Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, September 13, 2009

வார இறுதியில் - 3

அரசியல், விளையாட்டு: இரண்டிலும் பணம் புரள்வதால் நாகரிகததுக்கு இடமில்லை என்று ஜோ வில்சனும், செரினா வில்லியம்ஸும் நிரூபித்துள்ளனர். ஜோ வில்சன் தென்கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர். ஒபாமாவின் health care பேச்சின்போது, You liar என்று கத்தினார். ஒபாமா கொஞ்சம் கூட சலனமேயில்லாமல் அதை மிக நாகரீகமாக மறுத்துவிட்டு தன் பேச்சைத்் தொடர, இப்போது ஜோ அவரின் கட்சிக்காரர்களாலேயே கண்டிக்கப் பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஜோ இராணுவத்தில் பணி புரிந்தவர். இராணுவத்தினருக்கு ஜனாதிபதி Commander-in-Chief. அந்தப் பதவிக்குரியவரையே எதிர்த்து முட்டாள்தனமாகக் கத்தியிருக்கிறார். புஷ் இராக் போரைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கத்த வேண்டிய வார்த்தையை இப்போது கத்தி குடியரசு உறுப்பினர் தான் புஷ்-க்கு சளைத்த முட்டாள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

விளையாட்டில் ஜோ-க்கு சளைக்காமல் செரினா நடந்த விதம் இன்னும் பைத்தியக்காரத்தனம். தேவையில்லாமல் Line Judge-ஐ திட்டி ஆட்டமும் இழந்து (இல்லையென்றாலும் கிம் எளிதாக வென்றிருப்பார்), $10000 டாலரும் இழப்பு.

இவர்கள் இருவரும் கற்க வேண்டிய முதல் பாடம் சபை நாகரிகம்.

நாட்டு நடப்பு: இந்த வார Outlook-ல் வந்த இரண்டு செய்திகள்:

1) வக்ஃப் வாரியத்தின் ஊழல்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளம். பல முகலாய, நிஜாம் மன்னர்களால் மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வாகம் செய்கிறது. இதில் வரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமையவேண்டும். பொதுவாக மாநில அரசுகள் தங்கள் கட்சியில் உள்ள இஸ்லாமிய உறுப்பினர்களை நியமனம் செய்யும். இதுவே ஊழல்களுக்கு வழி வகுக்கிறது. உதாரனமாக அனில் அம்பானி கட்டும் புது கட்டிடம் ஒன்றின் மதிப்பு 27 கோடி. ஆனால் விற்கப்பட்டதோ 16 லட்சத்திற்கு. அனில் 27 கோடி கொடுக்கவில்லையென்றாலும் கொடுத்த வரையில் 16 லட்சம் தவிர மீதி வாரிய தலைவர்/உறுப்பினர் பையில். அரசு தலையிட பயப்படுகிறது. தலையிட்டால் ‘இஸ்லாமிய மதத்திற்கு அபாயம்’ என்று கூக்குரல்.

2) குஜராத் போலீசின் (மோடியின் அடியாட்கள் என்று வாசிக்க) 2004 என்கவுண்டர் போலி என்று கண்டுப்பிடிப்பு.

2004-ல் மோடியைக் கொலை செய்யும் உத்தேசத்துடன் இருந்தவர்கள் என்று நான்கு பேரை (ஒரு பெண் உட்பட) குஜராத் போலீஸ் பம்பாய் அருகே சுட்டுக் கொன்றது. ஆனால் 5 வருடங்கள் பிறகு, நீதிபதி தமங் அளித்த தீர்ப்பில் இது போலி என்கவுண்டர் என்று அறிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாய்ந்து இன்னொரு நீதிபதி மூலம் இந்த அறிக்கைக்குத் தடை வாங்கியுள்ளது.

Only in India.


Monday, September 07, 2009

வார இறுதியில் - 2

Labor Day விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று பதிகிறேன்.

அரசியல்: ராஜசேகர ரெட்டி இறப்பு யாருக்கு நஷ்டமோ இல்லையோ ஊடகங்களுக்கும், வேலையில்லாத உதவாக்கரைகளுக்கு இலாபம். ஒரு மாநில முதல்வர் மறைவுக்கு இந்தியா முழுவதும் துக்கம் (கட்டாயமாக) அனுஷ்ட்டிக்க வைக்கும் வியாதி இந்தியாவில் மட்டுமே உண்டு.

தொலைகாட்சியில் (வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன்)அழுது கொண்டே பேட்டிக் கொடுத்தவர்களையும், அவர்களை விடக் கேவலமாக தற்கொலை செய்து கொண்ட கோமாளிகளைப் பற்றியும் படித்துக் கொஞ்ச நேரம் பிரமித்திருந்தேன்.

அழுமூஞ்சிகளை விட்டு விடலாம். அரசியல் பொறுக்கிகளுக்கு அழுகை சகஜம். தற்கொலை செய்தவர்களின் மனநிலையைப் பார்ப்போம். எது இவர்களைத் தூண்டுகிறது? தாழ்வு மனப்பான்மை? ஒரு வேலைக்கும் உதவாமல் இருப்பது? படிப்பறிவின்மை? தன்னம்பிக்கை இல்லாமல் எவனோ ஒருவனைத் தலைவனாக நினைப்பது? எப்போதாவது ராஜசேகர் ரெட்டியைப் பார்த்திருக்கிறார்களா? அவரின் எந்த செயல் இவர்களைத் தூண்டியது? அவர்களுக்குத் தெரியுமா ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையில் 10-20% மட்டுமே மக்களை சென்றடைகிறது, மீதம் அவன் பையையும், அவனின் அல்லக்கைகளையும் சென்றடைகிறது என்று?

எது இந்தக் கோமாளிகளைத் தற்கொலை செய்யத் தூண்டியது?


அமெரிக்காவும் எட்வர்ட் கென்னடி-யின் மறைவை நினைவு கூர்ந்தது, அவர் கென்னடி என்பதால். அந்த வகையில் இந்திய சாயல் இருந்தது. என்றாலும் அவரவர் வேலையைப் பார்த்தார்கள். இதற்கெல்லாம் விடுமுறை கேட்டால் சுளுக்கு விழும். மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் (எனக்குத் தெரிந்த வரையில்) சில இடங்களில் From MA people, Thanks Ted என்று மின்னனுப் பலகைகள் வைத்தார்கள்.

புத்தகம்: ஒரு வழியாக நேற்று இரவு விழித்து ‘The Brothers Karamazov' முடித்தேன். கதை இறுதி வக்கீல்கள் வாதங்கள் கொஞ்சம் சோர்வடைய செய்தாலும் மிக அற்புதமான classic. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் கொள்ளும் மாறுபாடுகள் ஆராய்ச்சிக்குத் தகுந்தவை. ரஷ்ய இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்க தஸ்தாவ்யேஸ்கியின் இந்தப் புத்தகம் சிறந்த நுழைவாயில். தமிழ் இலக்கிய வாதிகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்களின் சிக்கலான தமிழில் சிலாகித்து ‘இதையெல்லாம் படிக்கனும்னா உனக்கு இரண்டு கொம்புகள் வேண்டும்’ என்று சொல்வார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழையுங்கள்.

அடுத்த புத்தகம் படிக்க எடுத்திருப்பது ‘Patrick French' எழுதிய ‘Liberty or Death'. சமீபத்தில் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி எழுதி பிஜேபி-க்கு சாமி வரவழைத்ததைப் போன்று 1997 Patrick ஒரு புயலைக் கிளப்பினார். காந்தியின் அரசியலை/புனித பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஜின்னாவைப் பற்றிய இந்தியப் பார்வை தவறு என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போதைய புயல் போன்று 1997-ல் கிளம்பாததற்க்குக் காரணம் Patrick அயல் தேசத்தவர், அதுவும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி Krishan Kalra என்பவர் '’Liberty or Death’ should be included in the category of yellow journalism and be banned in India' என்கிறார். அப்படியானால் கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும் என்று நூலகத்திலிருந்து எடுத்து வந்து விட்டேன். முதல் 10 பக்கங்கள் படித்த வரையில் ஓகே.

படித்து முடித்தபின் Rajmohan Gandhi எழுதிய Mohandoss-ம் குஹா எழுதிய India After Gandhi-ம் படிப்பதாக பிளான்.

Sunday, August 30, 2009

வார இறுதியில் - 1

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று எழுத வேண்டும் போல் இருந்தது...

வேலைப் பளு அதிகம் இருந்தாலும் அரை மணி நேரமாவது ஏதாவது படிக்க முடிந்தது. ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்துக் கொண்டிருக்கிறேன். Dmitri, Ivan, Alyosha, Illusha போன்றவர்களின் வாழ்க்கையை kaleidoscope-ஆக தஸ்தவ்யேஸ்கி எழுதிய புத்தகம். எழுதி 100 வருடங்களாகியும் பாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்த உணர்வு. ஆன்மிகம் பற்றிய தன் கருத்துக்களை/குழப்பங்களை/கண்டடைந்தவைகளைப் புததக வடிவில் கொண்டு வருவது அசாத்தியமான வேலை. தஸ்தவ்யேஸ்கி-க்கு அது சாதாரணமாக வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர்கள் போக்கிலே செல்லும்போது சிலர் ஒரு புள்ளியில் சந்தித்து, உறவாடி, பகையாடி, விலகி பின் சேர்ந்து...இந்த நாவலைப் படிக்கும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நினைவுக்கு வருகிறது.

Speaking of which...நேற்று தஸ்தவ்யேஸ்கி-யைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ‘கரைந்த நிழல்கள்’ மீள்வாசிப்பு. ஒருமுறைப் படித்திருந்தாலும் அ.மி-யின் இந்த நாவல் என்னை மீண்டும் வாசிக்க வைத்தது சமீபத்திய 'அவுட்லுக்கில்’ படித்த விஷால் பரத்வாஜ் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். இதைத் தொடராக வெளியிட்ட காலத்தில் எத்தனைப் பேர் அதை ஈடுப்பாடுடன் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ‘க. நி’ ஒரு முழுப் புத்தகமாகப் படிப்பதில் உள்ள மனநிலை வாரம் ஒருமுறையில் கொண்டு வரமுடியாது.

அ.மி. Hidden Humor இந்த நாவல் முழுவதும் தெளித்து விடப்பட்டுள்ளது. ‘மழை வரும்-னு காமிராவை முதல் நாளே வாங்கி வைக்கவில்லை’ என நடராஜன் சொல்ல, அடுத்த வரி ஒரு தனி பத்தியாக ‘வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன்’. கரம்சோவ் கதாபாத்திரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்த்தித்த உணர்வு இருக்கிறது என்று சொன்னேன். ‘க. நி’ அதில் நிச்சயம் சேரும்.

புத்தக அலமாரிகள் வாங்கிய பிறகு அவ்வப்போது வரும் மனநிலைக்கேற்ப ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒருசிலப் பக்கங்களை மேய்வது சுகம். வாங்கி வைத்தவைகளைப் பார்க்கும் போது, பரவாயில்லை என்று என்னுடைய புத்தகத் தேர்வைக் குறித்து நானே முதுகில் தட்டிக் கொள்ள முடிகிறது. மாலைமதியில் ஆரம்பித்த வாசிப்பு இன்று அமெரிக்க வரலாறு பற்றிய Oxford-ன் தொடர் புத்தகங்களும், இந்திய வரலாற்றின் 1857-ல் இருந்து India After Gandhi வரை புத்தக அலமாரியில் சேர்க்கும் வரை வந்திருக்கிறது. தமிழில் வலைப் பதிவுகள் முடிந்த வரையில் என் தமிழ் புத்தக must buy and must read வகைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. எனி இந்தியன் புண்ணியத்தில் தொல்லை இல்லாமல் பாஸ்டனில் இருந்து வாங்கிவிட முடிகிறது.

தமிழில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு மற்றும் பின் தங்கியவை என்பது தெரிந்த ஒன்று. உதாரணத்திற்க்கு நேற்று வாங்கிய Freakonomics புத்தகத்திற்க்கு வந்த மதிப்புரைகள் ஏறத்தாழ 20-30. எழுதும் மதிப்புரைகளும் 90% தூர்தர்ஷனில் வரும் எதிரொலி கடிதத் தரம். கத்துவதற்கு பதிலாக நானாவது என் வலைப் பதிவில் மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்பது இப்போது மனதில் ஓடும் சிந்தனை.

கரமசோவ் முடித்த பிறகு அடுத்து என்ன என்பது தெரியாது. காந்தி என்னைப் படியேன் (Satyagraha in South Africa) என்று கேட்கிறார்.