகியின் குரலில் ஒலித்த ஏக்கம் இளம் பெண்களைக் கட்டிப் போட்டது(இப் பாடலை எழுதியது, கங்கை அமரன் - எங்கே சார் இது போன்ற பாடல்கள்?! ), 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' என்று கனவான்கள் ஆடினார்கள்(இப் பாடலில், ஒரு, மேற்கத்திய சாயலில், வயலின்கள் பின்னனியில் கிராமிய புல்லாங்குழலை ஓட விட்டிருப்பார் - மெய்மறக்கும்). பின் 'உதிரிப்பூக்கள்'. இதில் அவரின் பின்னனி இசையின் முயற்சி தமிழ் சினிமாவின் மைல் கல்(விஜயன் தன் மச்சினியைத் தவறாகப் பார்க்கும் இடங்களில் வரும் மேளம்...Haunting). அதுவரை உணர்ச்சிகரமான காட்சிகளில் 1000 வாத்தியங்களை கதற விட்டு நம் காதுகளையும் செவிடாக்கி விட, இவர் ஒற்றை பியானோவில் பார்ப்பவர் மனதை பிசைந்தார்.

இவ்வளவு புதுமைகள் செய்தும் கிராமிய இசையமைப்பாளராகவே முத்திரைக் குத்தப்பட்டார். இதைத் தகர்க்கவே 'சிகப்பு ரோஜாக்கள்', 'ப்ரியா' வந்தது. BoneyM சாயலில் பாடல்கள் இருந்தாலும் இவரை கிராமிய வட்டத்திலிருந்து வெளிக் கொணர்ந்தது. 'நினைவோ ஒரு பறவை' பாடலில் வரும் Piano Solo மனதைச் சில்லிட வைக்கும்.
(தொடரும்)

Monday, August 16, 2004

நதியின் ஆழம்=மனதின் ஆழம்

Mystic River சமீபத்தில் பார்த்தேன். Dirty Harry புகழ் ஈஸ்ட்வுட் இயக்கிய படம். கதை Boston நகரை சுற்றி நடக்கிறது. மூன்று நண்பர்களைச்(டேவிட், ஷான், ஜிம்மி) சுற்றி பின்னப்பட்ட கதை. படம் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது துவங்குகிறது. மூவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேர் காவலர்கள் போல நடித்து, டேவிட்டை தங்கள் காரில் அழைத்துச் செல்கின்றனர். உண்மையில், அவர்கள் சிறுவர்களை வண்புணரும் கயவர்கள். டேவிடும் அதற்கு பலியாகிறான். அன்று முதல் அந்த நண்பர்களுக்குள் ஒரு திரை விழுகிறது.

காலச்சக்கரம் சுழ்ன்று தற்காலத்திற்க்கு வருகிறது. ஜிம்மி ஒரு மளிகைக்கடைக்கு சொந்தக்காரனாகிறான். ஷான் காவல் துறை அதிகாரியாகிறான். டேவிட் அடக்கமான குடும்பத்தலைவனாகிறான். அவ்வப்பொது, அவனுக்கு நடந்தது மண்ணிலிருந்து புழு போல எட்டிப் பார்க்கின்றது. ஒவ்வொரு நண்பனும், வாழ்க்கையை சிலுவையாக சுமக்கின்றான்.


இவர்கள் மூவரையும் ஒரு கொலை மீண்டும் நெருங்க வைக்கிறது. அதன் பின் நடப்பவை, மனித மனத்தில் உள்ள ஆழம் நதியின் ஆழத்தை விட அபாயகரமானது என்பதை விளக்குகிறது.


ஜிம்மியாக நடித்திருப்பவர் Sean Penn. ஆர்ப்பார்ட்டமில்லாத நடிப்பு. இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே, நடிப்புக்கு சவால் விடுபவை. இந்தப் படத்திற்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். Dead Man Walking படம் இவரை திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தைப் பற்றி பிறகு.


டேவிடாக Tim Robbins. இவருடைய The Shawshank Redemption நான் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று. Sean Penn போலவே சவால் விடும் பாத்திரங்களை ஏற்பவர். 2004-ம் வருட சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


ஷானாக நடித்திருப்பவர் Kevin Bacon. இவர்தான் இந்த படத்தின் ஆச்சரியம். இவர் நடித்த சில படங்களை பார்த்திருக்கிறேன். சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் இதில் பிராயச்சித்தம் செய்து விட்டார் என்று சொல்லலாம். நம் சில தமிழ் நடிகர்கள் போல, நல்ல இயக்குனர்கள் இவரின் திறமையை தட்டி எடுப்பார்கள் போல. இறுதிக் காட்சியில், பிரிந்த மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் இடத்திலும், ஜிம்மியிடம் இயலாமையுடன் "டேவிடின் மகனுக்கும் $500 மாதாமாதம் அனுப்ப போகிறாயா?" என கேட்கும் இடங்களும் மனதை ஒரு நொடி பிசையும்.


இந்த மூன்று திறமைசாலிகளையும்(மூவருமே, இயக்குனர்கள் கூட) சேர்த்த பெருமை, Clint Eastwood-ஐ சேரும். Dirty Harry மூலம் உலகமெங்கும் புகழ் அடைந்த இவர், சிறந்த இயக்குனரும் ஆவார். இவர் நடித்து, இயக்கிய Unforgiven-ம் ஆஸ்கர் வாங்கியது. அதன் பிறகு குறிப்பிடத்தக்க படங்களை, இவரும் கொடுக்கவில்லை. Mystic River-ல் அத்தனைக்கும் பிராயச்சித்தம் செய்து விட்டார். விருதுப் பெற்ற Tim Robbins-ம், Sean Penn-ம் இவரை மேடையில் புகழ்ந்த போது, ஒரு சிறு புன்னகையுடன், அடக்கமாக அமர்ந்திருந்தார்.


ஹாலிவுட் சரித்திரத்தில் முக்கியமான ஒரு படம்.

Monday, August 02, 2004

பார்த்த இரு படங்கள்

சென்ற வாரம் The Bourne Superamacy மற்றும் Mystic River பார்த்தேன். அவைகளைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம்...பார்க்கலாம்.

Wednesday, July 28, 2004

தமிழ் புத்தகங்கள்

தமிழில் வரும் நல்ல புத்தகங்களை, -குறிப்பாக புனைவுக்கதைகள்- பெரிய பத்த்ரிக்கைகளில் யாரும் அடையாளம் காண்பிப்பதில்லை.  சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஆராய்ச்சி, கவிதை சம்பந்தமாக நிறைய எழுதியுள்ளார்.  பிறகுதான் திண்ணை.காம் படிக்க ஆரம்பித்தேன்.  ஜெயமோகன் உட்பட பலர் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி மதிப்புரை எழுத ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.  பதிப்பகங்கள் பல இன்னும் 1970-களிலே இருக்கின்றன.  அமேசான்.காம் போல தமிழ் புத்தகங்கள் விற்பவர் எவரும் இலர்.  நான் வசிப்பதோ அமெரிக்காவில்.  இந்தியாவிலிருந்து புத்தகங்கள் கால் விலை என்றால் தபால் செலவு முக்கால்.
இதனிடையே, ஜெயமோகன் எழுதிய ஒரு மதிப்புரையில், புத்தகங்கள் கிடைக்கும் இடம் என்று 4 முகவரிகளைக் கொடுத்திருந்தார்.  அனைவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன்.  திலீப் என்பவர் அடுத்த நாளே பதில் அனுப்பினார்.  இவ்விடத்தில் நம் பதிப்பகத்தாரின்  வியாபார வேகத்தையும் சொல்ல வேண்டும்.  மின்னஞ்சலில் தொடர்ப்பு கொண்டால், ஒன்று அது காலாவதி ஆகியிருக்கும்.  இல்லை  கிணற்றில் போட்ட கல்லாகும்.  திலீப் மறுநாளே, பதில் எழுதி, ஆச்சரியப்படுத்தினார்.
உடனே, அசோகமித்திரனின் சிறுகதை தொகுதிகள், புலிநகக்கொண்றை, ராஜ் கௌதமன் எழுதிய காலச்சுமை, சிலுவைராஜ் சரித்திரம் முதலிய புத்தகங்களை வாங்கினேன்.  திலிப் அவர்கள், புத்தகங்களை என் சகோதரரின் பெங்களூர் முகவரிக்கு அனுப்பி வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தும் வரை என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு வைத்த்திருந்தார்.  மறுபடியும் அவர் கொடுத்த பட்டியலில் இருந்து,ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுதிகி ராஜநாராயனணின் சிறுகதைகள் முழுத்தொகுதிபுஷ்பராஜாவின் ஈழ போரட்டத்தில் எனது சட்சியம் ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் ஜெயமோகனின் காடுகாலவரிசைபடுத்தப்பட்ட பாரதி படைப்புகள்(1 - 4 தொகுதிகள்)T ஜானகிராமனின் சிறுகதைகள் முழுத்தொகுதிஆக மொத்தம் ரூ4000/- சொச்சத்துக்கு வாங்கினேன்(மொதத செலவும் என் சகோதரருடையது :-) ). 
மனம் திருப்தியாக இருந்தது, தமிழில் இவ்வளவு மகத்தான தொகுதிகளை வாங்கியதில்.  அடுத்த முறை ஊர் செல்லும்போது, எடுத்து வருவதாக முடிவு செய்துள்ளேன்.

Saturday, July 24, 2004

Feast of the Goat

Mario Vargas Lloasa-வின் அற்புதமான புத்தகங்களில் ஒன்று.  சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களின் மூலமாக எனக்கு அறிமுகமான எழுத்தாளர்.  ஸ்பானிய மொழியில் எழுதும் எழுத்தாளர்களில் இவரும் Gabriel Garcia Marquez-ம் முக்கியமானவர்கள்.

கதை த்ருஃலோ என்ற டொமினிகன் சர்வாதிகாரியின் ஆண்ட காலத்தையும்(1940- 60கள் ஆரம்பம்) அவர் கொல்லப் பட்டபின் நடந்த கொடூரங்களைப் பற்றியும் பேசுகிறது.  லோஸாவின் திறமையான கதை அமைப்பில், புததகம் நம்மை கட்டிப் போடுகிறது.  ஆங்கில மொழி பெயர்ப்பும் அதற்கு ஒரு காரணம்(சமீபத்தில் நாகூர் ரூமியின் கால்வினோ கதைகளை மொழி பெயர்தத விதம் பற்றி எழுதிய கட்டுரை இங்கே நினைவுக்கு வருகிறது).

லோஸா கதையை மூன்று கோணங்களில் விளக்குகிறார்.  முதல் கோணம், யுரானிதா மூலம்.  இவள் தந்தை த்ருஃலோவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து, அந்த சர்வாதிகாரியால் பதவி இறக்கப்பட்டவர்.  யுரானிதா அவரை 35 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறாள்.  இப்பொது அவள் தந்தை ஒரு செல்லாக்காசு.  யுரானிதாவுக்கு அந்நிலை ஒரு குரூரம் கலந்த திருப்தியை தருகிறது.  தந்தையை சந்தித்து பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டுகிறாள்.  தந்தையோ பாம்பைக் கண்டதைப் போல் நடுங்குகிறார்.

இரண்டாவது கோணம் த்ருஃலோவை கொலை செய்யக் காத்திருப்பவர்கள் மூலம்.  இந்த கும்பலில் இராணுவ அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஏன் கொலை செய்ய முடிவெடுத்தார் என்பதை விளக்கும் கோணம் இது.

இரண்டாவது கோணத்தின் நீட்சியாக த்ருஃலோ கொலை செய்யப்பட்டபின் அவரது மகன் பொறுப்பேற்று, கொலையாளிகளைப் கண்டுப்பிடித்து சித்திரவதை செய்வது.  இரண்டு பேர்களைத் தவிர மற்ற அனைவரும் பிடி படுகிறார்கள்.   சித்திரவதை முறைகள் புத்தகத்தில் விரிவாக இடம் பெறுகின்றன.  இருதய பலவீனர்கள் படிக்காதிருப்பது நலம்.   முழு விவரங்களும் எழுத இயலவில்லை என்று லோஸா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மூன்றாவது கோணம் த்ருஃலோவின் இறுதி நாள்.  அவரின் காலை உடற்பயிற்சி முதல் இரவில் நெடுந்சாலையில் கொலை செய்யப்படும் வரை.  சர்வாதிகாரிகள் பொதுவாகவே தற்பெருமை கிறுக்கர்களாகவே இருப்பர்.  த்ருஃலோவும் விதி விலக்கல்ல.  தன்னால்தான் நாடு சீரும் சிற்ப்புமாக இருப்பதாக மனப்பால் குடிக்கிறார்.  தன் ஆட்சியை தட்டிக் கேட்கும் எவரும்-ஆண், பெண் வித்தியாசம் இல்லை- அதிர்ஷ்டம் செய்திருந்தால் அவர் மட்டும் இறப்பார்.  இல்லையென்றால் குடும்பத்தோடு இவ்வுலகை விட்டு செல்வார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதனின் இறுதி நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்பு கொண்ட இறந்த காலம் இந்த கோணத்தில் சொல்லப்படுகிறது.

லோஸா ஒவ்வொரு கோனத்திற்க்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்குகிறார்.  முதலில் இது படிப்பவரை சற்று குழப்பினாலும் போக போக நம்மால் ஒன்ற முடிகிறது.  வரிக்கு வரி த்ருஃலோவை நினைக்க வைக்கிறது-எவ்வாறு அவரின் ஆளுமை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்திருந்ததோ!.  என்னை பொறுத்தவரை புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் யுரானிதா அவள் தந்தையை வார்த்தைகளால் வாட்டும் இடங்கள்.    கதை மாந்தர்கள் பலரை என்னால் நம் இந்திய நாட்டு அரசியல் வாதிகளுடன் ஒப்பிட முடிந்தது.  ஏன் என்பதை நீங்கள் புத்தகத்தைப் படித்தால் புரியும்.

Hollywood இயக்குநர் க்வெண்டென் டாரண்டினோ இயக்கிய படங்கள் எல்லாமே படம் ஆரம்பித்த நூலிழையைக் கொண்டு மற்ற நிகழ்வுகளை(கடந்த காலம், நிகழ் காலம்) சொல்லும்.  இந்த புத்தகமும் அவ்வாறே செல்கிறது. 

A fine balance-க்குப் பிறகு ஒரு அற்புதமான புததகம்.


Monday, July 12, 2004

இந்தியாவில் மனித உரிமை

சமீபத்தில் Cynthia Mahmood எழுதிய Fighting for Faith and Nation: Dialogues With Sikh Militants படித்தேன். 1970- 80களில் கொழுந்து விட்டு எரிந்த காலிஸ்தான் பற்றிய புத்தகம். பல காலிஸ்தான ஆதரவாளர்களின் குரல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 90-களின் மத்தியில்தான் மனித உரிமை கழகங்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. அதுவரை, வடக்கே நடப்பது தெற்கே தெரிவது கடினம். தெற்கிலிருந்தும் வடக்கே அவ்வாறே. 1946- 47 களில் நடந்த இனப் படுகொலைகளிலிருந்து கோத்ரா கலவரம் வரை அரசு தன்னுடைய பிரசார வாகனங்களால் அதன் உரிமை மீறல்களை மறைத்து வெற்றி கண்டுள்ளது.

எந்த பத்திரிக்கைகளும் அரசின் மனித உரிமை மீற்ல்களை வெளிக் கொண்டு வர முடிந்ததிலை. மீறும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை மாநிலம் விட்டு மாநிலம் கூட கைது செய்ய முடியும். ஆகவே செய்திகள் முழு உண்மைகளுடன் வெளி வருவதில்லை.

இந்த வகையான அறிவு நிலையுடன் இந்த புத்தகத்தை எடுதத படிப்போரை, இந்தப் புத்தகம் இரண்டு நிலைக்குத் தள்ளும்.
1) இந்தியாவில் மனித உரிமை மீறல் உண்டு.
2) இந்த புத்தகதை எழுதியவர் மனநிலை சரியில்லாதவர்.

என்னால் முதல் நிலை எடுக்க முடிந்தது.

மேலே தொடரும் முன், நான் ஒரு இந்தியன். இந்தியாவின் சாதனைகளில் எவ்வளவு பெருமை அடைகிறேனோ, அதன் சிறுமைகளில் தலை குனிபவன்.   மேலே படிக்கும் முன், இந்த தன்னிலை விளக்கம் அவசியமாகிறது.

இந்த புத்தகம் காலிஸ்தானத்திற்க்கு அதரவோ அல்லது எதிர்நிலையோ எடுக்கவில்லை.  இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்பதைப் பதிவு செய்வது மட்டுமே.

புத்தகத்தில் வரும் ஒவ்வொரும் சீக்கிய மதத்தில் அழ்ந்த நம்பிக்கைக் கொண்டுள்ளணர்.  இயல்பாகவே, இந்திய அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டுள்ளனர்.  இது, 1947-லிருந்து புகைவது.  நாட்டின் தானிய களஞ்சியமாக தங்கள் மாநிலம் இருக்க, மற்ற மாநிலத்தவர் பயன் பெற்று வந்தது முக்கியக் காரணம்.  இதை பிந்தரன்வாலே ஊதி விட தனி நாடு கேட்கும் நிலை வந்தது.  அயுதம் எடுக்கப்பட்டது.  பொற்கோவிலில் இராணுவம் நுழைய, பற்றியது தீ.

தீவிரவாததை பின்பற்றியவர்கள் சொல்லும் முதல் காரணம் இராணுவம் நுழைந்தது.  சீக்கியர்கள் அல்லாதவர்கள் கொல்லப்பட்டதை அனைவரும் கண்டனம் செய்கிறார்கள். ஆனால் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது என்பதற்க்கு மட்டும் மௌனம் பேசுகிறது. பாகிஸ்தான் என்பது உள்ளங்கை நெல்லி.

அரசு இயந்திரமும் இவர்களை தீவிரவாதத்துக்கு தள்ளி இருக்கிறது.  எண்கௌண்டர் என்ற பெயரில் சிறையில் இருந்தவர்களை கொன்றது முதல் 50 வயது பெண்மணிகளைக் கூட சிறையில் மானபங்க படுத்தியது வரை.  புததகதின் முதல் அத்தியாயத்தில், ஒரு முதியவர் கண் கலங்கி தன் மனைவி சிறையில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டார் என்பதை பதிவு செய்யும் இடம் உங்களை இந்தியாவைப் பற்றித் தலை குனிய வைக்கும்.

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

Saturday, June 12, 2004

கல்கி - இலக்கியவாதியா?

புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே எழுப்பப் பட்டு வந்த ஒரு கேள்வி இது. கல்கியின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்று தொடங்கி இன்று ஜெயமோகன் அவர்களால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரை வளர்ந்துள்ள ஒரு சர்ச்சை.

தமிழ் எழுத்துலகில் ஒரு பிடிவாதமான கொள்கை-எந்த எழுத்தாளராவது வணிக பத்திரிக்கைக்கு எழுதிவிட்டால் அவரை சாதி ப்ரஷ்டம் செய்யாத குறையாக ஒதுக்குவது. இவர்களின் வாதம், வணிகப் பத்திரிக்கைகளுக்கு எழுதும் எழுத்துக்கள் சென்றடையும் வாசகர்களுக்காக நீர்த்துப் போகின்றன.

மக்களின் ரசணைகளை மேம்படுத்தாமல் அவர்களுக்காக வளைந்துக் கொடுப்பது இலக்கியம் ஆகாது. ஓத்துக்கொள்கிறேன்.

பழங்கால இலக்கியங்களை புனையும்போது இந்த சிக்கல்கள் இருந்ததா, தெரியவில்லை. கம்பரும், இளங்கோவும் இருந்த காலத்தில் அனைவரும் அவர்கள் படைப்புகளை புரிந்துக் கொண்டார்கள் என்பது ஜல்லி. அப்படி என்றால் மக்களுக்காக நீர்த்துப் போன இலக்கியங்கள் படைக்கப் பட்டனவா? அவ்வாறு இருந்தால், அவைகள் எங்கே?

அதே சமயம், மக்களுக்குப் புரியாத வகையில் எழுதுவதும் இலக்கியம் அல்ல. மழை நீர் கடலில் பொழிவதால் யாருக்கு லாபம்?

கல்கியின் எழுத்துக்கள் தமிழை மற்றொரு நிலைக்கு எடுத்து சென்றது என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய புதினங்கள் மனித மனங்களை ஆராய்ந்தன(உதாரணமாக நந்தினி, நாகநந்தி). கதை எழுதப்பட்ட காலத்தில், மக்களை சென்றடையும் வண்ணம் எழுத வேண்டும் ஆயின், முதலாவதாக, அவர்களுக்குப் புரியுமாறு எழுதப்பட வேண்டும். திட்டி வாசலைத் திறந்து விட வேண்டிய பொறுப்பு கல்கிக்கு இருந்தது. அதன் பின் வாசகர்கள் பொறுப்பு உள்ளே போவது. அந்த வகையில் கல்கியின் எழுத்துக்கள் ஏணியைப் போன்றவை. ஆத்திச்சூடியைப் படித்துத் தானே இலக்கிய வரலாறு வரை புரிந்து கொள்ள முடிந்தது.


வணக்கம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

-திருவள்ளுவர்.

வனக்கம். இந்த வலைதளம் என்னுடைய சிந்தனைகளையும், என்னுடைய தொழில் சம்பந்தமான செய்திகளும் கொண்டிருக்கும். நிச்சயமாக கவிதைகளை வைத்து அறுக்க மாடேன்.

This site will contain my views/thoughts/scribbles plus my professional related news. Promise, no unnecessary verses written by me.