Thursday, February 04, 2010

Wolf Dreams

தஹர் பென் ஜெலோன்-ஐ அமேசானில் தேடும் போது யஸ்மினா காத்ரா கிடைத்தார். அரபிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிக்க இவரின் கதை களங்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தது சரியாகவே அமைந்தது. இவர் எழுதிய கால வரிசைப்படி Wolf Dreams நூலகத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.


புதினங்கள் படிப்பதை சிறிது காலமாகவே நிறுத்தி வைத்திருந்தேன். அ-புதினங்கள் படிக்க வேண்டியவை அதிகமாகவும், கற்பனை கதாபத்திரங்களின் சோக/ஆனந்த/வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ரமணி சந்திரன் வாசகர்களுக்கு தாரை வார்த்து விட்டதாலும் புதினங்கள் கவரவில்லை. ஆனால் அரபு இலக்கியங்கள் பற்றி சாரு (ஆம்.. சிரிக்காதீர்கள்) எழுதியதைப் படித்த பின் கொஞ்சம் தேடியதில் 20-25 புத்தகங்கள் தேறியிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக மேற்குலக எழுத்தாளர்களின் மத்திய கிழக்கு புதினங்களை விலக்கிவிட்டேன். அரபு நாடுகளிலேயே வாழ்ந்து அல்லது இப்போது அரபு எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்பவர்களின் எழுத்துக்கள் மட்டுமே படிப்பதாக உத்தேசம்.

Wolf Dreams பேசுவது ஒரு சாதாரண குடிமகன் எப்படி தீவிரவாதியாகிறான் என்பது பற்றி. வாலித் ஒரு அமெச்சூர் நடிகன். அழகன். அவன் கனவில் அல்ஜீரியாவின் சிறந்த நடிகனாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வாங்கப் போவதாகக் கனவு கண்டு, ஆனால் அந் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுனராக வேலைக்கு அமர்கிறான்.

வேலையில் சேர்ந்தவுடன் அவனுக்கு நல்ல சட்டைகள், சூட்கள் கிடைத்தாலும் நாயைப் போல எசமானர்கள் செல்லும் இடங்களில் காத்து நிற்கும் வேலை. எசமானரின் மகன், மகள் அனைவரும் இவனை ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையைக் கூட கொடுப்பதில்லை. மகன் ஊரில் உள்ள விலைமாதர்களை அழைத்து வரும் வேலையைக் கொடுக்க, மகளோ தன் வருங்கால கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து இளித்ததற்கு தண்டனையாக இவனோடு உடலுறவு கொள்கிறாள். எசமானின் அந்தரங்க வேலைக்காரன் ஹமித் செய்யும் ஒரு குரூரமான செயலால் வாலித் அந்த வேலையை விட்டு ஒடி விடுகிறான்.

வாலித்-ன் துரதிஷ்டம் அவனின் எந்த ஒரு முயற்சியையும் பாதியில் முறிக்கிறது. அவன் விரும்பும் பெண் மத வெறி அண்ணனால் கொலை செய்யப்படுகிறாள். அவனின் சேமிப்பை ஒருவன் திருடுகிறான். இதற்கிடையில் அல்ஜீரியாவில் மத அடிப்படைவாதம் தீவிரமடைகிறது. வாலித் தன் நினைவின்றி பங்கேற்கும் ஒரு கலவரத்தால் போலீசிடம் சிக்குகிறான். அதுவே அவனை தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. முதல் கொலையை மதத்தின் பெயரால் செய்கிறான்.

பின் கொலைகள் செய்வது சுலபமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்துக்கே தலைவன் ஆகி, தன் தலைவன் இறந்தவுடன் அவரின் மனைவியை மணந்து, ஒரு முழு கிராமத்தையே( பெண்கள், குழந்தைகளையும்) கொல்லும் வரை அவனின் தீவிரவாதம் வளர்கிறது.

யஸ்மினாவின் கதை சொல்லல் எந்த மழுப்பலும் இல்லாமல் வாலித்-ன் கதையை ஒரே சீராக செலுத்துகிறது. இடையிடையே அல்ஜீரியாவின் வரலாறு கதையின் ஊடாக வருவதால் குழப்பமில்லை. அந் நாட்டின் வறுமை, மத தீவிரவாதிகளின் அணுகுமுறை, மக்களும், அரசும் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவை நேரடியாக சுட்டப்படுகின்றன.

முதல் இரண்டு பாகங்கள் வாலித்-ன் மனப் போராட்டத்தை விரிவாக பதிவு செய்கிறது. மூன்றாம் பாகம் அவன் அதை சுத்தமாக துடைத்துப் போட்டு கூலிப் படைத்தலைவனாக மாற்றுகிறது. கதை இசுலாமிய தீவிரவாதத்தை விவரித்தாலும் வாலித் மதத்தை தான் செய்யும் கொலைகளுக்கு உபயோகிப்பதில்லை.

யஸ்மினா-வின் கதை சொல்லல் தெளிவாக இருந்தாலும் அல்ஜீரிய அரசியல் நிகழ்வுகள் சொல்லும் விதம் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகி விடுகிறது. ஆரம்பத்தில் அக்குறிப்புகள் உபயோகமாக இருந்தாலும் போகப் போக 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' பாணியில் விளக்கப் படுகின்றன. தேர்ந்த கதை சொல்லி இதை பாத்திரங்கள் வாயிலாக வெளிப் படுத்தியிருப்பார்.

கதையில் மிகவும் சலனப்படுத்திய இடங்கள் வாலித் பங்கு கொள்ளும் இரு கொலைகள். ஒன்று அவனின் முதல், இரண்டாவது அவனுக்கு தெரிந்தவன். இறப்பவன் தான் இறப்பது தன் குழந்தைகள் முன்னால் என்பதைவிட வாலித் இதை நிகழ்த்துகிறான் என்பதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் கதறுவது:

"I don't believe it, not you Nafa..You're an artist...an artist"

தீவிரவாதியானதை விட வாலித் தன் வாழ்க்கையில் அடையும் தோல்வி இங்குதான்.

No comments: