Thursday, February 03, 2011

ஏறக்குறைய சொர்க்கம்



”எதையும் நிரூபிக்கும் முன்

சற்றே சும்மா இருங்கள் !”

- ஆதமாநாம்.

சுஜாதாவின் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ தொடர்கதையாக குமுதத்தில் வந்தது. கதை ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் திருமண (கசப்பு) அனுபவங்கள்.

ராமச்சந்திரன் (ராமு) தன் நண்பன் சந்துருவோடு திருவெள்ளறையில் காமுவை பெண் பார்க்கப் போவதில் ஆரம்பிக்கிறது. காமுவை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் சந்துரு பார்த்துவிட்டு ராமுவிடம் ‘அவள் பேரழகி, ஆனால் உனக்கு சரிப்படமாட்டாள்’ என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்ல, ராமுவின் ஈகோ கழுதையாக உதைத்து அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். பல லௌகீகத் தடைகள் வருகின்றன. எல்லாவற்றிற்க்கும் மேலாக அவன் அம்மா திருமணத்திற்கு முதல் நாள் கோமாவில் படுக்கிறாள். இருந்தாலும் பிடிவாதமாக மணக்கிறான்.



திருமணமானப் பின் காமுவின் அழகு பல ஆண்களை பேஸ்த் அடிக்க வைக்கிறது. சந்துரு, ராமுவின் மானேஜர், வீட்டுக்காரர், மளிகைக்காரர் என்று பலரும், ராமுவின் அன்புக்குப் போட்டியிடுகிறார்கள். அவனுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும், போகப் போக காமுவின் மேல் சந்தேகம் வருகிறது. தெருவோரத்தில் நின்று வேவுப் பார்க்கிறான். கட்டிலின் கீழே ஆள் இருக்கிறானா என்று தேடுகிறான். காமுவை அடிக்கிறான். கருவைப் பிடிவாதமாகக் கலைக்க வைக்கிறான். மொத்ததில் பாயைப் பிறாண்டும் அளவிற்கு சந்தேகம் முற்றுகிறது.


சந்தேகத்தில் தன் மேலதிகாரியைத் திட்ட அவர் அவனுக்கு வேலையில் டார்ச்சர் தருகிறார். மொத்ததில் நண்பர்கள், மனைவி, நிம்மதி இழந்து திரியும்போது தன் மனைவி ஒரு நடிகையானது தெரிகிறது. மீதி படித்துப் பாருங்கள்.


சுஜாதாவின் அதிகம் பேசப்படாத கதைகளில் இதுவும் ஒன்று. கதை Black Humor வகையைச் சேர்ந்தது. சுஜாதா பலமுறை கதை தானே எழுதிக் கொண்டு செல்லும் என்பார். இந்த கதை அதற்கு ஒர் உதாரணம். கதை உச்சம் பிடிக்கும் இடம் ராமு தன் மனைவியைத் தேடி பித்துப் பிடித்தாற்போல திருச்சி/ஸ்ரீரங்கம் என்று அலையும்போது வரும் நிகழ்ச்சிகள். ஆழ்மனம் அமைதியாக அரற்றிக் கொண்டிருக்க, மூளை காண்பனவற்றையெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளும். அதை எழுத்தில் கொண்டு வருவது சுஜாதாவிற்கு முடிந்திருக்கிறது.


குமுதம் வாசகத் தளத்திற்கு இந்தக் கதை மகா அன்னியம். மனைவியை சந்தேகிக்கும் கதை என்றால் அடுத்து எதிர்பார்ப்பது கொலை, போலீஸ் துரத்தல் என்று. இதை மாற்றி ஜனரஞ்சக வாசகர்களுக்கு அமைப்பது சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம்.


சுஜாதாவின் மத்யமர் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். ஒரிரண்டு தவிர மற்றவை வலிந்துத் திணிக்கபபட்ட ‘மத்யமர்’ லேபிள். ஆனால் ‘ஏ. சொ’-இல் அவர் மத்யமர் வகை என்று தானே முடிவு செய்து கொள்ளாமல் எழுதியதால் அதன் வெளிப்பாடு classic-ஆக வருகிறது. உதாரணமாக காமுவின் அழகைப் பற்றி ராமு அவளிடமே உரையாடும் இடம். கவனிக்க: அது romantic பேச்சு அல்ல. அவளின் அழகு திருமணத்திற்கு முன் மற்றவர்களை சலனப்படுத்திய விதம் பற்றி, அதற்கு காமு பதில் என இந்தக் கதையை வழக்கமான தள்த்திலிருந்து மேலே நகர்த்துவது.


கதையை நான் மிக ரசித்தது காமுவின் தரப்பிலிருந்து ஆசிரியர் ஒரு வாதம் கூட வைக்கவில்லை. மொத்தமும் ராமுவின் பார்வையிலேயே உங்களுக்குத் தருவதால் காமுவின் எண்ணம், செயல்கள் எல்லாம் ஒருவிதமான abstract ஓவியம் போல மாறுகிறது. இதுதான் சுஜாதாவின் வெற்றி. A Beautiful Mind படத்தின் திரைக்கதையைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். சுஜாதா ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் கதைசொல்லி, சந்தேகமில்லை.


கதையில் காமு ஒரு நடிகையாவது நம்ப முடியாவிட்டாலும் அது மத்திய ஆண் வர்க்கத்தின் மனைவிப் பற்றிய மனோநிலையை ஒரு jerk அடிக்க வைக்கப்பட்ட உத்தியாக எடுத்துக் கொண்டால் தொடர முடியும். சுஜாதா வேண்டுமென்றே உங்களை சீண்டும் இடம். கால, நேர அளவுகளை வைத்துப் பார்த்தோம் என்றால் அவள் அந்த அளவிற்கு புகழ் பெற்றது logic wise உங்களை விபரீதக் கற்பனைகளுக்கு கொண்டு சென்றுவிடும். ரஜினி ஒரே பாடலில் பிச்சைக்காரனிலிருந்து கோடீஸ்வரனாக மாறுவதை நீங்கள் ஜீரணிக்கக் கூடியவரா? அப்படியானால் காமுவும் ஒரே அத்தியாய்த்தில் நடிகை ஆகலாம்.


அதன் பின்னும் ராமு தன் மத்தியமர் நிலையில் நின்று மனைவியை மீட்க நினைக்கும் இடம்தான் சுஜாதாவின் Black humor-ன் உச்சக்கட்டம்.


ராமு ஒரு இடத்தில் மேற்குறிப்பிட்ட ஆத்மாநாமின் வரிகளை நினைக்கிறான். அந்த் இரண்டு வரிகள்தான் இந்த மொத்தக் கதையின் புகைப்படம்.


கதை முடிவில் நீங்கள் ராமுவிற்கு பரிதாபப்பட்டால் கதை தோற்றுவிட்டது என்று அர்த்தம்.


1 comment:

R. Gopi said...

இந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. உங்கள் பதிவு இதைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி.