Monday, March 23, 2009

Paradise Now

பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து இன்று இதைப் பற்றி:

Paradise Now : இதைப் பற்றி Boston Globe-ல் படித்தவுடன் பார்க்க வேண்டியப் பட்டியலில் இருந்து, Netflix மூலமாகக் கிடைத்தது. 

மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது அராபியப் பாலைவனத்தைப் புகைப்படங்களில் பார்த்த நாள் முதலாக ஆர்வம் வந்தது.  பின் இஸ்ரேலின் 1970-80-களின் வீரச் செயல்கள் வாயிலாக.  பின் இயல்பாகவே வரலாற்றின் மீது வந்த ஆர்வம் மேற்கத்தியப் புத்தகங்கள் வழியே.  படித்த வரையில் இஸ்ரேல் கண்ணோட்டத்தில் கிடைத்தப் புத்தகங்களே அதிகம்.

இந்த நிலையில்  The Angry Arabs என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.  அராபியர்கள் கண்ணோட்டத்தில் இஸ்ரேலியப் பிரச்சினையை அலசியது.  ஏன் அராபியர்களால் இஸ்ரேலை ஒப்புக் கொள்ள இயலவில்லை (1970-களில் எழுதப்பட்டது) என்பதை ஆசிரியர் தீர்க்கமாக வாதம் புரிந்திருந்தார்.

இதன் பிறகு பாலஸ்தீனப் போராட்டத்தை மிக அற்புதமாகக் காட்டிய Tom Friedman-ன் From Beirut to Jerusalem புத்தகம்.  இன்றும் மத்தியக் கிழக்கு புத்தகங்களுக்கு Bible என்று சொல்லலாம்.

அதுபோல படங்களின் வரிசையில் Paradise Now.

கதை: சயீத், காலித் நண்பர்கள்.  இருவரும் கார் மெக்கானிக்குகள்.  West Bank-l உள்ள Nabulus நகரம் அவர்கள் வசிப்பிடம்.   ஒரு நாள் இருவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருகிறது.  அவர்கள் Tel Aviv-ல் மனித வெடிகுண்டுகளாக வெடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் நட்க்கும் 36 மணி நேர நிகழ்வுகள் கதை.

சயீதை சுஹா என்ற பெண் ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  சயீத் தான் ஒரு நாள் மனித வெடிகுண்டாகப் போகிறோம் என்பதால் அவளைத் தவிர்க்கிறான்.  சயீதின் இறந்தகாலம் அவனை தீவிரமாக அந்தப் பாதையில் செலுத்துகிறது.


சயீதும், காலீதும் வீட்டில் சொல்லாமல் தலைமையகத்துகுச் சென்று குண்டுகள் பொருந்திய உடையை அணிந்து, யூதர்கள் போல வேடமிட்டு இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயலுகிறார்கள்.  கடக்கும் நேரம் எல்லைப் பாதுகாப்பு படையின் கண்களில் பட்டு விட, நடக்கும் களேபரத்தில் சயீத் இஸ்ரேல் பக்கமும், காலீத் West Bank பக்கமும் பிரிந்து விடுகின்றனர்.

காலீத் அவர்களின் தலைவனிடம் இதை தெரிவிக்க, தலைவன் குண்டு வெடிப்பைத் தள்ளிப் போடுகிறான்.  இதனிடையில் சுஹாவுக்கு இவர்களின் செயல்கள் தெரிய, அவள் காலீதுடன் வாதம் செய்து அவனின் மனதை மாற்றுகிறாள்.  இருவரும் சயீதைத் தேடி அலைகிறார்கள்.

சயீத் இஸ்ரேல் எல்லையிலிருந்து West Bank-னுள் நுழைந்து ஒரு இடுகாட்டில் ஒய்வாக இருக்கும்போது காலீதும், சுஹாவும் அவனிடம் வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள்.  சயீத் மறுத்து அவனின் தலைவனைப் பார்க்கப் போகிறான்.

படத்தின் மிக முக்கியமான கட்டம் என்று இதனைச் சொல்லலாம்.  தலைவன் சயீத் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று குற்றம் சாட்ட, சயீத் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறான்.  அப்போது சயீத் தலைவனிடம், எப்படி ஒரு தேசம் பாதிக்கப்பட்டதாகவும் அதே சமயம் மற்றொரு இனத்தவரை கொடூரமாக அடக்கியாள்வதாகவும் இருக்கும் என்று புரியவில்லை என்கிறான்.

தலைவனை மனம் மாற்றி, மீண்டும் சயீத், காலீத்துடன் இஸ்ரேலுக்குள் போகிறான்.  இறுதியாக ஒரு பயணிகள் பேருந்தில் உடலைச் சுற்றிய வெடிகுண்டுடன், பிண்ணனியில் சில இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்க சயீத் காமிராவைப் பார்ப்பதோடு முடிகிறது.
 
கதையின் ஆரம்பத்தில் நடக்கும் வாதம் மத்தியக் கிழக்குப் பிரச்சினையைப் புரிய வைப்பதைப் போன்று தலையணைப் புத்தகங்களும், வெட்டிப் பேச்சு அறிஞர்களும் புரிய வைக்கவில்லை:

வாடிக்கையாளர்: என்னப்பா சயீத், முன் பக்கம் மட்கார்டு கோணலாக இருக்கே?

சயீத் (காரை உற்றுப் பார்த்தப்படி): இல்லீங்களே...

வா: அடப் போப்பா, சரியாப் பாரு.

(இப்போது காலீத்தும் பார்க்கிறான்)

காலீத்: மட்கார்டு ஒழுங்காத்தாங்க இருக்கு...கீழ தரைதான் கோணலா இருக்கு.

வா(சினத்துடன்): யோவ்...கிண்டலா?  தரையா கோணல்?  நீ கோணல், உங்கப்பன் கோணல்...

காலீத் கோபப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வந்து காரின் முன் பக்கத்தை உடைக்கிறான் (உண்மையாகவே அவனின் தந்தையாரின் கால் ஊனம்). 

இதுதான் இன்று மத்தியக் கிழக்கில் நடந்துக் கொண்டிருக்கிறது...  காரை பாலஸ்தீனமாக உருவகம் செய்தால்.

படம் முழுக்க இது மாதிரியான கரிய அங்கதம் நிரவிக் கிடக்கிறது.

மற்றொரு காட்சியில் வெடிகுண்டுகளைக் கட்டுவதற்கு முன் தலைவன் அவர்களின் வீர உரையை வீடியோவில் பதிவுசெய்ய முயற்ச்சிக்கிறான்.  காலீத் உணர்ச்சி ததும்ப ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசி முடிக்க, கேமிரா மேன் தலையை சொறிய:

காலீத்: என்னய்யா?
கா. மே: நீ பேசினது எதுவும் பதிவாகலே, பாட்டரி தீர்ந்துடுச்சு.

சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் காலீத்...

சயீத்தையும் , காலீத்தையும் எல்லைக்குக் கூட்டிச் செல்லும் நண்பரிடம்:

காலீத்: வெடிகுண்டு வெடிச்சதும் என்ன ஆகும்?
நண்பர்: உங்களை தேவதை வந்து அழைத்துச் செல்லும்.
காலீத்: தேவதை வரும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர் (யோசித்துவிட்டு): கேள்விப் பட்டுருக்கேன்.

இதைப் போல படம் நெடுகிலும் பாலஸ்தீனியத் தரப்பு கேள்விக்குட்படுத்தப் படுகிறதென்றால் இஸ்ரேலின் இருப்பு அங்கங்கே சாலைகளை மறித்து நிற்கும் இராணுவ கனரக வாகனங்களின் வழியே மூச்சு முட்ட வைக்கிறது.

கதைக்குள் கதையாக சயீதின் பிடிவாதம், அவனின் தாயார் அவனின் தந்தையைப் ப்ற்றிப் புரியவைக்க முயலுவது, காலீதின் தந்தையின் காலை இஸ்ரேலிய இராணுவம் முறிப்பது (’எந்தக் காலை நான் முறிக்கலாம் என்று நீயே முடிவு செய்து சொல்’), அமைப்பின் நண்பரின் மென்மையான குரல், சுஹாவின் காதல் போன்றவை திறமையாக ஊடுருவுகின்றன.

சயீதின் தீர்க்கமான, கேள்விகள் நிரம்பிய கண்கள் படம் பார்த்து கொஞ்ச நாட்களுக்கு சங்கடப்படுத்தும்.

பி.கு: கதாபாத்திரங்கள் பேசுவதை அப்படியே எழுதாமல் சிறிது மாற்றியிருக்கிறேன்,  மூலப் பொருள் சிதையாமல்.

Curt Schilling

நன்றி ஷில்லிங்.

இன்று கர்ட் ஷில்லிங் பேஸ்பால் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.  Red Sox அணியில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்.  

தோளில் காயம் பட்டதனால் சென்ற வருடம் விளையாடவில்லை.  இறுதிப் போட்டியில் Red Sox மிகக் கடுமையாக போரிட்டுத் தோற்ற போது இவர் இல்லாத்து மிக நன்றாகத் தெரிந்தது.

2004-ல் Red Sox தோல்வியின் அருகில் இருந்தபோது, காலில் சிகிச்சை முழுமையாக அடையாமல் இரத்தக் கசிவுடன் Yankees-க்கு எதிராக பந்து வீசியபோது, New England முழுவதும் அடைந்த கிளர்ச்சி சொல்ல இயலாது.  Red Sox அதன் பிறகு ஒரு விதமான வெறியுடன் விளையாடி அந்த வருடக் கோப்பையை வென்றது ஷில்லிங்கால் என்று சொல்லலாம்.

பேஸ்பாலில் அவரின் போராடும் குணம் என்றும் மேற்கோள் காட்டப்படும்.

Thank you for everything Curt.

Sunday, July 27, 2008

Missing

இளமையில் இறப்பது கொடியது. அதிலும் பெற்றோர் மகனையோ, மகளையோ இழப்பது அதனினும் கொடியது. இறந்த மகன்/மகள் இயற்கையாக இறக்காமல் விபத்தில் அல்லது கொடூரமாக சிதைக்கப்பட்டு இறப்பது...


'பிறவி' திரைப்படம், ஈச்சுர வாரியாரின் 'ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்' புத்தகம் மேற்கண்ட வலியைப் பேசும் சில உதாரணங்கள். தமிழ்த் திரைப்படங்கள் இதை இயல்பாகக் கையாண்டதில்லை (அதிலும் சிவாஜியை நடிக்க வைத்து பார்ப்பவர்களைக் கொடுமைப் படுத்துவார்கள்).


Missing என்ற ஆங்கிலப் படம் காணாமல் போன ஒரு நிருபரை (சார்லி) அவனின் மனைவியும், தந்தையும் தேடும் கதை. சாரு நிவேதிதா 'கலகம், காதல், இசை' புத்தகத்தில் 'விக்தர் ஹொரா' என்ற சிலே பாடகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பார் (அவரின் 'திரிலோக்புரி' என்ற தரமான கதையோடு இந்த வாழ்க்கை வரலாறும் அனுபவித்து வலியுடன் எழுதப்பட்டிருக்கும்).


விக்தர் சிலேயில் 'பினோசெட்' என்ற இராணுவ ஜெனரல் பதிவிக்கு சி.ஐ.எ துனையோடு வந்தபோது கொல்லப்பட்டவரில் ஒருவர். Missing கதையும் சார்லி அவ்வாறு சிலே அரசாங்கத்தால் கொல்லப்பட்டதை விவரிக்கிறது.
சார்லி சிலேயில் தன் மனைவியுடன் தங்கி ஒரு இடது சாரி பத்திரிகையில் எழுதுபவன். Vina என்ற இடத்திற்கு ஒரு நாள் சுற்றுப் பயணம் செல்கையில் பினோசெட்-இன் படைகள் அந்த இடத்திலிருந்து கலகத்தை ஆரம்பிக்கின்றன. அங்கு தங்கியிருக்கும் சில அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகையில் அவனுக்கு அவர்களின் பங்குகள் குறித்து சந்தேகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பல அப்பாவி மக்கள் கலகக் குண்டர்களால் கொல்லப்படுவதை காண்கிறான். அமெரிக்கர்கள் மூலமாக கலகப் படைகளின் பார்வை இவன் மீது படிகிறது.


மீண்டும் தன் மனைவி(பெத்) இருக்கும் இடம் வந்த மறுநாள் காணாமல் போகிறான். அவனின் தந்தை (எட்வர்ட்) சிலே வருகிறார். இவர் மிகத் தீவிரமான கிறித்தவர். தன் மகன் மற்றும் மருமகளின் சுதந்திர மனோபவத்தை எதிர்ப்பவர். தன் மகன் ஒன்றுக்கும் இலாயகில்லாதவன், அவனின் மனைவியும் அவ்வாறே என்று நினைப்பவர். சிலேயில் வந்ததிதிலிருந்து அவருக்கும் பெத்-ற்கும் தகராறு. பெத் இவரின் வருகையை வெறுக்கிறாள். 'எதற்காக வந்து என் உயிரை வாங்குகிறாய்?' என்று முகத்தில் அறைவது போலக் கேட்கிறாள்.


எட்வர்ட் சந்திக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைவில் மீட்டுவிடலாம் என உறுதி அளிக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வடிக்கட்டிய பொய் என எட்வர்டிற்கு புரிகிறது. பெத் எட்வர்ட் வருவதற்கு முன்பே பல முயற்சிகள் மூலம் அந்த முடிவிற்கு வருகிறாள்.


இதனிடையில் அவருக்கு பெத்துடன் நல்லுறவு மலர்கிறது. முதல் முறையாக அவளின் போராடும் குணமறிந்து மதிக்கிறார். அமெரிக்க வாழ்க்கையைத் தவிர வேறு உலகங்களும் இருக்கின்றன என்பது புரிகிறது.


பல தொடர்புகள் மூலம் அவர் மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று தெரிய வருக்கிறது. அதிலும் எட்வர்ட் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் அமெரிக்க அரசாங்கம் இதற்கு உடந்தை என்றும் அறிகிறார்.


உடைந்த மனதுடன் பெத்தும், எட்வர்டும் ஊர் திரும்பி கிசிங்ஜர் உட்பட ஏழு அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடர்கிறார்கள். போதிய ஆதாரமின்மையால் தோல்வியுறுகிறது.


சார்லியின் உடல் ஏழு மாதங்கள் கழித்து அமெரிககா திரும்புகிறது (உடல் பரிசோதனை நடந்தாலும் எவ்வாறு இறந்தான் என்பதை அறிய முடியாத வண்ணம்).


இது உண்மைக் கதை. சார்லி தான் கண்டதை, கேட்டதை குறிப்புகளாக எடுத்து வைத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து புத்தகம் பின் திரைப்படமாக உருவெடுத்தது. திரைப்படத்தில் சிலே நாட்டின் பெயர் வருவதில்லை. படம் வந்த வருடம் 1982. பினோசெட் பதவியில் இருந்தார். ஆனால் பல காட்சிகள் வழியே மறைமுகமாக சொல்லப்பட்டுவிடுகிறது.


திறமையான இயக்கத்தில் (Costa Gavras எனற கிரிஸ் நட்டு இயக்குனர்.) கலகக்காரர்களின் இரும்புப் பிடி நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகிறது. நடு வீதியில் நடக்கும் படுகொலைகள், இளைநர்களைப் பிடித்து மொத்தமாக தீர்த்துக்கட்டுவது, ஆள் மறைவு போன்றவை திறமையான காட்சிகள் மூலம் இயக்குனர் காட்டுகிறார் குறிப்பாக:

a) சார்லி, மற்றும் பெத் இருவரும் ஊரடங்கு உத்தரவுக்குப் பின் தனியே தெருவில் மாட்டிக்கொள்வது,.

b) பெத் மற்றும் எட்வர்ட் பிணக்கிடங்கில் தேடும்போது அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒவ்வொரு அறையிலும் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை எது அடையாளம் காணப்பட்டது எது காணப்படவில்லை என விவரிப்பது.


ஒரு இடத்தில் எட்வர்ட் நடக்கும் வன்முறைகளைக் காணச் சகிக்காமல் 'What part of world is this?' என்பார்.


இன்று இலங்கையிலும், மோடியின் குஜராத்திலும் கேட்க வேண்டிய கேள்வியும் கூட.


பின் குறிப்பு: இந்தப் படத்தின் முழுத்தாக்கத்தையும் பெற முன் குறிப்பிட்ட சாரு-வின் கட்டுரையைப் படிப்பது நல்லது.

Tuesday, March 28, 2006

பத்து புத்தகங்கள்

இரவு(The Night) - எலீ வீசல்
அதிகாலை(The Dawn) - எலீ வீசல்
காடு - ஜெயமோகன்
ஏறக்குறைய சொர்க்கம் - சுஜாதா
Delhi - குஷ்வந்த் சிங்
அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு
The feast of the goat- மரியோ வார்கஸ் லோஸா
From Beirut to Jerusalem - டாம் ப்ரீட்மன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
A fine balance - Rohinton Mistry

Tuesday, January 10, 2006

நியூயார்க்கர் திரை விமர்சனங்கள்

நியூயார்க்கரில் 1990 - முதலான ஆங்கிலத் திரைப்பட விமர்சனங்களைத் தொகுத்து வைத்துள்ளனர். ஹாலிவுட் பிரம்மாண்டங்களைப் பார்த்து வாய் பிளந்த படங்களின் கறாரான விமர்சனங்களைப் படிக்கும்போது, 'இந்தப் படங்களையா நாம் பார்த்து அதிசயப்பட்டோம்' என நினைக்க வைக்கிறது.

இவர்களைத் தமிழ்ப் படங்கள் பார்க்க வைக்க வேண்டும் :).

Wednesday, December 14, 2005

கங்கூலி சகாப்தம்

இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் சவுரவை அணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இனி அவருக்கு வாய்ப்பு வருமா என்பது தெரியவில்லை. டால்மியா அணி தோல்வியடைந்த நாட்கள் முதலாக கங்கூலியின் தலைக்கு கத்தி இருந்தது.

ஊடகங்களில் இவரது நீக்கம் பற்றி அதிகமாகக் கண்டனங்களே எழுந்துள்ளன. முந்தைய அணித்தலைவர்களின் மென்மை அணுகுமுறையினால் துவண்டுக் கிடந்த அணியை தன் போராட்டக் குணங்களால் தூக்கி நிறுத்தியவரை இவ்வாறு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே அவைகளின் சாராம்சம்.
ஆனால் கங்கூலியே தனக்குக் குழி வெட்டிக்கொண்டார். க்ரெக்-ஐ எதிர்த்து ஜிம்பாப்வேயில் அரசியல் செய்து முதுகெலும்பில்லாத வாரியத் தலைவர் க்ரெக் புறம் கூறினார் என சொல்லும் அளவு கங்கூலி விளையாடினார். இந்திய சூழலில் இது ஒரு சாபக்கேடு. தலைவனாக அறியப்பட்டவன் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டு மற்றவர்களும் உளறுவது.

ஆனால் க்ரெக்-இன் உணர்ச்சி வயப்படாத அணுகுமுறை காட்சிகளை மாற்றியது. பதட்டமடைந்த சவுரவ், தனக்கு டென்னிஸ் எல்போ என சாக்கு சொல்லி, டென்டுல்கர் அளவு தனக்கும் மரியாதைக் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். இல்லை. உடனே உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டு ஒழுங்காக விளையாட முயன்றார். தோல்வி. தொடர்ந்த நிகழ்ச்சிகளில், இதோ, மூட்டையைக் கட்டிக் கொண்டிருகின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணித் தேர்வாளர்கள் சரியான திசையை நோக்கியே செல்கிறார்கள்(அரசியல் இருப்பினும்). பழையப் பெருமைகளுக்காக இன்னும் அணியில் ஒட்டிக்கொண்டு உதவாமல் இருப்பவர்களைக் கழற்றி விடப்படத்தான் வேண்டும். தனி மனித வழிப்பாடுகளுக்கு கிரிக்கெட்டில் இடமில்லை. அதற்கு டென்னிஸ் விளையாடலாம்.

இன்று படித்ததில் கிரிகினஃபோவில்(http://content.cricinfo.com/indvsl/content/story/229570.html) எழுதப்பட்ட கட்டுரை அறிவுப்பூர்வமாக, ரீடிஃப்பில் வடேகரின் செவ்வியில்(http://in.rediff.com/cricket/2005/dec/14wadekar.htm) டென்டுல்கரைப் பற்றிய பதில் சிரிப்பை வரவழைத்தது. ஆம்...அணியில் உள்ள வீரரால் அணி வெற்றிக்கு பங்கில்லையென்றால் விலக்கப்பட வேண்டும்...அது டென்டுல்கராக இருந்தாலும்.

Thursday, May 19, 2005

ஸ்டார் வார்ஸ்-3

அலுவலக நண்பர்கள் புண்ணியத்தில் இன்று மதியமே "ஸ்டார் வார்ஸ் 3" படம் பார்க்க முடிந்தது. அலுவலக தோழர் டேவிட் இரவு 12 மணி முதல் திரையிடலைப் பார்த்துவிட்டு மீண்டும் மதிய ஆட்டம் பார்க்க வந்திருந்தார்(ரஜினி ரசிகர்களுக்கு சரியான போட்டி).

"ஸ்டார் வார்ஸ்" வரிசையில் லூகாசுக்கு இதுவே இறுதிப் படம்(மற்ற எவருக்கும் இந்த அளவு பிரம்மாண்டம் எடுக்க துணிவு இருக்கும் என தோன்றவில்லை). படம் அனகின் ஸ்கைவாக்கர் எவ்வாறு தீயசக்திகளின் பக்கம் சாய்ந்து 'டார்த் வேதர்' ஆனான் என்பதை சொல்கிறது.

1977-ல் இப்படத்தின் முதல் பகுதி வந்தபோது, உலகமே பைத்தியம் பிடித்து அலைந்தது. கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான். கொடுங்கோலரசரை வீழ்த்த புரட்சிக் குழுக்கள் முயல்கின்றன. அவர்களுக்கு உண்டாகும் அனுபவங்கள் மூன்று படங்களாக 1983 வரை வந்தன.

படத்தின் உயிர் நாடி "டார்த் வேதர்" எனும் வில்லன். இவனின் உருவ அமைப்பு நடுங்க வைக்கும் என்றால், குரலோ கேட்பவரைச் சில்லிட வைக்கும்(குரல் கொடுத்தது ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்). இவனுக்கும் கதை நாயகனான லூக் ஸ்கைவாக்கருக்கும்(ஆம்...இவன் டார்த்தின் மகன் தான்) நடக்கும் யுத்தம்தான் படத்தின் முக்கிய காட்சிகள்.

பிரம்மாண்டம் என்பதற்கு அர்த்தம் கொடுத்தவை ஸ்டார் வார்ஸ்தான். நகைமுரண் என்னவென்றால், முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் 'இது உருப்படாது' என முடிவு செய்ய, அங்கிருந்த ஸ்பீல்பர்க் மட்டும் இது ஹாலிவுடின் திருப்புமுனைப் படம் என சரியாகக் கணித்தார். இப்படங்களுக்கு லூகாஸ் பட்ட சிரமங்களை ஒரு பெரியப் புத்தகமாகப் போடலாம்.

1983க்குப் பிறகு லூகாஸ் "டார்த் வேதர்" கதையை எடுக்கத் திட்டமிட்டார். 1997-ல் முதல் படம் வந்தது. அதில் ஆனகின் ஒரு பொடியனாக பல சாதனைகளைச் செய்து, பெரிய வீரனாவதற்கு அடிப் போடுகிறான். இரண்டாவது படத்தில் இராணி 'பட்மே'வின் மனதில் இடம் பிடித்து 'ஜெடாய்' எனும் சிறப்பு வீரனாகிறான்.

இன்று(19 மே) வெளிவந்திருப்பது வரிசையில் இறுதி. முதல் 20 நிமிடங்கள் நடக்கும் போரில் கடத்தப்பட்ட ஜனாதிபதியை ஆனகினும், அவனது குருவான 'கெனோபி'யும் மீட்கின்றனர். நாடு திரும்பும் ஆனகின் தான் தந்தையாகப் போவதை அறிகிறான. அந் நிலையில் அவன் காணும் கனவில் அவன் காதலி பிள்ளைப் பேற்றின்போது உயிர் துறப்பதை அறிகிறான். ஏற்கெனவே, அவனது அன்னை விஷயத்தில் அவன் கண்ட கனவு நடந்ததால் இது அவனுக்கு மிக்க அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது தன் காதலியைக் காப்பாற்றத் துடிப்பதை ஜனாதிபதி உபயோகப் படுத்திக் கொள்கிறார். அவனது குருவோ அவனைக் காப்பாற்ற முயல்கிறார். முடிவு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், வெள்ளித் திரையில் காண்க.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, மூச்சை நிறுத்துமளவிற்கு பிரம்மாண்டம். போர்க் கப்பல்கள் ஆகட்டும், நகரங்கள் ஆகட்டும், எடுத்துக் கொண்டப் பாத்திரங்கள் ஆகட்டும், இணை சொல்ல முடியாத அளவில் இப் படத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இள "டார்த் வேதர்" ஆக நடித்திருக்கும் ஹேய்டன் கிரிஸ்டன்சென் ஏமாற்றம் அளிக்கிறார். சரியான தேர்வு இல்லை. இதையெல்லாம் கண்டுக்காதீங்க என படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் நம்மை உட்கார வைத்து விடுகின்றன.

தவற விடக்கூடாத படம்.

Thursday, March 24, 2005

கருணைக் கொலை

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒட்டுமொத்த அமெரிக்காவே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. டெரி ஷியாவோ( Terri Schiavo) என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக மூளை செயலிழந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் persistent vegetative state என்ற நிலையை அடைந்து விட்டதால் அவர் இனி உயிர் பிழைத்து நலமடைய வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டனர்.

டெரியின் நிலைக்குக் காரணம், 15 வருடங்களுக்கு முன் அவருக்கு பொட்டாசியம் குறைவாக இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு, சிகிச்சையின் விளைவாக மாரடைப்பு நிகழ்ந்து, மூளையைப் பாதித்தது. அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே குழாய்கள் வழியேதான் - உணவு, தண்ணீர் அனைத்தும். பல சிகிச்சைகள் புரிந்தும் பலன் இல்லை.

டெரியின் கணவர் மைக், இதைக் காட்டிலும், 'கருணைக் கொலை'க்குத் தான் தயாராக இருப்பதாகவும், அதை தன் மனைவியும் ஒப்புக்கொள்வார் என அறிவித்து, அதை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்தார். அவர் அமர்த்திய மருத்துவர்களும், மற்றும் டெரியை சோதித்த மற்ற மருத்துவர்களும் அதையே வழிமொழிகின்றனர். நீதிமன்றமும் குழாய்களை அகற்ற சம்மதித்து உத்தரவிட்டது.

ஆனால், டெரி வழி உறவினர்கள்(தாய், தந்தை மற்றும் பலர்) ஓப்புக் கொள்ள மறுத்து மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம், அவர்களின் முறையீட்டை மறுத்துவிட்டது.

மார்ச்- 18 ம் தினம் குழாய்கள் அகற்றப்பட்டு, டெரி தற்சமயம் எந்த உணவுப் பொருளும் இன்றி, அவரின் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவை இந் நிகழ்வு இரண்டாகப் பிரித்திருக்கிறது. Persistent vegetative state அடைந்தவர் இவ்வாறு துண்பப்படுவதை விட அவரை உயிர் துறக்க வைக்கலாம் என ஒரு அணியும் மற்ற அணி, இது கொலைக்கு ஈடானது எனவும் வாதாடுகின்றன.

டெரியின் பெற்றோர் எடுத்த படங்களில், டெரி கண்களை சுழற்றிப் பார்ப்பது, புன்னகை செய்வதும் தெரிகின்றன. அதை வைத்து, அவர்கள் அமர்த்திய மருத்துவர்கள், தகுந்த சிகிச்சையில் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறனர். ஆனால் மற்ற மருத்துவர்களோ, இந்நிலையில் இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள், மேலும், அந்த படப்பிடிப்பில், மொத்தம் மூன்று மணி நேரத்தில் டெரியின் செயல்கள் சில விநாடிகளே என பதில் வாதம் புரிகின்றனர்.

அவர்கள் கருத்துப் படி, டெரிக்கு தற்சமயம் உணர்வு என்ற நிலையே இல்லை. அவருக்கு, வலி, கிலி, மகிழ்ச்சி, சோகம், தொடு உணர்வு அனைத்தும் அகன்றுவிட்டன. உணவு செலுத்தவில்லையென்றால், நாம் உணர்வது போல் பசியோ, தாகமோ எடுத்தாலும், அவரால் அதை உணர்வு பூர்வமாக அறிய இயலாது. அவரின் உடல், இதனால், நீரிழந்து, அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பார்-ஆனால் வலி என்ற உணர்வின்றி- என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ஜெப் புஷ் குழாய்களை அகற்றுவது தவறு என சட்டம் இயற்ற, நீதி மன்றமோ அச் சட்டம் செல்லாது என தடை செய்துவிட்டது. டெரியின் பெற்றோரும், தற்சமயம் அரசாங்கத்தையே நம்பி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் உயிலில் ஒருவர், இம் மாதிரி தனக்கு நிகழ்ந்தால் மற்றவர் என்ன செய்யலாம் என எழுதி வைக்கலாம். டெரி அவ்வாறு எழுதவில்லை. அவரின் கணவர் மைக் அவரின் காப்பாளர்(Guardian) நிலையில் இருப்பதால் நீதிமன்றம் அவரின் முடிவை ஆதரிக்கிறது. இவ்வழக்கின் விளைவால், பல அமெரிக்கர்கள் உயில் எழுத ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்க அதிபர், டெரியின் வாழ்வை நீட்டிப்பதை ஆதரித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற முடிவைப் பற்றி எதுவும் கூறவில்லை.

டெரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனைகள்.

வலைப்பதிவுகள்:
http://civilliberty.about.com/cs/humaneuthinasia/a/bgTerry.htm
http://abcnews.go.com/Health/Schiavo/story?id=531907&page=1
http://www.cnn.com/2005/LAW/03/18/schiavo.brain-damaged/

Thursday, February 10, 2005

மனத்துக்கண்?

இதுவரை எந்த முரண்பாடான செய்திக்கும், தனிப்பட்ட வலை நண்பர்களின் கருத்துக்களையும் விமர்சனம் செய்ததில்லை. ஆனால் மதி அவர்களின் வலைப்பதிவைப் படித்த பின் இதை எழுதத் தோன்றியது.

பா. ராகவன் நான் மதிக்கும் எழுத்தாளர். பல எண்ணங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் முறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் அவரின் இச்செய்கை என்னைக் குழப்புகிறது. அதைவிட வருத்தம் தந்தது, அவரின் மறுமொழி: 'எல்லா தமிழ் பதிப்பகங்களும் செய்கின்றன'(!?&^). இதை அவர் சொல்லியிருக்கும் பட்சத்தில், பொறுப்பான எழுத்தாளரின் பொறுப்பற்ற பதில். கருணாநிதி பாணி. உங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறதே என கேள்வி எழுப்பினால், எம்.ஜி.யார் ஆட்சி என்ன வாழ்ந்தது, கேரளாவைப் பார் என உளறி, பேச்சைத் திசைதிருப்புவதற்கும், பாராவின் பதிலுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால், கருணாநிதி சொன்னால் உளறல், பாரா பேசினால் வருத்தமே.

பத்ரியின் பொறுப்பான பதில் ஆறுதல்.

Saturday, February 05, 2005

போரும் அதன் விளைவுகளும்

வியட்நாம் போர் அமெரிக்கர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒன்று. செப். 11 வரை வியட்நாம் என பேச்சை எடுத்தாலே அமெரிக்கர்களுக்கு, விமானங்களில் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள்தான் நினைவுக்கு வரும். அப்போரில் ஈடுப்பட்ட பல வீரர்கள் இன்னும் மனதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் அப்போரை நினைத்து மறுகிக் கொண்டிருக்க ஊடகங்கள் அவ்வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றன? பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் முடிந்த அளவு இது ஒரு வேண்டாத நிகழ்வாகவே பார்க்கின்றன.


புனைக்கதாசிரியர்களும் தயக்கத்துடனே அனுகுகிறார்கள். கதாநாயகர்கள், வீர சாகசம் அல்லது கொடூரச் செயல் புரிவதற்கு, அவர்கள் வியட்நாமில் இருந்தது ஒரு காரணமாகக் காட்டப்படுவதுண்டு(நான் படித்தப் புத்தகங்களில்).


ஹாலிவுட் இரு துருவங்களாக பிரிந்து, ஒரு பகுதி நம் இந்தியப் பட பாணியில் பட இறுதிக் காட்சியில் 'வெற்றி நமதே' என கூவினாலும், மக்கள் மற்றொரு பகுதியினரின் பார்வையைத்தான் ஒப்புக்கொள்கிறார்கள். புதின எழுத்தாளர்களின் 1970- 80 களின் கதைகளில் கதை மாந்தர்களின் செயல்களை வசதியாக போரின் மேல் பழிப் போட்டார்கள்.


இக்கட்டுரை ஹாலிவுட் பார்வைப் பற்றி...


முதலில் மசாலாப் படங்கள் - Sylvester Stallone(First Blood series) மற்றும் Chuck Norris(Missing In Action series) ஆகியோரின் படங்கள் உளவியல் ரீதியாக போரின் முடிவில் அக்கறைக் கொள்ளாமல் முன் வரிசைக் கும்பலுக்கு தீனி போடும் வகையில் அமைந்திருக்கும். 90 - 100 நிமிடங்களுக்கு வரலாற்றை சுத்தமாக மறந்துவிட்டு வியட்நாமியர்கள் அடிபடுவதைக் காணலாம்.


வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை :
1) Platoon : Oliver Stoneன் பார்வையில் வியட்நாமில் அமெரிக்க வீரர்களின் நடவடிக்கைகள். படம் மக்களை உலுக்கியது. படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூச்சல்கள் எழுந்தன. அது எப்படி ஒரு அமெரிக்கர் நம் இராணுவத்தையே கெட்டவர்களாகக் காண்பிக்கப் போகும் எனக் கேட்கப்பட்டது. கதைப்படி, டெய்லர் போர் முனையில் பல முரண்பாடுகளைக் காண்கிறான். இராணுவம் இரண்டாகப் பிரிந்துக் கிடக்கிறது(வெள்ளையர், வெள்ளையர் அல்லாதவர் என). தாக்கச் சொல்லி உத்தரவு வரும்போதெல்லாம் வேண்டா வெறுப்பாக கடமையைச் செய்கிறார்கள்.


டெய்லரின் படைப்பிரிவில் இரண்டு அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சார்ஜென்ட் பார்ன்ஸ்(Barnes) ஈவு இரக்கம் பாராதவன். எதிரிகள் கொல்லப்பட வேண்டியவர்களே என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை- பெண்கள், முதியவர், குழந்தைகள் உட்பட. மற்றொருவன் சார்ஜென்ட் எலியாஸ்(Elias). இவனும் கொலை செய்ய தயங்காதவன், ஆனால் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளவன். இவர்கள் இடையில் டெய்லரின் பயணம் தொடர்கிறது. பல கேள்விகள் எழுகின்றன. இந்த யுத்தம் எதற்கு, தேவையா போன்றவைகளுக்கு மத்தியில் வியட்நாமியர்களின் தாக்குதலையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நடக்கும் நிகழ்ச்சிகள், டெய்லரை, இந்த யுத்தம், அமெரிக்கருக்கும், வியட்நாமியருக்கும் அல்ல, அமெரிக்கருக்கும், அமெரிக்கருக்கும் தான் என முடிவுக்குத் தள்ளுகிறது. இறுதியில், டெய்லரின் சுயப் பரிசோதனை பார்ன்ஸால் சோதிக்கப்படும்போது, பார்ன்ஸ் தன்னுடைய பிம்பத்தை டெய்லரிடம் காண்கிறான்.


இப்படம் எவ்வளவு எதிர்ப்பை சந்தித்ததோ, அதே அளவு வரவேற்பையும் பெற்றது. Oliver Stone சிறந்த இயக்குனராக ஆஸ்கர் விருதைப் பெற்றார். தவற விடக்கூடாத படம்.


Platoonல் நடித்தவர்கள்:

Charle Sheen - Taylor
Tom Berenger - Sgt. Barnes
Willen Dafoe - Sgt. Elias


அடுத்து Born on Fourth of July மற்றும் Deer Hunter பற்றிய எனது பார்வை.


Friday, January 28, 2005

நலமா?

கொஞ்ச நாட்களாக எழுதத் தோன்றவில்லை. நிச்சயம் உலகத்துக்கு நஷ்டமில்லை. அலுவலகமும், வீட்டில் என் நான்கு மாத மகளும், படிக்கவேண்டிய புத்தகங்களும் நேரத்தை நிறைத்து விடுகிறார்கள். படிக்க வேண்டிய வலைப் பதிவுகளைத் தவற விடுவதில்லை. ஓய்ந்த நேரத்தில் ராஜ் கௌதமனின் 'சிலுவைராஜ் சரித்திரம்' படித்துக் கொண்டிருக்கிறேன். போதாக்குறைக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், New England Patriots விளையாடும் ஆட்டங்கள் தவறாமல் - மனைவியின் 'உருப்படமாட்டே' என்ற ஆசிர்வாதத்துடன் - நேரத்தை அபகரிக்கின்றன.

பத்ரியின் வலைப்பதிவு சிறந்தப் பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இவரின் புத்தகக் கண்காட்சி வருணனைகள் அருமை. அன்னாரின் பல பதிவுகளை தொகுத்துப் புத்தகமாகப் போடலாம்(பத்ரி: என்னுடையதுதான் முதல் யோசனை என்றால் எனக்கு 40% ராயல்டி தரவேண்டும் :) ).

'மூக்கு' சுந்தர் இந்த வார நட்சத்திரம். 'கிரீடப் பதிவு' என ஒன்றை தேர்ந்தெடுத்து, பதிந்தது நல்ல யோசனை. கொஞ்ச நாள் தமிழ்( தண்ட) திரைக்காவியங்களை மூட்டைக் கட்டிவிட்டு பல நிகழ்வுகளை அவரின் சூடான பாணியில் தர பணிவுடன் வேண்டுகிறேன்(எனக்கு டின் கட்டப் போறாரு :) ). சமீபத்தில், இவரின் பழையப் பதிவான 'இந்திய அமைதிபடை' பற்றிய பதிவில் சுமார் 136 பின்னூட்டங்களைப் படித்தது, பல வகையான சிந்தனைகளைக் கிளப்பியது.

ஈழநாதனின் பழையக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். மனிதர் தொடாத விஷயங்கள் இல்லை. தொடர்க. ரோசா வசந்தின் கட்டுரைகள், பல ஆரோக்கியமான வாதங்களை எழுப்புகின்றன. சுனாமி தொடர்பாக ரஜினி ராம்கியின் உதவிகள், நேர்முகக் குறிப்புகள் நெகிழ்த்தின.

யாருப்பா சொன்னது வலைப்பதிவுகள் எல்லாம் '15 நிமிடப் புகழ்' என்று?

திண்னையில் ஞாநி, இனி தன் கட்டுரைகள் வரா எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார். என் கருத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எழுத்தாளர்கள் பொதுவில் எழுதும்போது, எதிர்வினை(கள்) வரத்தான் செய்யும். ஒருவர் தன்னை தவறாகப் புரிந்த்தற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால், தினமும் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மன்னிப்புக் கேட்பதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கும். திண்ணை ஒரு திறந்தப் மின் பத்திரிக்கை. இதில் ஞாநியும் மற்றவர்களும் ஆரோக்கியமாக வாதம் புரிந்து நட்புடன் முடித்திருக்கலாம். இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நேசகுமாரும் இஸ்லாமிய நண்பர்களும் முடிந்த வரை மரியாதையாகத்தான் விவாதம் நடத்துகிறார்கள்(என்று நினைக்கிறேன்).

இப்போதைக்கு அவ்வளவுதான். இனியாவது, வாரத்துக்கு ஒரு முறை பதிவு செய்ய ஆசை.

Wednesday, December 29, 2004

Delhi

குஷ்வந்த் சிங்கின் Delhi சமீபத்தில் படித்தேன். குஷ்வந்த் சிங்கின் எழுத்துக்கள் என்னைக்க் கவர்வதற்கு காரணங்கள் இரண்டு. ஆங்கிலத்தின் சுஜாதா இவர். சொல்ல வந்த விஷயத்தை எளிமையாக பாமரனுக்கும் புரியும் ஆங்கிலத்தில் சொல்வது. இந்திய வரலாற்றை ஒட்டிய நாவல்களை எழுதுவது(Train to Pakistan, I shall Not hear the Nightingale).

Delhi அவரின் தலைசிறந்த நாவல். 20 வருடங்கள செலவழித்து எழுதப்பட்டது. கதையின் நாயகன்/நாயகி டெல்லி நகரம். ஆண்மையும், பெண்மையும் இனைந்த ஒரு உருவம். இதை ஒரு சுற்றுலா வழிகாட்டி(சீக்கியர்) மூலம் அதன் சொரூபத்தைக் காட்டுகிறார். வழிகாட்டியின் தோழியாக ஒரு அரவாணி. Delhi நகரத்தைப் போன்றவள்.

கதையானது, 1265, சுல்தான்கள்(பால்பன், கில்ஜி போன்றவர்கள்) காலத்தில் தொடங்கி, 1984 அக்டோபர் 30-ந் தேதியோடு முடிகிறது. நகரம் சந்தித்த மகோந்நதங்கள், தோல்விகள், சோகங்கள், துரோகங்கள், போர்கள், அபத்தங்கள், கொடூரங்கள் அந்த அந்த காலப் பாத்திரங்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

குஷ்வந்த் சிங்கின் ஆங்கிலம் வாசகனோடு உரையாடும். நான்கு வார்த்தைகளுக்கு ஒரு வார்த்தை அகராதியைத் தேடி ஓட வைக்காது. ஆனால் அவரின் எழுத்துக்கள் உணர்வுப் பூர்வமானது. மிகச் சிலருக்கே அது சாத்தியமானது. வரலாற்றைப் படித்து அதை அப்படியே வாந்தி எடுக்காமல் கதை மாந்தரின் உணர்வுகள் ஊடாக வரலாற்றைப் போதிப்பது சிங்கின் கை வந்த கலை.

ஒரு உதாரணம் : காந்தியை வேவுப் பார்ப்பதற்கு ஆர். எஸ். எஸ். தலைவர் ஒரு தொண்டரை அமர்த்துகிறார். காந்தியின் செயல்கள் அத்தொண்டருக்குப் பிடிப்பதில்லை. இத்தொண்டர் பிரிவினையில் தன் தங்கையை பாகிஸ்தானியர்களிடம் பறி கொடுத்து, பின் ஆர். எஸ். எஸ்-ல் சேர்ந்து, ஒரு இஸ்லாமியரை அவர் கடை வாசலில் கொன்றவர். காந்தி இஸ்லாமியர்களிடம் காட்டிய பரிவை வெறுப்பவர். 1948 ஜனவரி 30-ம் நாள் காந்தி சுடப்படும்போது, அத்தொண்டர் அருகே இருக்க நேர்கிறது. சுடப்பட்டவுடன் காந்தி சரிய, அத்தொண்டர் சுட்டவனைப் பிடித்து நையப் புடைக்கிறார். எழுதக் கூசும் வார்த்தைகளால் அவனை அருச்சித்து விட்டு, ஒரு இடத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பவரை மக்கள் காரணம் கேட்க,

தொண்டர் : 'என் தந்தை இறந்து விட்டார்.'
மக்கள் : 'நல்ல மகன் நீ...எப்படி இறந்தார், உடல்நிலை சரியில்லையா?'
தொண்டர் : 'இல்லை...அவரைக் கொன்றது நானே!'

இதைப் போன்ற பாத்திரங்களின் செயல்களை அங்கங்கே படிப்பவரின் மனதில் கேள்விகளைக் கேட்க வைக்கும் எழுத்துக்கள் இந்நாவலை மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும்(நான் படித்தது மூன்றாவது முறை).

நாவல், பல பாத்திரங்கள் மூலம் வரலாற்றைப் பார்க்கிறது. முஸாதி லால் சுல்தான்களையும், தைமூர் இந்தியப் படையெடுப்பையும், ஒரு சீக்கியர் ஔரங்கசீப் பற்றியும்(குரு கோபிந்த் சிங்கின் தலை சீவப்படும் நிகழ்ச்சி உட்பட), பின் ஔரங்கசீப் தன் வரலாற்றைப் பதிவு செய்வது, 1857 சிப்பாய் கலகத்தில் நடந்த அட்டூழியங்கள்(ஆங்கில மற்றும் இந்திய தரப்பு- சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' கதையும், இதைப் பற்றிப் பேசியிருக்கிறது), பின் ஆங்கில ஆட்சியில் புது தில்லி எவ்வாறு உருவானது, சுதந்திரக் கலவரங்கள் தொடங்கி, இந்திராகாந்தி கொலையின் இனக் கலவரங்களில், கதை நாயகரின் வீட்டுக் காவலரை தீயிட்டுக் கொளுத்துவதோடு முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, தில்லி நகரம் ஒரு சிறுபான்மை இன மக்களின் முகத்தைக் கொண்டுள்ளது. தனக்கென்ற ஒரு தனித் தன்மையுடன் வாழ்வதிலிருந்து, எந்தக் கலகம் என்றாலும் அடி வாங்குவது வரை.

முகலாயர்கள் சரித்திரம் எனக்குப் பிடிக்கும் என்பதால் தில்லி நகரமும் பிடித்தமானது. செங்கோட்டையில் என் மாமா ஒரு அழகான மண்டபச் சுவர்களில் பொத்தல்களைக் காட்டி அங்கிருந்தவை உயர்ந்தக் கற்கள் என வருத்தப்பட்டப்போது, காரணம் இல்லாமல் யார் மீதோ கோபம் வந்தது.

தில்லி நகரம் உங்களுக்குப் பிடித்தால், இந்தப் புத்தகமும் பிடிக்கும்.

Monday, December 06, 2004

தமிழ் படங்களின் பாடல் காட்சிகள்

அந்தப் படத்தின் பாடல்கள் இனிமை. இளையராஜாவின் கற்பனை சிறகடிக்க எஸ்.பி.பி, எஸ். ஜானகி உயிரைக் கொடுக்க, பாடலாசிரியர்(கள்) தமிழை ஆள, ஒலி நாடா வந்த அன்றே பாடல்கள் முதல் இடத்தைப் பிடிக்க படம் பார்க்கச் சென்ற இரசிகர் கூட்டம் பாடல் காட்சிகள் வந்த உடன், டீக்கடையை நோக்கி ஓடுகிறார்கள். பாடல்கள் காட்சியாக்கப் பட்ட விதம் அப்படி.

பரினாம வளர்ச்சிகள் அடைந்தவை இவ்வுலகில் எத்தனையோ. அமீபாவிலிருந்து, தி.மு.க. கடவுளை வணங்க(யாரும் பார்க்காதபோது?) ஆரம்பித்தது வரை. பாடல் காட்சிகள் திரைப்படத்தின் முதுகெலும்பு. ஹாலிவுட்டிலும் பாடல்கள் இருந்ததுண்டு. 1970களில் கூட John Travolta தோல் சட்டை அணிந்து Grease -ல் கதாநாயகியைப் பார்த்து காதல் சொட்ட(வெய்யிலால் வேர்வையும் சொட்ட) பாடிக் கொண்டிருப்பார். அதன் பிறகு, மக்கள் பாடல்கள் வைத்தால் சீட்டைக் கிழிப்போம் என மிரட்ட பாடல்கள் விடைப் பெற்றன.

ஆனால் தமிழில் பாடல்கள் இல்லையென்றால் திரையரங்குகளை நாய் கூடத் தீண்டாது. நான் பாடல்களுக்கு எதிரியல்ல. அவை படமாக்கப்படும் விதத்திற்கு. 'நினைவெல்லாம் நித்யா' நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். 'கல்யாண பரிசு' சிரீதர் எடுத்த படம். பாடல்கள் ஒவ்வொன்றையும் இளையராஜா இழைத்திருந்தார். படம் ஓடவில்லை. நான் பார்க்கவில்லை. ஆனால் ஆச்சரியப்பட்டேன். பாடல்களுக்காகவாவது ஓடியிருக்கவேண்டும்( உ-ம். 'பயணங்கள் முடிவதில்லை') .

ஒரு 'ஓளியும் ஓலியும்' நிகழ்ச்சியில் 'நினைவெல்லாம் நித்யா' வின் முத்திரைப் பாடலான 'பனிவிழும் மலர்வனம்' பார்த்தபோதுதான், நம் இரசிகர் பெருமக்கள் ஏன் இப்படத்தைத் துரத்தினார்கள் என தெரிந்தது. அற்புதமான இசையை, ஒரு ரெக்கார்ட் டான்ஸ் நிலைக்குப் படமாக்கியிருந்தார்கள். இடுப்பை வளைத்து நாயகனும், நாயகியும் ஆடிக்கொண்டிருக்க எனக்கு கையெல்லாம் ஆடியது, TVயை நிறுத்த.

இது ஒரு பானை சோற்றில் ஒன்று. பலமுறை சூடு கண்ட பிறகு(என் தாயார், 'உனக்குப் பட்டாத் தாண்டா தெரியும்' என்பார் :) ), இப்போதெல்லாம், எனக்குப் பிடித்த நல்ல பாடல்களை திரையில் காண்பதில்லை. ஒலி நாடாவிலோ, குறுந்தகட்டிலோ பதிவு செய்து, கேட்கிறேன்.

Tuesday, November 30, 2004

The Dark Art of Interrogation

சுஜாதாவின் இந்த வார 'கற்றதும், பெற்றதும்' பகுதியில் The Dark Art of Interrogation என்ற கட்டுரையைப் பற்றி எழுதியிருந்தார். வலையில் அதை படிக்க http://www.law.washington.edu/courses/junker/B515_Au04/Documents/Dark_Art.pdf

Monday, November 29, 2004

ஒரு மூன்றாம் உலகக் குடிமகனின் அமெரிக்கக் குழப்பங்கள்

- எங்க பக்கத்து நாட்டை கொம்பு சீவி விட்டு,
- உலகப் போலிஸ்காரராக நடந்து கொண்டு,
- எங்க நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்து,
- உங்க நாட்டுக்கு வர பல கண்டிஷன் போட்டு,
- எங்க நாட்டைப் பற்றி உங்க தொலைக்காட்சியில் தாறுமாறாகப் போட்டு,
- உங்க முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை எங்கள் மேல் திணிக்க முயன்று

கொழுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாடே...

யாருப்பா அது, நாளைக்கு எனக்கு அமெரிக்க தூதரகத்திலே, H1-B விசா இன்டர்வியு, காலையிலே சீக்கிரம் எழுந்திரிக்கணும், அலாரம் வைக்கிறியா?

Monday, November 22, 2004

86 வாருடங்கள் - இறுதிப் பகுதி

கர்ட் ஷில்லிங்(Curt Schilling) என்ற பந்து வீச்சாளர் Red Sox அணியில் இனைந்தபோது, Yankeesஐ வெற்றிக் கொள்வதே எனது இலட்சியம் எனக் கூறினார். அப்போது, யாரும் இவரின் சொல்லை முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், Yankees இவரை இத்தொடரின் முதல் ஆட்டத்தில் மூன்று இன்னிங்ஸிலேயே, 6 ஓட்டங்களைக் குவித்து, உள்ளே அனுப்பிவிட்டனர். மற்றும் வலது முழங்காலில் அடிப்பட்டதால் தொடரில் இனிமேல் இவரால் விளையாட இயலாது என மருத்துவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். எந்த காரணத்திற்காக பாஸ்டன் வந்தாரோ அந்தக் கனவு நிறைவேறவில்லை.

ஆறாவது ஆட்டம் துவங்கும் நாளில் செய்திக் கேட்டவர்களுக்கு இனிய ஆச்சரியம். கர்ட் ஷில்லிங் அன்று பந்து வீசப்போவதாக அறிவிப்பு வெளியானது. பாஸ்டன் மக்கள் இன்றோடு தொடர் முடிந்து விடும் என முடிவுக் கட்டினர். ஆனால் பிண்ணனியில் நடந்தது வேறு.

நடக்க முடியாத நிலையில் கர்ட் ஷில்லிங் மருத்துவர்களை அணுகி, தன்னை பந்து வீசும் அளவிற்கு தயார் செய்யும்படி கேட்க மருத்துவர்களும், முழ்ங்காலில் சிதைந்த பகுதிகளை தைத்து எப்படியோ அவரை தயார் படுத்தி விட்டனர். ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்தே, அவரின் வலது காலிலிருந்து, இரத்தம் உறை வழியே சிந்த ஆரம்பித்தது. இது மேலும் Red Sox வீரர்களை வெறியோடு விளையாட வைத்தது. ஏழு இன்னிங்சில் ஒரு ரன் கூடக் கொடுக்காமல் ஷில்லிங் விடைப் பெற்றப்போது, பேஸ்பால் சரித்திரத்தில் இந்த ஆட்டம் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இதுவரை தொடர்ந்த Yankeesன் நம்பிக்கை சரிய ஆரம்பித்தது. இரண்டு இன்னிங்ஸில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாஸ்டன் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. ஏழாவது போட்டியில் Yankeesஐக் காணவில்லை. David Ortiz 2 ரன்களையும் Jonny Damon 4 ரன்களையும் அடித்து ஆட்டத்தை பாஸ்டன் வசம் இழுத்து விட, சரித்திரப் பிரசித்திப் பெற்ற இத்தொடரை 4 - 3 என்ற கணக்கில் பாஸ்டன் வென்றது.

இத்தொடருக்குப் பின் யார் எதிர் அணியானாலும் Red Soxஐ வெற்றிப் பெறுவது சிரமமே. St. Louisக்கும் அதுவே உண்மையானது. உலகக் கோப்பையை பாஸ்டன் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று 86 வருடங்களாக மக்கள் கண்ட கனவை நிஜமாக்கியது.

இத்தொடரை எழுத ஆரம்பித்தபோது, கட்டுரையை இன்னும் சரியாக அமைத்திருக்கலாம் என தோன்றியது. ஆனால் மனதில் தோன்றியதை அப்படியே வார்த்தைகளில் எழுதிவிட்டேன். இன்னும் சிறிது காலம் சென்று இந்தப் பதிவைப் படித்தால் மீண்டும் அந்த நாட்களை இனிமையாக நினைக்கத் தோன்றும். இப்பதிவைப் படித்தவர்களுக்கு ஒரு பள்ளிக் கட்டுரையைப் படித்த உணர்வு ஏற்பட்டால், நானே பொறுப்பு!.

Tuesday, November 16, 2004

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

தற்சமயம் சி. புஸ்பராஜாவின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' படித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கை இனக் கலவரத்தைப் பற்றி நான் படிக்கும் முதல் புத்தகம். இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை நான் பா. ராகவனைப் போலத்தான். இது வரை ஒரு யோக்கியமான கருத்துக்கள் எதையும் படித்ததில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும், அயோக்கியத்தனமான அரசியல் விளையாட்டுக்களிலும், ஊடகங்களின் விட்டேத்தியான அனுகுமுறையும் இப் பிரச்சினையின் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில்லை.

இவ்வகையில் சி. புஸ்பராஜாவின் புத்தகம் என்னளவில் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். முன்பு படிக்க முயன்ற William McGowan ன் Only Man Is Vile: The Tragedy of Sri Lanka ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் திமிர்த்தனமான பார்வையில் இருந்ததால், பாதிக்கு மேல் அப்புத்தகத்தை படிக்க இயலாமல் தூக்கி எறிந்துவிட்டேன். அனிதா ப்ரதாப் எழுதிய Island of Blood: Frontline Reports from Sri Lanka, Afghanistan and Other South Asian Flashpoints புத்தகமும் சொந்த கதை பேசி ஆயாசம் கொள்ளவைத்தது.

நான் படித்தவரை, சி. புஸ்பராஜா வரலாற்றை மிகத் தெளிவான முறையில் எழுதிச் சென்றுள்ளார். படித்து முடித்த பின்பு பல கேள்விகள் எழும். அப்போது விரிவாக எழுதுவேன்.

இவரைப் போன்று மற்றவர்களும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனரா? அவை பற்றிய விவரங்களைத் நண்பர்கள் தந்தால், உதவிகரமாக இருக்கும்.

Friday, October 29, 2004

86 வருடங்கள் - II

இரு அணிகளும் இறுதி இன்னிங்ஸில் மோதிக் கொண்டிருக்கட்டும், இவ் விளையாட்டின் சில விதிகளைப் பார்ப்போம்.

- ஒவ்வொரு அணியிலும் தலா 10 வீரர்கள்.
- பந்து வீச்சாளர் ஒருவரே. சூழ்நிலை சரியில்லை என்றால் மாற்றப்படுவார்.
- கிரிக்கெட் 20 - 20 போல ஒரு அணி ஒரு இன்னிங்ஸ் முடித்தவுடன் அடுத்த அணி விளையாட வரும்.
- ஒரு இன்னிங்ஸ் மூன்று வீரர்கள் ஆட்டமிழந்தவுடன் முடிவுக்கு வரும்.
- ஒவ்வொரு வீரரும் மூன்று வாய்ப்புகள் பெறுவார். அவை 'ஸ்ட்ரைக்' என அழைக்கப்படும்.
- 'ஸ்ட்ரைக்'-ஆ இல்லையா என்பதை மட்டையாளர் பின்னால் நிற்கும் நடுவர் முடிவு செய்வார். அவரால் முடிவு செய்ய இயலவில்லை என்றாலோ, அல்லது, எதிரணி விக்கெட்கீப்பர்(catcher) கேட்டாலோ, மூன்றாவது புள்ளியில்(third base) நிற்கும் நடுவர் சொல்வதே இறுதியானது.
- மட்டையாளர் தூக்கி அடித்த பந்தை எதிரணி வீரர் பிடித்தால், மட்டையாளர் ஆட்டமிழப்பார்.
- ஒரு புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு செல்வது இரண்டு வகைப்படும் :
1) மட்டையாளர் catch பிடிக்கப்பட்டால் catch பிடித்த பின்புதான், மற்ற புள்ளிகளில் உள்ள வீரர் முன்னேற முடியும்.
2) மட்டையாளர் ஆட்டமிழக்காமல் பந்தை அடித்து விட்டால், அவரும் மற்ற புள்ளிகளில் உள்ள அவரணி வீரர்களும் தங்கள் புள்ளிகளிலிருந்து மற்ற காலியான புள்ளிகளை நோக்கி ஓடலாம். நான்காவது புள்ளியை அடையும் வீரர், அதாவது, சதுரத்தில் ஒரு சுற்று வந்துவிட்டால் அவரும் அவர் அணியும் ஒரு ஓட்டம் பெறுவர். இதனிடையே எதிரணியினர் இவர்கள் புள்ளியில் இல்லாத போது பந்தால் தொட்டுவிட்டால், அந்த வீரர் ஆட்டமிழப்பார்.

படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

ஆட்டத்திற்கு வருவோம்.

முன்பே Yankees மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதைப் படித்தோம். அமெரிக்க பேஸ்பால் சரித்திரத்தில் எந்த அணியும் மூன்றில் தோற்று பின் மீதி நான்கையும் வென்றதில்லை. மேற்கொண்டு படிக்கும் முன், இதை நினைவில் கொள்வது நலம்.

Yankees நான்காவது போட்டியில் 4 - 3 ரன்கள் என்ற கணக்கில் முன்னனியில் இருந்தது. Red Sox வீரர் Bill Mueller அடித்த பந்து தரையில் பட்டு எழும்பிச் செல்ல, அதற்குள் Dave Roberts ஒரு சுற்று முடித்து விட, ஆட்ட ஸ்கோர் சமமானது. Yankees இதை எதிர்ப்பார்க்கவில்லை. அரங்க இரசிகர்களும் இப்போது பைத்தியம் பிடித்தது போல் கரகோஷம் செய்ய(போட்டி நடந்தது பாஸ்டனில்), Red Sox வீரர்கள் புது உத்வேகம் பெற்று 'இரண்டில் ஒன்று' என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆட்ட ஸ்கோர் சமமானதால் 9 இன்னிங்ஸுக்கு மேல் தொடர்ந்தது. ஆட்ட விதிப்படி இனி இரண்டாவதாக ஆட வரும் அணி, சம ஸ்கோரை உடைத்துவிட்டால், வெற்றி பெற்றுவிடும். பாஸ்டன் இரசிகர்கள் இது வரை வேண்டாத தெய்வங்களையெல்லாம் துனைக்கு அழைத்தனர்.

12-வது இன்னிங்ஸ் வரை Yankees-யால் ஓட்டம் எடுக்க இயலவில்லை. இந்த இன்னிங்ஸில் இரண்டாவதாக விளையாட வந்த Red Sox- இன் David Ortiz தன்னை நோக்கி வந்த வேகப்பந்தை தூக்கி அடிக்க அது மைதானத்தை விட்டு வெளியே சென்று இரசிகர்கள் அமரும் இடத்தில் விழுந்தது.

அன்று பாஸ்டன் இரசிகர்களின் உற்சாகக் கூச்சல் New york வரைக் கேட்டிருக்கும்.

Yankees வீரர்களோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த போட்டியில் வென்று தொடரை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தனர். விதி வேறொன்று நினைத்தது. மறு நாள் போட்டியிலும் David Ortiz அணி வெற்றிக்கு உதவினார். இப்போதுதான் Yankees கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தனர்.

எனினும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. காரணம், தொடர் New york நகரத்துக்கு மாறப்போகிறது. இரசிகர் கூட்டம் அவர்கள் பக்கம். வென்று விடலாம். எந்த அணியும் தொடர்ந்து நான்கு வெற்றிகளை எடுக்கப்போவதில்லை.

ஆனால் ஒரு நிகழ்ச்சி Red Sox அணியினரை இறுதி வரை பார்த்து விடுவது என்ற உறுதியைக் கொடுத்தது.

(தொடரும்)

Thursday, October 28, 2004

86 வருடங்கள்

86 வருடங்கள்...

3 தலைமுறைகள் 'ஏன்?' என ஒவ்வொரு அக்டோபர் மாதமும் ஏக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வி. Boston Redsox பேஸ்பால் அணியின் நேற்றைய மகத்தான வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். மேலே செல்வதற்கு முன்...

பேஸ்பால் அமெரிக்காவின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்று. கிரிக்கெட்டின் ஒன்று விட்ட சகோதரன். இரு அணியினருக்கும் தலா 9 இன்னிங்க்ஸ். ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் மூன்று வீரர் வரை ஆட்டம் இழக்கலாம். நான்கு புள்ளிகளை(base) ஒரு வீரர் கடந்தால் ஒரு ஓட்டம். கிரிக்கெட்டில் 6 ரன்கள், இங்கே 1 முழு ரன்(Home Run). அப்போது, மற்ற மூன்று புள்ளிகளில் எத்தனை வீரர் இருந்தனரோ அவ்வளவு ஓட்டங்கள்.

அமெரிக்காவில் இந்தியாவைப் போல் மாநில அணிகள் கிடையா. பணம் படைத்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் அணி அமைத்துக் கொள்வார்கள். பல மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும். இறுதிப் பந்தயங்கள் ஒரு போர்க்களம் போல நடைபெறும். சில அணிகள் பரம எதிரிகளாக மோதுவர்.

Boston Redsox-ம், Newyork Yankees-ம் அவ்வாறான மனநிலை கொண்ட அணிகள். நம் இந்திய, பாகிஸ்தானிய அணி மோதலைப் போன்றவை. சமயங்களில் அடிதடியில் முடியும். Newyork Yankees 27 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது(அமெரிக்க/கனடா அணிகள் விளையாடுவதை 'உலகக் கோப்பை' என அழைத்துக் கொள்வர் :) ) . Boston Redsox இறுதியாக வென்றது 1918-ல். Yankees -ம் அதே பகுதியில் இருப்பதால் ஒருவரை வென்றே மற்றவர் அடுத்த சுற்றுக்கு செல்ல இயலும். இதுவரை Yankees கையே மேலோங்கி இருந்தது. இந்த வருடம் வரை.

World Seriesக்குச் செல்லும் போட்டியில் இவ்வருடமும் Yankees -ம், Redsox -ம் மோத ஆரம்பித்தன. மொத்தம் ஏழு போட்டிகள். நான்கு போட்டிகளில் வெல்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் மூன்றுப் போட்டிகளில் Yankees மிகச் சுலபமாக வென்று, நான்காவது போட்டியிலும் இறுதி இன்னிங்ஸில் மூன்று Redsox வீரர்கள் அவுட் ஆனால் போதும் என்ற நிலையில்தான் 'நமக்கும் மேலே ஒருவரடா' என்ற வரி உண்மையாக ஆரம்பித்தது.

(தொடரும்)

Tuesday, October 05, 2004

ஜெயலலிதா-கரண் தாப்பர்

பத்ரியும், ராஜாவும் மிகச் சரியாக இந்த நேர்காணலில் பெரும்பாலானவர்களின் பார்வையைப் பதிவு செய்திருந்தனர். ஜெயலலிதாவிடம் முதிர்ச்சியை எதிர்பார்ப்பது கலைஞரிடம் 'கடவுள் இருக்கிறார்' என வாக்குமூலம் வாங்குவது போலத்தான். அதைப் பற்றி நான் பேசி இப்பதிவை நிரப்பப் போவதில்லை. என்னுடைய கேள்வியெல்லாம், தாப்பரின் சில கேட்காத/தேவையில்லாத கேள்விகளைப் பற்றித்தான்.

கேட்காத கேள்விகள்
--------------------------
1) ஜெ-வின் அரசு ஊழியர்கள் மீது தொடுத்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி.
2) அவரின் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி.
3) பாஜக அரசைக் கவிழ்த்து விட்டு, பின் இந்தத் தேர்தலில் அவர்களுடன் கூட்டு வைத்த முரண்பாடு
4) முக்கியமான தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வது.
இன்னும் பல...

தேவையில்லாத கேள்விகள்
-----------------------
1) சோதிட நம்பிக்கை
2) நல்ல நேரம் பார்ப்பது.
3) ஜெ-வின் பெயரில் ஒரு 'a' சேர்த்தது.

இவர் பேட்டி கண்டது, ஒரு முதலமைச்சரை. தனியொரு பெண்மணியை அல்ல. ஜெ-வும் இவர் பாட்டுக்கு ஆடினார் என்று தான் சொல்லவேண்டும். ஊடகங்கள் ஏன் ஜெ-வின் செயல்களைத் தவறாகப் பார்க்கின்றன என்ற கேள்விகளுக்கு, ஜெ-வின் பதில்கள் சிறு பிள்ளைத்தனமாக(சினிமாத்தனமாக?) இருந்தன. இனிமேல் ஜென்மத்துக்கும் எந்த பேட்டிகளுக்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ரசித்தது
-------
1) பொறியில் மாட்டிய ஜெ-வை கரண் சீண்டிய விதம்.
2) ஜெ-வின் குறுக்கீடுகளை சட்டை செய்யாமல் கரண் தன் கேள்விகளிலேயே குறியாக இருந்தது.