Sunday, September 20, 2009

வார இறுதியில் - 4

திரை: உன்னைப் போல் ஒருவன் - கமல் படம் என்றாலே கொஞசம் பயம்தான். வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று பல முயற்சிகளையும் ஒரே படத்தில் திணித்துத் தொலைப்பார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தன் ஆளுமை இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் வேறு. படத்துக்குப் படம் தேவையில்லாத ஒப்பனை என்ற பெயரில் திரைப்படத்தையே கேலிக்கூத்தாக்குவது.

உன்னைப் போல் ஒருவன் அறிவிக்கப்பட்டவுடனே எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘ஐயோ’. நஸ்ருத்தீன் ஷா-வின் தீவிர ரசிகனுக்கு இதுதான் தோன்றும். ரஜினி (அதுவும் பீ வாசுவோடு) அறிவித்திருந்தால் யாருக்குமே துறவறத்தில் நம்பிக்கை வந்திருக்கும். கமல் என்பதால் முதல் பத்தி நினைவுக்கு வந்தது.

மோகன்லால் நடிக்கப் போகிறார் என்றதும் ‘ஐயோ!ஐயோ!’. கமலின் படங்களில் இதுவரை நாசர், நாகேஷ் தவிர்த்து எவரையும் கமல் dominate செய்ய விடமாட்டார் என்பதால் மோ. லா மேல் பரிதாபம்தான்.

இந்த மனநிலையோடு படம் பார்க்கப் போனால் வெளியே வரும்போது ஆச்சரியத்துடன் வந்தேன்.

முதலில் கதை. சாதாரண மனிதன் தீவிரவாதத்தைக் கண்டு கோபம் கொண்டால் என்னாகும் என்பது ஒரு வரி கதை. அவனும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தால் ஒரு நகரத்தையே தன் கைக்குள் கொண்டு வந்து, பலமான காவல் துறையைத் தன் கட்டை விரலால ஆட்டுவிக்கலாம், தீவிரவாதிகளை நம்ப வைத்து கழுத்தறுக்கலாம் என்று நம்ப முடியாவிட்டாலும் கொஞசம் practical-ஆக யோசித்திருப்பது தமிழுக்கு புதுசு.

இரண்டாவது துணைக் கதாபாத்திரங்கள்: லஷ்மி முதல் ரஃபிக் என்ற நபர் வரை செய்த பாத்திரத் தேர்வு. மிகக் கச்சிதமாக அவரவர் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் இரண்டு காவல் அதிகாரிகளைக் குறிப்பிடவேண்டும். சேது மற்றும் ஆரிஃப். சேது ஒரு சாதாரண மனிதன் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே ஊடாடுவதைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஆரிஃப் கொஞ்சம் Dirty Harry ஸ்டைலில் தடாலடி வேலைகளுக்கு உதவுகிறார். அதுவும் தன் இன்ஃபார்மரிடம் பரிவுடன் கலந்த கண்டிப்புடன் பேசும்போதும், அந்த இன்ஃபார்மரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப தாடையை உடைக்கும் போதும் Character சரியாக் build ஆகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக எப்போதும் மின்சார கம்பியைத் தொட்டுக் கொண்டிருப்பவர் போல இருக்க வேண்டும் என்று புரியவில்லை. போதை ஆசாமியைப் புரட்டப் போகிறார் என்று நம்மை நினைக்கவைத்து குரல் கடுமையிலேயே அவனிடம் விஷயம் கறக்க வைக்கும் இடம் கதை + டைரக்‌ஷனின் சிறப்பு. இந்த நடிகருக்கு நல்ல இயக்குநர் அமைந்தால் அஜீத், விஜய் போன்ற முட்டாள் கோமாளிகளை ஒதுக்கி வலம் வருவார்.

மூன்றாவதாக: கமல், லால் மற்றும் லஷ்மி: கமல் நடிப்பை விட அவரின் உடல் மொழிதான் சட்டென்று மனதில் பதிந்தது. அறிமுகக் காட்சியில் தலை, கை, வால் என்று காட்டாமல் சாதாரணமாக அறிமுகம் ஆவதும், நன்றாகத் தேர்ந்த பொறியாளர் போல வெடிகுண்டு செய்யும் சாதனங்களைக் கையாள்வதும், ஒரு விதமான தளர்ந்த நடையுடன் ஒவ்வொரு பையையும் தூக்கிக்கொண்டு நடப்பதும், எல்லா வெடிகுண்டு பைகளையும் வைத்து விட்டு கீரை, தக்காளி என்று மனைவி கொடுத்த லிஸ்ட் படி வாங்குவதும் என்று இவரின் பாத்திரம் சரியாக செதுக்கப்படுகிறது.

அதோடு கமல் நிஜமாகவே கொஞ்சம் ஒதுங்கி மற்ற இருவரும் dominate செய்ய அனுமதித்திருக்கிறார். லாலும், லஷ்மி-யும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் கோட்டுக்குள் இருந்து கொண்டே மற்றவரைக் கவிழ்க்கும் வேலையை செய்கிறார்கள். சிக்கலான வேலையை மற்றவர்களிடம் தள்ளிவிட்டு தான் பலி ஆடாகாமல் தப்புவது என லஷ்மி விளையாட, தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தேவையான இடங்களில் சுட்டிக்காட்டி லஷ்மியை back-off செய்வது என லால் திருப்பித்தாக்கும் கட்டங்கள் மிக சுவாரசியம் (அவ்வப்போது கருணாநிதியின் தொலைப் பேசி அழைப்புடன்!).

நடப்பு அரசியலை இவ்வளவு துணிவாக (அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான சகிப்புத்தன்மையை நினைவில் கொண்டால்) எடுத்தாண்டது இதில்தான் முதலில் பார்க்கிறேன். சங்கரின் படங்கள் சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறேன் என்று கேலிக் கூத்தாக்கும். லஷ்மியோடு மோகன்லால் மோதும் இடங்கள் பதவிகளில் உள்ள அரசியல் நீங்கள் கதிரியக்க மழையில் நனைந்தாலும் இருக்கும் என்பதைக் காட்டும். B+ தரமுள்ள ஹாலிவுட் படங்களில் இது போன்ற காலை வாரும் அரசியலைப் பார்க்கலாம். தமிழில் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

கதையில் காட்டப்படும் இடங்கள் கதையின் இறுக்கத்துக்கு உதவுகின்றன. கமலின் control room வெட்டவெளி என்றால், மோகன் லாலின் Situation Room இறுக்கமாக அடைப்பட்ட இடம். இறுதிக்காட்சியில் காட்டப்படும் காலியாக பரந்துக் கிடக்கும் விமான நிலையம், சேதுவின் மனைவி பயணிக்கும் ரயிலில் அவர்களிக் இருக்கைகள் மட்டும் என்று காமிரா தேவையான் பகுதிகளை மட்டும் தன் ஃப்ரேமுக்குள் அடக்குகிறது.

இறுதியாக இசை: ஸ்ருதி ஹாசன் என்பதால் நம் மக்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்தார்கள் என்று தெரிகிறது. இது போன்ற படங்களுக்கு இசை என்பது மிகக் கொஞ்சமாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டால் அவர்களின் நடிப்பே தேவையான பதற்றத்தை வரவழைத்து விடும். இது இசை அமைப்பாளர் உணர வேண்டும். ஆனால் படத்தில் மித மிஞ்சிய இசை. காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று பாஷன் ஷோவில் வரும் இசையைப் போன்று போட்டுத்தாக்கியிருக்கிறார் (இதில் அதிகாரிகள் Bullet Proof vest அணியும்போது Michael Jackson-ன் Billy Jean ட்யூனில் இசை வேறு). இவருக்கு நான் சொல்லுவது, உதிரிப் பூக்கள் படத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை (அதுவும் விஜயன் தன் மச்சினியைப் பார்க்கும் போது வரும் இசை). Better luck next time.

படம் என்று எடுத்துக் கொண்டால் கமலுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல படம் என்பது மறுக்க முடியாது.



No comments: